Thursday, September 5, 2013

ஆண்டுக்கணக்கான பிரச்சனைகளுக்கு அடுத்தடுத்து தீர்வு!


கடந்த ஓராண்டாக மாதந்தோறும் சாயி வரதராஜனுடன் சீரடிக்குச் செல்லும்போதெல்லாம் இது தொடர்பாக பிரார்த்தனை வைத்துவிட்டு வருவேன். இதன் பலனாக கோவிந்தராஜ், பாண்டியன் ஆகிய ஆசிரியர்கள் மூலம் பிள்ளையார் சுழி போடப்பட்டு, எனது தம்பி டாக்டர் முனுசாமி மூலமும் விதை விதைக்கப்பட்டது.
நான் பிறந்த மண் மாத்தூர் என்ற கிராமம். கள்ளக் குறிச்சிக்கு அருகில் சுமார் பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ளது. நான் படித்த பள்ளி எட்டாம் வகுப்பு வரை இருந்தது. ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றும் உயர் நிலைப் பள்ளியாக ஏன் மாறவில்லை என்ற என்னுடைய ஏக்கம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது.
பலவித தாமதம், தடங்களுக்குப் பிறகு பாபா அதை அனுமதியாக்கி பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கினார்.
ஆனால் அடுத்த கட்டமாக இடம் தேர்வு செய்யப்படவேண்டும். வந்துள்ள தலைமை ஆசிரியர் மிகவும் துடிப்புள்ள இளைஞ்ர், ஆர்வமுள்ளவர். அவரின் தொடர்ந்த முயற்சியால் இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டும் ஏதோ சில காரணங்களால் மீண்டும் தாமதமாகிக் கொண்டே இருந்தது.
எனினும் மனம் தளராத தலைமை ஆசிரியர் மீண்டும் மூன்றாவது முறையாக ஆலோசனைக் கூட்டத்தைக்கூட்டினார். நான் அன்று காலை பாபாவின் முன் உட்கார்ந்து பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தேன். உத்தரவு கொடுத்தால்தான் கூட்டத்திற்குச் செல்வேன். இந்தக் கூட்டம் கடைசிக் கூட்டமாக இருக்கவேண்டும். கூட்டத்தில் எந்த வித நெருக்கடியும் இல்லாமல் முடிவு எட்டப்பட்டு, பள்ளிக்கு இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும் இடம் வாங்குவதற்கு உண்டான வழி முறைகளையும் எனக்கு கோடிட்டு காட்ட வேண்டும் என வேண்டினேன்.
மேலும் மற்றொரு பிரார்த்தனையாக எனது மகனுக்குப் பார்த்துள்ள பெண் வீட்டார் மற்றும் இதர வகையறாக்கள் மூலம் ஏற்படும் முட்டுக்கட்டைகள், குழப்பமான சூழல்கள் அனைத்தும் இன்றே முடிவுக்கு வரவேண்டும். அப்போதுதான் என்னால் இயங்க முடியும் என வேண்டினேன். எனக்கு பாபாவிடமிருந்து சமிக்ஞை பூ மூலம் வந்தது. அதன் பிறகே கூட்டத்திற்குப் புறப்பட்டேன்.
இந்த முறை ஏற்கனவே வராதவர்கள் அதுவும் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வந்திருந்தனர். முடிவாய் இடமும் தேர்வு செய்யப்பட்டது.
எனது தம்பி தனது பங்களிப்பாக ஒரு லட்ச ரூபாயை உடனடியாகக் கொடுத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அடுத்தடுத்து பிறரும் தங்களது பங்களிப்பை வழங்குவதற்காக உறுதி அளித்து அன்றே இடம் கொடுப்பவரிடம் ஒரு தொகையை கொடுத்து ஒப்புதல் பத்திரம் தயாராகிவிட்டது.
பாபாவால் இந்தக் காரியம் இனிதே நிறைவேறியது.
இதேபோல, எனது மகனுக்குப் பார்த்த பெண் வீட்டாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். மற்ற பிரச்சினைகளும் சு்கமாக முடிவுக்கு வந்தன.
ஆண்டுக்கணக்காக இழுத்தடிக்கும் பிரச்சினைகளுக்கும் அடுத்தடுத்து பாபாவிடம் வேண்டினால் ஒவ்வொன்றாகத்தீர்ந்து போகும் என்பது எனது அனுபவ உண்மையாக இருக்கிறது.

                             சாயி கலியன், நங்கநல்லு}ர், சென்னை

Wednesday, September 4, 2013

பாபாவிற்க்கு தங்க சில்லிம்!


மும்பையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத சாயி பக்தர் ஒருவர் பன்னிரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள சில்லிம் குழாயை சீரடிக்கு அளித்திருக்கிறார்.
வழக்கமாக பாபா மண்ணால் ஆன சில்லிம் குழாயில் புகையிலையைத் திணித்துப் புகைப்பிடிக்கப் பயன்படுத்துவார். பல்லக்குத் தூக்கும் வியாழக் கிழமைகளில் வெள்ளியால் ஆன சில்லிம் குழாயை இதுவரை சன்ஸ்தான் நிர்வாகம் பயன்படுத்தி வந்தது.

தற்போது, பக்தரின் அன்பளிப்பாக வந்துள்ள இந்த தங்க சில்லிம் குழாய், இனி வியாழக் கிழமைகளில் பயன்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tuesday, September 3, 2013

நான் உன் வீட்டிற்க்கு வருவேன்!


என் பெயர் உமாதேவி பழனி வேலன். விழுப்புரம் இராமகிருஷ்ணா பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றுகிறேன். எனக்குத் திருமணமாகி 22 வருடமாகிறது. என் கணவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றுகிறார். என் மகன் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு பயில்கிறான். என் மகள் 12 - ம் வகுப்பு எழுதியுள்ளாள்.
என் பூஜை அறையில் 15 வருடத்திற்கு முன்னதாக பாபா வந்துவிட்டார். திரும்பவும் என் உறவினர் ஒருவர் சாயி பாபா வெள்ளை ஆடை அணிந்திருக்கும் படம் வாங்கி பூசை அறையில் வைத்தால் நல்லது என்றார்கள். பின்பு படத்திற்கு தேடியும் கிடைக்காத நிலையில், என் கணவர் சீரடிக்குச் சென்றிருந்தபோது அதுபோன்ற படம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதற்கு மேல் பாபாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
நாற்பது வயதுக்கு மேல்தான் பாபாவைப் பற்றி தெரியவந்தது. என்னுடன் பணிபுரியும் சாயி ராஜ லட்சுமி, பாபாவின் அற்புதங்கள் பற்றி நிறைய கூறுவார். எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் பாபாவைப் பற்றியே பேசுவோம். வியாழக்கிழமை வந்துவிட்டால் எங்கள் ஓய்வு அறையில் பாபா பிரசாதம், பாபா படம் ஆகியவற்றை தோழிகளுடன் பரிமாறிக் கொள்வது ஒரே மங்களகரமாக இருக்கும்.
என் வாழ்க்கையில் பாபா செய்த அற்புதங்கள்!
எனக்குத் தெரிந்த நகைக்கடைக்குச் சென்றிருந்தபோது அங்கு விலையுயர்ந்த பாபா சிலை அழகாக இருப்பதைப் பார்த்து விலை கேட்டேன்.
அப்போது வாங்குமுடியவில்லை. வாங்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனே வீடு வந்துவிட்டேன். உறக்கமும் வரவில்லை.
மறுநாள் என் பள்ளியில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் சாமி சிலைகள் இருந்தன. வேறு ஏதாவது சிலை இருக்கிறதா? எனக் கேட்ட போது, பாபா சிலை உள்ளது. வேண்டுமா? என்றார் கடைக்காரர்.
காட்டுங்கள் பார்க்கலாம்ள என்றேன்.
நகைக் கடையில் நான் பார்த்த அதே சிலை. விலையோ வெறும் நாற்பது ரூபாய் மட்டுமே.
நகைக் கடைக்காரர்,  ‘பாபா, சாதாரணமாக யார் வீட்டுக்கும் வரமாட்டார். வரவேண்டும் என்று இருந்தால் மட்டுமே வருவார் என்றார்.
இந்த வார்த்தைதான் என்னை தூங்கவிடாமல் செய்தது. உடனே நகைக்கடைக்காரருக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். மறுநாள் அதே கடைக்குச் சென்று வெள்ளியில் சிலை வாங்கினேன்.
அதற்கு மேடை இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, இரண்டு வருடத்திற்கு முன்னால் வாங்கிய மேடை ஒன்று குடையுடன் பொருந்தியுள்ளதைப் போன்று பாபா சிலைக்குப்பொருத்தமானதாக இருந்தது.
அதே கடையில் என் மகனுக்கு பாபா டாலர் வாங்கினேன். பின்புதான் சாயி ராஜலட்சுமி மூலம் பாபாவை தரிசிக்க ஆரம்பித்தேன். தினமும் என்னால் முடிந்ததை பாபாவுக்கு சமர்ப்பிப்பேன்.
என்னுடைய முதல் சாயி தரிசன யாத்திரை பாண்டிச்சேரியில் காலாப்பட்டு. பாண்டிச்சேரிப்பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் போக நினைத்துக் கேட்டதும் அவர்கள் அதிகமாகச் சொன்னார்கள். வேண்டாம், பேருந்திலேயே செல்கிறோம் என்று கூறிவிட்டோம். பின்பு எங்களை ஒரு ஆட்டோ பின் தொடர்ந்தது.
நீங்கள் பாபா கோயிலுக்குத்தானே செல்ல வேண்டும்? கொடுப்பதைக் கொடுங்கள் போதும், நான் அழைத்துச் செல்கிறேன் என்றாரே பார்க்கலாம். எனக்கு ஒரே ஆச்சரியம்-
அவர் ஆட்டோ டிரைவர் அல்ல, அந்த வடிவில் பாபாவே எங்களை கோயிலுக்கு முதன் முதல் அழைத்துச் செல்வது போலிருந்தது. ஆட்டோ ஓட்டியவர் ஒரு முஸ்லிம் சகோதரர். ஆட்டோவில் செல்லும்போது, மறுநாள் வகுப்பில் நடத்தவிருக்கும் பாடத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே போனேன்.
முகம்மது நபி பற்றிய செய்யுள் -  சீறாபுராணம் - முகம்மது நபிகள் வாழ்க்கையின் முன்கதைச்சுருக்கத்தைப் பற்றிய குறிப்பு எடுக்க நூலகம் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே அந்த ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
ஆட்டோ டிரைவர் ஒரு கைப்பிரதி ஒன்றைக்கொடுத்தார். அதை வாங்கியதும், என் கையெல்லாம் நடுங்கியது. காரணம், அந்தப் பேப்பரில் நபிகள் வாழ்க்கைக் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. என் முதல் பயணத்திலேயே பாபா என்னை இப்படி மகிழ்விப்பார் என நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.
நான் பாபாவிடம் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
பாபா என்னுடைய நியாயமான கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் காத்திருப்போம். உங்கள் கொள்கைகளையும், நீங்கள் கூறிய அறிவுரையின்படியும் வாழ்க்கையை நடத்திச்செல்வேன். அனைவரையும் சமமாக நேசிப்பேன்.
என் தோழிகளுக்கெல்லாம் உங்கள் திருவுருவை வாங்கித் தந்திருக்கிறேன், இனியும் அப்படியே தொடர்ந்து செய்வேன். யார் என் வீட்டிற்கு வந்தாலும் உபசரித்து, உங்கள் படத்தைக் கொடுத்து அனுப்புவேன். என் தோழிகளுக்குப் பரிசு கொடுக்க விரும்பினால் அவர்களுக்கு ஒரு வருட சந்தா தொகையை நானே செலுத்தி சாயி தரிசனம் புத்தகத்தை அளித்து மகிழ்விப்பேன்.
விரைவில் பெருங்களத்தூர் வருவேன்.
உங்களால் ஆன அற்புதங்கள் தொடரும் வகையில் உங்களுடன் தொடர்ந்து வருவேன்.. இப்படி வேண்டிக்கொண்டேன்.. பாபாவின் அருள் எப்போதும், எல்லோருக்கும் உண்டு என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குண்டு.
                                உமாதேவி பழனிவேலன்விழுப்புரம்

Monday, September 2, 2013

ஆனந்தமாய் இரு! பகுதி - 2



சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள். எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை வேண்டா.. கவலையே வேண்டா.. இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்....

(சத் சரித்திரம் அத் – 17 - 113)

கவலைகள் எல்லாம் அப்போதைக்கு வருத்தும் உச்சி வெயில் போன்றது. நேரம் சாயச்சாய அது தானாக மாறிவிடும். மாலை நேரத்தில் தென்றல் காற்று வீசி நீ அனுபவித்த கோடையின் வெப்பத்தை தணிவித்து உன்னை குளிரச்செய்துவிடும்.. விசுவாசமும் பொறுமையும் இரண்டு பைசாக்கள். இதையே பாபா கேட்பார்.
பொறுமையும் சகிப்புத் தன்மையுமே தைரியம். அதை தொலைத்து விடாதே. எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அது உன்னை கரை சேர்க்கும். (அத் - 19)
சகிப்புத் தன்மை பாவங்களையும் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் வெல்கிறது. விபரீத சம்பவங்களை சாமர்த்தியமாக தடுத்து, பயங்களை விரட்டிவிடுகிறது. சகிப்புத் தன்மை நற்குணங்களின் சுரங்கம். நல்ல எண்ணங்களின் ராணி. உறுதியான நம்பிக்கையே இந்த ராணியின் சகோதரி. இதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால் விவேகம் இல்லாமையால் குத்துகிற முள் உன்னைக் குத்தாது.
நீ மிகப் பெரிய அறிவாளியாக இருக்கலாம், பக்தையாக இருக்கலாம்.. உனது குருவும் மகாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆனால் உன்னிடம் என்ன இருக்கவேண்டும் தெரியுமா?
உன் கடவுள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும், சகித்துக் கொள்ளுதல் என்கிற துணிவான பலத்தையும் நீ பெற்றிருக்க வேண்டும்..
இதை பாபா செய்யாமல் தவிர்க்கிறார் என்றால் அதற்கு நிச்சயமான காரணம் இருக்கும்.. இதைவிட நல்லதைத் தர அவர் சித்தமாக இருக்கலாம். தந்து பிரச்சினைகள் வருவதை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என எண்ணிக் கொள்ள வேண்டும். அல்லது பாபா செய்வது உனக்குப் புரியாமல் இருக்கும்.
சாமாவை எடுத்துக்கொள்ளேன்.. மாலை ஏழு மணி அளவில் அவர் கையில் பாம்பு கடித்து விட்டது. மருத்துவமனைக்கு ஓடச் சொன்னார்கள்.
பாம்பு கடித்தால் மந்திரித்து விஷத்தை இறக்கும் வீரபத்திரர் ஆலயத்திற்குப் போகச் சொன்னார்கள்.. பாபாவின் உதியை எடுத்துக் கொள்ளச்சொன்னார்கள்.. ஆனால் அவர் நேராக பாபாவிடம் ஓடினார். அவரைப் பார்த்த பாபா், ‘ஏய்!, பாப்பானே! ஏறி வராதே! ஏறினால் தெரியும் சேதி.! போ! உடனே வெளியே போ!என்று கத்தினார்..
சாமாவுக்கு திகில்.. பாபாவின் செல்லப்பிள்ளை நான், என்னையே பாபா கைவிட்டுவிட்டாரே..இனி என் கதி என்னாவது என்று உன்னைப் போலத்தான் கலங்கினார். நம்பிக்கை இழந்தார்.
ஆனால் அவர் உன்னைப் போல பாபா மீது கோபித்துக்கொண்டு ஓடவில்லை. அங்கேயே நின்றார். பிறகு மசூதியில் ஏறி நடந்து பாபாவின் பாதங்களில் அமர்ந்தார்.
இந்த மசூதி மாயி கருணையே உருவானவள். ஒரு முறை இதில் காலை வைப்பவர்கள் உடனடியாக ஆரோக்கியத்தையும் ஷேமத்தையும் அடைகிறார்கள் என்று பாபா சொல்லியிருக்கவில்லையா?
அவர் சாமாவிடம் சொன்னார்..
தைரியத்தை இழந்துவிடாதே.. உன் மனதில் எந்த விதமான கவலையும் வேண்டாம். சுகமாகி விடும்.. கவலையை விடு.. பக்கீர் தயாளகுணம் உள்ளவர்.. உன்னை ரட்சிப்பார்..வீட்டிற்குப் போய் அமைதியாக இரு. வீட்டை விட்டு (பரிகாரம் தேடி) வேறு எங்கும் வெளியே போகாதே- தைரியமாக இரு.. கவலையை விட்டொழி, என் மீது நம்பிக்கை வை என்றார்.
அவருக்கு உதி கொடுத்ததாகத் தெரியவில்லை. வெறும் வார்த்தையால் சரி செய்தார். நம்முடைய பூர்வ ஜென்ம வினைகளை ரோகங்களாகவும், குஷ்டமாகவும், வலியாகவும், கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்க வேண்டும்.. எதை அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும்.
துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்க வேண்டும்.
ஆகவே.. இந்தத் துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்.. (அத் - 26)
உனது நன்மைக்காக அவர் அளித்துள்ள இந்த சோதனையை எதிர்த்து நிற்க, அவரது பாதங்களை சரணடை.. கவலையை விடு.. முகத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்..
இப்போதைய கவலைக்கான எந்தக் காரணமும் உன்னை எரிச்சலாக்காமலும், சோர்வடையச்செய்யாமலும், தனிமையில் விரக்தியில் தள்ளாமலும் பார்த்துக்கொள்..
அவரது நாமத்தை வாய் விட்டுச் சொல்ல ஆரம்பி... அடுத்த சுற்று உனக்காகக் காத்திருக்கிறது.. அது வெற்றியின் திறவுகோலாக உன்னிடம் தரப்படும். அதுவரை பொறுத்திரு..
                                                   சாயி வரதராஜன்

கூடுதல் ஞானம்!


கூடுதல் ஞானம் பெறுவது எப்படி?
                                ( ஆர். கே. பரஞ்சோதி, கோவை)
ஒவ்வொரு சூழலுக்கும் கடவுள் எதைக் கற்றுத் தருகிறான் என்பதை கண்டுகொள்ள கவனத்தை அதன் பால் முழுவதுமாக செலுத்தி வேண்டும்.
உதாரணமாக, பால்காரன் பால் கறக்கும் முன்பு கன்றை தாயின் மடியில் முட்டவிடுகிறான். பால் சுரக்க ஆரம்பித்த பிறகு, கன்றை இழுத்துக் கட்டி விட்டு, பால் கறக்கிறான். கன்றை இழுத்துக் கட்டி விட்டானே என பால் சுரப்பதை பசு அடக்காது.
இதைப் பார்த்து, நமக்கு செல்வம் சேர்வது நம் பிள்ளைகளுக்காக அல்ல, பிறருக்கு தருவதற்காக என உணரவேண்டும். பிறருக்காக நாம் சாப்பிட்டு சேர்க்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
எப்போதாவது தன்னைப் பெரிய ஆள் என நினைத்துக் கொள்ளும்போது, நிறைய ஆட்கள் நடமாட்டமுள்ள இடத்தில் ஓரமாக நின்று நமது முக்கியத்துவத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
அங்கே வந்து செல்லும் ஆயிரமாயிரம் மக்களில் நான் ஒரு துளி. என்னை கண்டு கொள்வார்.  யாருமில்லை. நான் எளியவனா?  ஏழையா? செல்வந்தனா?  உயர்ந்தவனா?  தாழ்ந்தவனா?  என யாருக்கும் எண்ணிப்பார்க்க நேரமில்லை. அப்படியிருந்தாலும் என் மீது இறைவன் தனிக்கவனம் செலுத்துகிறானே.. அது அவனது தனிப்பெரும் கருணை.

இதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்க வேண்டும். இப்படி தன்னைத்தான் ஒவ்வொன்றிலும் பொருத்தி உணரும்போது, அது ஞானமாகப் பேசப்படும்.

Sunday, September 1, 2013

ஆனந்தமாய் இரு! - பகுதி 1

சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள். எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை வேண்டா.. கவலையே வேண்டா.. இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்....

(சத் சரித்திரம் அத் – 17 - 113)

என்ன, சோர்ந்து உட்கார்ந்து விட்டாயா?
பாபா மீது பயங்கரமான கோபம் வருமே!
இருக்காதா பின்னே!
அவரைத்தானே நம்பியிருந்தேன். அவர் என்னை கைவிட்டு விட்டாரே! எல்லோரும் என்னை கேலி செய்யும் அளவுக்கு என் பிரார்த்தனைகளை அவர் கேட்கவே இல்லையே! அவர்களுக்கு பாபாவின் மகிமையைச்சொன்னேன்,  அவர் சரியாகிவிட்டார், இவருக்குச் சொன்னேன்.. இவரும் சரியாகிவிட்டார். எல்லோரும் நான் சரியாகிவிடுவேன் என நினைத்துக்கொண்டிருக்க, இவர் என்னை கைவிட்டு விட்டாரே!
சாயிராம்!  உங்களுக்குத் தெரியாது..
இவரை எப்படியெல்லாம் நேசித்தேன் தெரியுமா?
இவருக்கு நைவேத்தியம் வைக்காமல் சாப்பிட்டதே கிடையாது.
இவர் பெயரை உச்சரிக்காமல் எங்கும் சென்றதும் கிடையாது.. அப்படியிருந்தும் என்னை இவர் கண்டுகொள்ளவேயில்லை.. அதனால்தான் இவர் மீது எனக்குக் கோபம்...
இப்படித்தானே நீங்கள் என்னிடம் சொல்லப் போகிறீர்கள்..
அம்மா, எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடக்கிறது. அவருக்கு எது பிடிக்குமோ அதை அவர் செய்கிறார்.. உனக்கு உடனே நடந்துவிட்டால் கர்வம் பிடிக்கும், அல்லது கஷ்டம் உன்னை தொடர்ந்து வந்து பிடிக்கும் என்பதற்காகக்கூட, அவர் உனது வேண்டுதலை தள்ளி வைத்திருக்கலாம். ஏற்ற காலத்தில் உனக்கு வேண்டியதை அவர் நிச்சயமாகச் செய்வார்.
சத்சரித்திரம் கூறுகிறது்:  பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பதற்காகவே அவர் அவதரித்தார் என்று- (அத் - 30)
அப்படியிருக்க, அவர் உன்னை கைவிடுவாரா? உனக்கு எது தேவை கிடையாதோ அதை வேண்டாம் என்று தள்ளிவிட்டார் அல்லது தள்ளி வைத்து இருக்கிறார். அவ்வளவே!
இமைப்பொழுது உன்னைக் கைவிடுவதைப்போல காட்டிக்கொள்வார். ஆனால், தனது நீடித்த கருணையால் உன்னை சேர்த்தணைத்து உன் மனோரதங்களைப் பூர்த்தி செய்வார்.
சாயியின் மீது பக்தி கொண்டுள்ள நீ, அவரைப்பற்றி மட்டுமே பெருமையாக நினைக்க வேண்டுமே தவிர, உனது பக்தியைப் பற்றிக்கூட பெருமைப் பட்டுக் கொள்ளக்கூடாது.
இந்தக் கஷ்டம் என்பது வரும், போகும். ஆனால் உன் பக்தி என்றைக்கும் மாறாதிருக்க வேண்டும் என்றே பாபா விரும்புவார். உலக விஷயங்கள் மீது நீ தீவிர பற்று கொள்ளக் கூடாது,
சின்ன சின்ன விஷயங்களும் உன்னை பாதிக்காமல் நீ பார்த்துக் கொள்ள வேண்டும். கிடைப்பதை விரும்ப வேண்டும். ஒருவேளை கிடைக்காமல் போனால் அதற்காக வருந்தக்கூடாது.. எப்போதும் உன் முகம் மலர்ந்த முகமாக இருக்க வேண்டும் என்பதையே பாபா விரும்புவார். சுருக்கமாகச்சொன்னால், ஒரு குழந்தையின் மனநிலையும் அதனுடைய முகத்தின் பிரகாசமும் உன்னிடம் இருக்கவேண்டும். அப்போது தான் நீ அவரது அருளுக்குப் பாத்திரமாவாய். இப்படியிருந்தால்தான் நீ பாபா பக்தை. மாறாக எதையேனும் கேட்டு கிடைக்காவிட்டாலோ, தாமதம் ஆனாலோ.. வேறு விஷயத்திற்காகவோ உன் முகத்தைச் சோர்ந்து போக விட்டுக் கொண்டிருந்தால் நீ பக்தையல்ல, பக்தையாக மாற இன்னும் முயற்சி செய்து கொண்டிருப்பவள் என்றே பொருள்.
சதா கட்டுப்பாடற்ற மனத்தை உடையவன் என்றுமே திருப்தியடையமாட்டான். அவன் பரம பதத்தையும் அடையமுடியாது, சம்சாரச் சுழலில் இருந்தும் தப்பிக்க முடியாது..
நீ உனது தேவைகளுக்காக ஏங்குவது என்பது ஒரு வித தடங்கல். அதை தகர்த்து எறிய முற்படு.எதையும் அவர் பொறுப்பில் விட்டு விட்டு மகிழ்ச்சியாக இரு..
சுக்லாம் பரதரம் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம்... என்பதில் பிரசன்ன வதனம் என்பது என்ன?  மலர்ந்த முகம். பகவானின் முகம் மலர்ச்சியாகவே இருக்கும். நீ பக்தையாவது உண்மையாக இருந்தால் இப்படி மலர்ச்சியாகவே எப்போதும் இருக்கவேண்டும்.
பாபா சொன்னார்: ஆனந்தமே பிரம்மம்.. இதை நான் உறுதியுடன் அறிகிறேன்.
சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள். எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை வேண்டா.. கவலையே வேண்டா.. இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்.... (சத் சரித்திரம் அத் – 17 - 113)

எதற்காக

இதன் தொடர்ச்சியினை நாளை காண்போமா?

குருவால் தெளிவு வரும்!

குருவைக் கண்டதும் தெளிவு பிறந்துவிடும் என்கிறார்களே, அது உண்மையா? எப்படி?
                              (ஆர்.கே. வாசுதேவன், சென்னை - 15)

மாணிக்க வாசகர் என்ற நாயனார் இருந்தார். அரிமர்த்தன பாண்டியன் என்ற ராஜாவுக்கு முதல் அமைச்சரான அவர், குதிரை வாங்க மன்னரிடம் பணம் பெற்றுக்கொண்டு, சோழ நாடு நோக்கிச் சென்றார். திருப்பெருந்துறை என்ற ஊரில் குருநாதர் வடிவில் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த சிவ பெருமானைப்பார்த்தவுடனே ஞானம் அடைந்து விட்டார் மாணிக்க வாசகர். திருப்பெருந்துறை சிவன் கோயிலுக்கு பணத்தை செலவிட்டு, நரிகளை குதிரைகளாக்கி மன்னரிடம் கொண்டு வந்தார் என்பார்கள்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
என்ற பழம்பாடலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குரு என்பவர் இறைவன் அல்லது இறைவனின் அம்சம் என்பதை உணரவேண்டும். அப்போது தெளிவு வந்துவிடும்.
கண்கள் இருந்து குருவாகிய ஒருவரைப் பார்க்கும்போதே மனதிற்குள் அமைதியுடன், தெளிவு பிறக்கும். அவரைப் பார்க்க முடியாவிட்டால் அவரது திருப்பெயரைச் சொன்னாலே தெளிவு வந்துவிடும்.
குருவைப் பார்த்து அவரோடு இருக்கிற நேரத்தில் அவர் கூறுகிற உரைகளை காதுகொடுத்து கேட்டால் தெளிவு பிறக்கும். நாம் விடைபெற்றுச் சென்ற பிறகும் அந்த குருவின் உருவத்தை தியானம் செய்து வந்தாலும் நமக்குத் தெளிவு வந்துவிடும்.

இன்றைக்கு குரு வழிபாடு செய்கிற பக்தர்கள் மேன்மையடைவதற்கு முக்கியக் காரணம் தங்களை அறியாமல் மேலே சொன்ன அனைத்தையும் அவர்கள் பின்பற்றுவதுதான். பாபா கோயிலுக்குப் போகிறேன் என்றால், பாபாவை பார்ப்பதும், அவர் நாமம் சொல்வதும், அவர் உறுதி மொழிகள் அடங்கிய சத்சங்கத்தைக் கேட்பதும், பாபாவை தியானிப்பதும் ஆகிய இவை அவரது உண்மையான பக்தனுக்கு தெளிவைத் தருகின்றன. மனதில் வேறு ஒன்றை நினைத்துக்கொண்டு குருவின் காலடியிலேயே குடும்பம் நடத்தினாலும் எந்தப் பலனும் இல்லை.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...