என் பெயர் உமாதேவி பழனி வேலன். விழுப்புரம் இராமகிருஷ்ணா
பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றுகிறேன். எனக்குத் திருமணமாகி 22 வருடமாகிறது.
என் கணவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றுகிறார். என் மகன் எம்.பி.பி.எஸ்.
இரண்டாம் ஆண்டு பயில்கிறான். என் மகள் 12 - ம் வகுப்பு எழுதியுள்ளாள்.
என் பூஜை அறையில் 15 வருடத்திற்கு முன்னதாக பாபா
வந்துவிட்டார். திரும்பவும் என் உறவினர் ஒருவர் சாயி பாபா வெள்ளை ஆடை அணிந்திருக்கும்
படம் வாங்கி பூசை அறையில் வைத்தால் நல்லது என்றார்கள். பின்பு படத்திற்கு தேடியும்
கிடைக்காத நிலையில், என் கணவர் சீரடிக்குச்
சென்றிருந்தபோது அதுபோன்ற படம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதற்கு மேல் பாபாவைப்
பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
நாற்பது வயதுக்கு மேல்தான் பாபாவைப் பற்றி தெரியவந்தது.
என்னுடன் பணிபுரியும் சாயி ராஜ லட்சுமி, பாபாவின் அற்புதங்கள் பற்றி நிறைய கூறுவார். எங்கள் பள்ளியில் பணிபுரியும்
ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் பாபாவைப் பற்றியே பேசுவோம். வியாழக்கிழமை வந்துவிட்டால்
எங்கள் ஓய்வு அறையில் பாபா பிரசாதம், பாபா படம் ஆகியவற்றை தோழிகளுடன் பரிமாறிக் கொள்வது ஒரே மங்களகரமாக
இருக்கும்.
என் வாழ்க்கையில் பாபா செய்த அற்புதங்கள்!
எனக்குத் தெரிந்த நகைக்கடைக்குச் சென்றிருந்தபோது அங்கு
விலையுயர்ந்த பாபா சிலை அழகாக இருப்பதைப் பார்த்து விலை கேட்டேன்.
அப்போது வாங்குமுடியவில்லை. வாங்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனே
வீடு வந்துவிட்டேன். உறக்கமும் வரவில்லை.
மறுநாள் என் பள்ளியில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்
சாமி சிலைகள் இருந்தன. வேறு ஏதாவது சிலை இருக்கிறதா? எனக் கேட்ட போது, ”பாபா சிலை உள்ளது. வேண்டுமா?” என்றார் கடைக்காரர்.
’காட்டுங்கள்
பார்க்கலாம்ள’ என்றேன்.
நகைக் கடையில் நான் பார்த்த அதே சிலை. விலையோ வெறும்
நாற்பது ரூபாய் மட்டுமே.
நகைக் கடைக்காரர், ‘பாபா, சாதாரணமாக யார் வீட்டுக்கும் வரமாட்டார்.
வரவேண்டும் என்று இருந்தால் மட்டுமே வருவார்’
என்றார்.
இந்த வார்த்தைதான் என்னை தூங்கவிடாமல் செய்தது. உடனே
நகைக்கடைக்காரருக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். மறுநாள் அதே கடைக்குச்
சென்று வெள்ளியில் சிலை வாங்கினேன்.
அதற்கு மேடை இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தபோது,
இரண்டு வருடத்திற்கு முன்னால் வாங்கிய
மேடை ஒன்று குடையுடன் பொருந்தியுள்ளதைப் போன்று பாபா சிலைக்குப்பொருத்தமானதாக
இருந்தது.
அதே கடையில் என் மகனுக்கு பாபா டாலர் வாங்கினேன்.
பின்புதான் சாயி ராஜலட்சுமி மூலம் பாபாவை தரிசிக்க ஆரம்பித்தேன். தினமும் என்னால் முடிந்ததை
பாபாவுக்கு சமர்ப்பிப்பேன்.
என்னுடைய முதல் சாயி தரிசன யாத்திரை பாண்டிச்சேரியில்
காலாப்பட்டு. பாண்டிச்சேரிப்பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் போக நினைத்துக்
கேட்டதும் அவர்கள் அதிகமாகச் சொன்னார்கள். வேண்டாம், பேருந்திலேயே செல்கிறோம் என்று கூறிவிட்டோம். பின்பு எங்களை
ஒரு ஆட்டோ பின் தொடர்ந்தது.
’நீங்கள்
பாபா கோயிலுக்குத்தானே செல்ல வேண்டும்? கொடுப்பதைக் கொடுங்கள் போதும், நான் அழைத்துச் செல்கிறேன்’ என்றாரே பார்க்கலாம். எனக்கு ஒரே ஆச்சரியம்-
அவர் ஆட்டோ டிரைவர் அல்ல, அந்த வடிவில் பாபாவே எங்களை கோயிலுக்கு முதன் முதல் அழைத்துச்
செல்வது போலிருந்தது. ஆட்டோ ஓட்டியவர் ஒரு முஸ்லிம் சகோதரர். ஆட்டோவில் செல்லும்போது,
மறுநாள் வகுப்பில் நடத்தவிருக்கும் பாடத்தைப்
பற்றி நினைத்துக்கொண்டே போனேன்.
முகம்மது நபி பற்றிய செய்யுள் - சீறாபுராணம் - முகம்மது நபிகள் வாழ்க்கையின்
முன்கதைச்சுருக்கத்தைப் பற்றிய குறிப்பு எடுக்க நூலகம் செல்ல வேண்டும் என்று
நினைத்துக்கொண்டே அந்த ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
ஆட்டோ டிரைவர் ஒரு கைப்பிரதி ஒன்றைக்கொடுத்தார். அதை வாங்கியதும்,
என் கையெல்லாம் நடுங்கியது. காரணம்,
அந்தப் பேப்பரில் நபிகள் வாழ்க்கைக்
குறிப்பு எழுதப்பட்டிருந்தது. என் முதல் பயணத்திலேயே பாபா என்னை இப்படி
மகிழ்விப்பார் என நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.
நான் பாபாவிடம் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். ’
பாபா என்னுடைய நியாயமான கோரிக்கைகளை நீங்கள்
நிறைவேற்றுவீர்கள் என்று நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் காத்திருப்போம். உங்கள் கொள்கைகளையும்,
நீங்கள் கூறிய அறிவுரையின்படியும்
வாழ்க்கையை நடத்திச்செல்வேன். அனைவரையும் சமமாக நேசிப்பேன்.
என் தோழிகளுக்கெல்லாம் உங்கள் திருவுருவை வாங்கித்
தந்திருக்கிறேன், இனியும்
அப்படியே தொடர்ந்து செய்வேன். யார் என் வீட்டிற்கு வந்தாலும் உபசரித்து, உங்கள் படத்தைக் கொடுத்து அனுப்புவேன். என்
தோழிகளுக்குப் பரிசு கொடுக்க விரும்பினால் அவர்களுக்கு ஒரு வருட சந்தா தொகையை நானே
செலுத்தி சாயி தரிசனம் புத்தகத்தை அளித்து மகிழ்விப்பேன்.
விரைவில் பெருங்களத்தூர் வருவேன்.
உங்களால் ஆன அற்புதங்கள் தொடரும் வகையில் உங்களுடன்
தொடர்ந்து வருவேன்.. இப்படி வேண்டிக்கொண்டேன்.. பாபாவின் அருள் எப்போதும், எல்லோருக்கும் உண்டு என்பதில் அசைக்கமுடியாத
நம்பிக்கை எனக்குண்டு.
உமாதேவி
பழனிவேலன், விழுப்புரம்
No comments:
Post a Comment