சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள். எப்பொழுதும்
ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை வேண்டா.. கவலையே வேண்டா..
இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்....
(சத் சரித்திரம் அத் – 17 - 113)
கவலைகள் எல்லாம் அப்போதைக்கு வருத்தும் உச்சி வெயில்
போன்றது. நேரம் சாயச்சாய அது தானாக மாறிவிடும். மாலை நேரத்தில் தென்றல் காற்று
வீசி நீ அனுபவித்த கோடையின் வெப்பத்தை தணிவித்து உன்னை குளிரச்செய்துவிடும்..
விசுவாசமும் பொறுமையும் இரண்டு பைசாக்கள். இதையே பாபா கேட்பார்.
பொறுமையும் சகிப்புத் தன்மையுமே தைரியம். அதை தொலைத்து
விடாதே. எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அது உன்னை கரை சேர்க்கும். (அத் -
19)
சகிப்புத் தன்மை பாவங்களையும் துன்பங்களையும்
எதிர்ப்புகளையும் வெல்கிறது. விபரீத சம்பவங்களை சாமர்த்தியமாக தடுத்து, பயங்களை விரட்டிவிடுகிறது. சகிப்புத் தன்மை நற்குணங்களின்
சுரங்கம். நல்ல எண்ணங்களின் ராணி. உறுதியான நம்பிக்கையே இந்த ராணியின் சகோதரி. இதை
கெட்டியாகப் பிடித்துக்கொண்டால் விவேகம் இல்லாமையால் குத்துகிற முள் உன்னைக்
குத்தாது.
நீ மிகப் பெரிய அறிவாளியாக இருக்கலாம், பக்தையாக இருக்கலாம்.. உனது குருவும் மகாபலம்
படைத்தவராக இருக்கலாம். ஆனால் உன்னிடம் என்ன இருக்கவேண்டும் தெரியுமா?
உன் கடவுள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும், சகித்துக் கொள்ளுதல் என்கிற துணிவான பலத்தையும்
நீ பெற்றிருக்க வேண்டும்..
இதை பாபா செய்யாமல் தவிர்க்கிறார் என்றால் அதற்கு
நிச்சயமான காரணம் இருக்கும்.. இதைவிட நல்லதைத் தர அவர் சித்தமாக இருக்கலாம். தந்து
பிரச்சினைகள் வருவதை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என எண்ணிக் கொள்ள வேண்டும். அல்லது
பாபா செய்வது உனக்குப் புரியாமல் இருக்கும்.
சாமாவை எடுத்துக்கொள்ளேன்.. மாலை ஏழு மணி அளவில் அவர்
கையில் பாம்பு கடித்து விட்டது. மருத்துவமனைக்கு ஓடச் சொன்னார்கள்.
பாம்பு கடித்தால் மந்திரித்து விஷத்தை இறக்கும் வீரபத்திரர்
ஆலயத்திற்குப் போகச் சொன்னார்கள்.. பாபாவின் உதியை எடுத்துக் கொள்ளச்சொன்னார்கள்..
ஆனால் அவர் நேராக பாபாவிடம் ஓடினார். அவரைப் பார்த்த பாபா், ‘ஏய்!, பாப்பானே! ஏறி வராதே! ஏறினால் தெரியும் சேதி.!
போ! உடனே வெளியே போ!’ என்று கத்தினார்..
சாமாவுக்கு திகில்.. பாபாவின் செல்லப்பிள்ளை நான்,
என்னையே பாபா கைவிட்டுவிட்டாரே..இனி என்
கதி என்னாவது என்று உன்னைப் போலத்தான் கலங்கினார். நம்பிக்கை இழந்தார்.
ஆனால் அவர் உன்னைப் போல பாபா மீது கோபித்துக்கொண்டு
ஓடவில்லை. அங்கேயே நின்றார். பிறகு மசூதியில் ஏறி நடந்து பாபாவின் பாதங்களில்
அமர்ந்தார்.
இந்த மசூதி மாயி கருணையே உருவானவள். ஒரு முறை இதில் காலை
வைப்பவர்கள் உடனடியாக ஆரோக்கியத்தையும் ஷேமத்தையும் அடைகிறார்கள் என்று பாபா சொல்லியிருக்கவில்லையா?
அவர் சாமாவிடம் சொன்னார்..
’தைரியத்தை
இழந்துவிடாதே.. உன் மனதில் எந்த விதமான கவலையும் வேண்டாம். சுகமாகி விடும்..
கவலையை விடு.. பக்கீர் தயாளகுணம் உள்ளவர்.. உன்னை ரட்சிப்பார்..வீட்டிற்குப் போய்
அமைதியாக இரு. வீட்டை விட்டு (பரிகாரம் தேடி) வேறு எங்கும் வெளியே போகாதே-
தைரியமாக இரு.. கவலையை விட்டொழி, என்
மீது நம்பிக்கை வை’ என்றார்.
அவருக்கு உதி கொடுத்ததாகத் தெரியவில்லை. வெறும்
வார்த்தையால் சரி செய்தார். நம்முடைய பூர்வ ஜென்ம வினைகளை ரோகங்களாகவும், குஷ்டமாகவும், வலியாகவும், கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்க வேண்டும்.. எதை அனுபவிக்க
வேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும்.
துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்க
வேண்டும்.
ஆகவே.. இந்தத் துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்..
(அத் - 26)
உனது நன்மைக்காக அவர் அளித்துள்ள இந்த சோதனையை
எதிர்த்து நிற்க, அவரது பாதங்களை சரணடை..
கவலையை விடு.. முகத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்..
இப்போதைய கவலைக்கான எந்தக் காரணமும் உன்னை
எரிச்சலாக்காமலும், சோர்வடையச்செய்யாமலும்,
தனிமையில் விரக்தியில் தள்ளாமலும்
பார்த்துக்கொள்..
அவரது நாமத்தை வாய் விட்டுச் சொல்ல ஆரம்பி... அடுத்த
சுற்று உனக்காகக் காத்திருக்கிறது.. அது வெற்றியின் திறவுகோலாக உன்னிடம் தரப்படும்.
அதுவரை பொறுத்திரு..
சாயி வரதராஜன்
No comments:
Post a Comment