குருவைக் கண்டதும் தெளிவு பிறந்துவிடும் என்கிறார்களே,
அது உண்மையா? எப்படி?
(ஆர்.கே.
வாசுதேவன், சென்னை - 15)
மாணிக்க வாசகர் என்ற நாயனார் இருந்தார். அரிமர்த்தன
பாண்டியன் என்ற ராஜாவுக்கு முதல் அமைச்சரான அவர், குதிரை வாங்க மன்னரிடம் பணம் பெற்றுக்கொண்டு, சோழ நாடு நோக்கிச் சென்றார். திருப்பெருந்துறை
என்ற ஊரில் குருநாதர் வடிவில் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த சிவ
பெருமானைப்பார்த்தவுடனே ஞானம் அடைந்து விட்டார் மாணிக்க வாசகர். திருப்பெருந்துறை
சிவன் கோயிலுக்கு பணத்தை செலவிட்டு, நரிகளை குதிரைகளாக்கி மன்னரிடம் கொண்டு வந்தார் என்பார்கள்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
என்ற பழம்பாடலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குரு
என்பவர் இறைவன் அல்லது இறைவனின் அம்சம் என்பதை உணரவேண்டும். அப்போது தெளிவு
வந்துவிடும்.
கண்கள் இருந்து குருவாகிய ஒருவரைப் பார்க்கும்போதே
மனதிற்குள் அமைதியுடன், தெளிவு
பிறக்கும். அவரைப் பார்க்க முடியாவிட்டால் அவரது திருப்பெயரைச் சொன்னாலே தெளிவு
வந்துவிடும்.
குருவைப் பார்த்து அவரோடு இருக்கிற நேரத்தில் அவர்
கூறுகிற உரைகளை காதுகொடுத்து கேட்டால் தெளிவு பிறக்கும். நாம் விடைபெற்றுச் சென்ற
பிறகும் அந்த குருவின் உருவத்தை தியானம் செய்து வந்தாலும் நமக்குத் தெளிவு
வந்துவிடும்.
இன்றைக்கு குரு வழிபாடு செய்கிற பக்தர்கள்
மேன்மையடைவதற்கு முக்கியக் காரணம் தங்களை அறியாமல் மேலே சொன்ன அனைத்தையும் அவர்கள்
பின்பற்றுவதுதான். பாபா கோயிலுக்குப் போகிறேன் என்றால், பாபாவை பார்ப்பதும், அவர் நாமம் சொல்வதும், அவர் உறுதி மொழிகள் அடங்கிய சத்சங்கத்தைக் கேட்பதும், பாபாவை தியானிப்பதும் ஆகிய இவை அவரது உண்மையான
பக்தனுக்கு தெளிவைத் தருகின்றன. மனதில் வேறு ஒன்றை நினைத்துக்கொண்டு குருவின்
காலடியிலேயே குடும்பம் நடத்தினாலும் எந்தப் பலனும் இல்லை.
No comments:
Post a Comment