Thursday, September 12, 2013

வியாழக்கிழமை விரதம்



வியாழக்கிழமை விரதம்

வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் சாயி பக்தர்கள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் விரத பூஜைகள் அனுசரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



வீட்டில் விரதம் இருக்க முடியாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த பூஜையினை மையத்தில் செய்து கொள்ளலாம். அன்னதானத்தினை இங்கேயே விநியோகமும் செய்யலாம். விரதமிருக்க விரும்பும் தாய்மார்கள், நமது பிரார்த்தனை மையத்தினை அணுகலாம்.



விபரங்களுக்கு:



ஸ்ரீ சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையம்

கல்கி தெரு, புதுபெருங்களத்தூர்

சென்னை  600 063.

அலைபேசி எண்

9094033288

9841203311

Wednesday, September 11, 2013

உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்! பகுதி 3


நேற்றைய தொடர்ச்சி....

பதினாறாவது அத்தியாயத்தில் பிரம்ம ஞானம் கேட்ட ஒருவரைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது்
வாழ்நாள் முழுவதும் செல்வம் சேர்ப்பதிலேயே மூழ்கிப் போனவர், தம்மை பக்தனாக நினைத்துக் கொள்கிறவர், உலக சம்பத்துகள் நிறைந்தவர். அவரிடம் ஆன்ம சக்தியிருந்தால் அதை வைத்து மேலும் சம்பாதிக்கலாம் என நினைத்தார்.
பாபா எல்லாம் தருகிறவர் எனக்கேள்விப்பட்டு அவரை தரிசிக்க வந்து அவரிடம் தனக்கு ஆன்ம ஞானத்தைத் தருமாறு கேட்டார்.
அவரது மன ஓட்டம் பாபாவுக்குத் தெரியாதா?
அவரிடம் சொன்னார், ‘நான் இந்த மசூதியில் உட்கார்ந்துகொண்டு, கஷ்டத்துடன் வந்து தன் குறைகளைக்கூறும் என் மக்களைத்தான் பார்த்திருக்கிறேன். வெளிப்படையாக, பாபா எனக்கு செல்வம் வேண்டும், சொத்து வேண்டும், நோய் நீங்க வேண்டும், ஆபத்து விலகவேண்டும், புகழ் வேண்டும், கவுரமாக வாழ வேண்டும் என்றெல்லாம் உலக சுகங்களை நாடித்தான் வருவார்கள். உன் போல பிரம்மத்தின் மீது நாட்டம் உள்ளவர்களைப் பார்க்க நான் ஏங்குகிறேன். அவர்கள் வருகை எனக்கு பண்டிகையும் திருவிழாவும் போன்றது. உன்னைப் பார்த்ததும் அந்த மகிழ்ச்சிதான் ஏற்படுகிறது. இரு.. இரு.. உனக்கு பிரம்மத்தைக் காட்டுகிறேன் என்று கூறினார்.
அவரை அமர வைத்துவிட்டு, ஒரு பையனை அழைத்து பாபா தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் கேட்டு வருமாறு அனுப்பினார்.
அந்தப் பையனும் ஒவ்வொரு முறையும் அவர் இல்லை, இவர் இல்லை என்றே வந்தான்.
பணக்காரர் பொறுமையிழந்தார். பாபாவிடம், நான் ஆத்ம ஞானம் கேட்கிறேன்.. நீங்களோ கடன் வாங்குவதில் குறியாக இருக்கிறீரே! என்று அடக்கமின்றி கேட்டான்.
வாடா, அப்பா! ஆத்ம ஞானி! இவ்வளவு நேரமாக எதைக் காட்டிக்கொண்டிருந்தேன் என நினைக்கிறாய்?  நான் கேட்டதைப் போல உன்னிடம் ஐம்பது மடங்கு பணம் இருக்கிறதே!  என் தேவையான ஐந்து ரூபாயைக் கொடுத்தால் என்ன,குறைந்தா போய்விடுவாய்?
(ஊசியின் காதில் ஒட்டகம் நுழையலாம்.. பணக்காரன் பரலோகம் போகமாட்டான் என்று பைபிளில் போட்டிருக் கிறதே- காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சித்தர் பாடலில் சொல்லப் பட்டிருக்கிறதே-)
கொடுத்தால் குறைந்துவிடும் என நினைத்து உலக சுகத்தின் மீது ஆசை வைக்கிற உனக்கு எப்படி ஆன்ம ஞானம் கிடைக்கும்? உனக்கு இது கிடைக்காது போய் வா! என அனுப்பி வைத்தார்.
இப்படி போலியாகக் கேட்காமல், தனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டிருந்தால் அதைத் தருவார்.. ஏன் எனில் பக்தர்கள் நலனை மட்டுமே நினைவில் வைத்து வாழுகிற சாது பாபா.
பாபா நமக்குள் வாழ்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். பாபா நமக்குள் இருந்தால் நாம் எப்படியிருப்போம்?
பாபாவைப் போல இருப்போம்.
அவர் மேலோர் கீழோர் பாராதவர்,
நோயாளி ஆரோக்கியமானவர் என்ற பேதமில்லாதவர்,
சுத்தம் அசுத்தம் பார்க்காதவர்,
படித்தவன் பாமரன் என்ற எண்ணமில்லாதவர்..
ஆளைப் பார்த்து பாசம் காட்டுகிற கொள்கையில்லாதவர்..
அப்படிப்பட்ட சுயநலமற்ற அன்பை மட்டுமே இலக்காகக் கொண்ட சாது நமது பாபா. அந்த சாது என்னுள் இருந்தால், நான் அப்படித்தான் இருப்பேன்.. சமத்துவம், சகோதரத்துவம், சுய நலம் இல்லாமை, அகங்காரம் இல்லாமை, அந்நியரை உபசரித்தல், சுயநலமற்ற அன்பு கொண்டிருத்தல்.. இப்படி அனைத்திலும் எனது சாதுவை நான் என்னில் பிரதிபலிப்பேன்... என்று சொல்லிக்கொள்ள வேண்டும்..
ஜாதியாலும் மதத்தாலும் சச்சரவிட்டு பிரிந்துபோகும் நிலையை தவிர்க்க வேண்டும். செத்து பேயான பிறகு, நான் முதலியார் பேய், செட்டியார் பேய், தேவர் பேய், நாடார் பேய், கன்னடப் பேய், தெலுங்குப் பேய், தமிழ்ப்பேய், முஸ்லிம் பேய், இந்துப் பேய், கிறித்தவப் பேய் என்று சொல்லிக்கொள்வதில்லை.
பேய் என்றால் பேய்தான்.. நாம் பேயாக அலையப்போகிறோமோ,
நாயாகப் பிறக்கப் போகிறோமோ, அல்லது நல்லவர்களாகப் பிறக்கப்போகிறோமோ யாருக்குத்தெரியும்.. அப்போதைக்கு நமக்கு நன்மை நடப்பதற்காக இப்போதைக்கு நம் சாது வழியில் செல்ல முயற்சிக்க வேண்டு;ம். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று கேட்காமல் உள்ளதை உள்ளவாறு கேட்கத் தைரியம் வேண்டும். பிறர் மீது காட்டுகிற அன்பை சுபாவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
சிலரிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள் என்பார்கள்.
உன்னிடம் இருப்பதில் சிறிதளவையாவது பிறருக்குத் தந்து பிறர் நலம் காக்க வேண்டும்.
பசித்தோர் முகம் பார்ப்பதும், தாகமாயிருப்பவருக்கு தண்ணீர் தருவதும், உடையில்லாதவனுக்கு உடை தருவதும் வசதியில்லாதவருக்குப் படிக்க உதவி செய்வதுமான புண்ணியங்களைச் செய்து விட்டு பிறர் நலனுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்றால் அது உண்மையான வேண்டுதல்.
அழிந்து போகிற செல்வத்தை வைத்து அழியாத ஞான செல்வமாகிய இறைவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதெல்லாம் எப்படி என எனக்குத் தெரியாதே என்று நினைக்காதீர்கள். நான் அடையாளம் காட்டுகிற அந்த சாது உங்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி அனைத்தையும் கற்பிப்பார், வழி நடத்துவார், பாதுகாப்பார். மனதைத் திறந்து வைத்துவிட்டு,
 ஓ சாயி என்கிற பரம சாதுவே!
என் மனதிற்குள் வாருங்கள். என்னை மாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொள்ளுங்கள்..

ஜெய் சாய் ராம்.

Tuesday, September 10, 2013

உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்! பகுதி 2


நேற்றைய தொடர்ச்சி......

ஒரு கதை சொல்கிறேன்.
சின்ன வயது முதல் பிரிவு என்பதை அறியாத பாசக்கார அண்ணனும் தம்பியும் காட்டு வழியே சென்று கொண்டிருந் தார்கள். அங்கே ஒரு விறகு வெட்டியும் அவனது மனைவியும் அலறிக்கொண்டு ஓடி வருவதைப் பார்த்து, என்ன விஷயம் என்று கேட்டார்கள்..
அங்கே ஆள் கொல்லி கிடக்கிறது. அதைப்பார்த்து பதறி ஓடிவருகிறேhம். நீங்களும் அந்தப்பக்கம் போகாதீர்கள்! என்று எச்சரித்து விட்டுச்சென்றார்கள்.
என்னதான் இருக்கிறது பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில் அண்ணனும் தம்பியும் அந்தப்பக்கம் போய்ப் பார்த்தார்கள். ஒரு மூட்டையில் கட்டுக் கட்டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அண்ணனும் தம்பியும் சிரித்தார்கள்.
அன்றாடம் கஷ;டப்பட்டு பிழைக்கும் இவர்கள், கஷ்டம் தீர கடவுள் வழிகாட்டியிருக் கிறான் என்று சந்தோஷப் படாமல், இதைப் போய் ஆள் கொல்லி என்று சொல்லிவிட்டு ஓடுகிறார்களே- என சொல்லிக் கொண்டு அதை எடுத்தார்கள்.
சொந்த ஊருக்குப் போனதும் ஆளுக்குப்பாதியாகப் பிரித்துக்கொள்ளலாம் என பேசி முடிவு செய்தார்கள். அதுவரை இந்தப் பணத்தை இந்தக் காட்டுப் பகுதியில் பாதுகாப்பது என்றும் தீர்மானம் செய்தார்கள்.
அண்ணனுக்கு பசித்தது. தம்பி, நீ ஊருக்குள் போய் ஏதாவது சாப்பிட வாங்கிக் கொண்டு வா.. அதுவரை இங்கே காத்திருக்கிறேன் என்றான்.
தம்பி ஊருக்குள் சென்ற பிறகு அண்ணன் மூட்டையைப் பார்த்தான். இவ்வளவு நிறைய பணத்தையும் வைத்து பெரிய செல்வந்தனாகலாம். தம்பிக்குக் கொடுத்தால் பாதி செல்வந்தனாக மட்டுமே ஆக முடியும்- என்ற எண்ணம் அவனுள் தோன்றியது..
இதை முற்றிலும் அனுபவிக்க வேண்டும் என்றால் தம்பியைக் கொன்றுவிடுவதுதான் ஒரே வழி.. என நினைத்தான். விறகு வெட்டி விட்டுச் சென்ற கத்தியை எடுத்து பத்திரப்படுத்தினான்.
ஊருக்குள் சென்ற தம்பி யோசித்தான். அண்ணனுக்கு பங்கு கொடுத்தால் பாதி சொத்து போய்விடும்.. அதைவிட உணவில் விஷத்தை வைத்துக்கொன்றுவிட்டால் மொத்த சொத்துமே நமதாகுமே என நினைத்தான். உணவை வாங்கி கூடவே நஞ்சையும் வாங்கிக் கலந்து எடுத்துக்கொண்டு அண்ணனிடம் வந்தான்.
‘அண்ணா நான் சாப்பிட்டுவந்து விட்டேன்.. நீ சாப்பிடு.. என்றான்.
சரி, அதைப் பரிமாறு என்றான் அண்ணன்.
தம்பி குனிந்து சாதத்தை எடுப்பதற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவனை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்றான். அண்ணனுக்குப் பசித்தது.
சாப்பிட்டு தெம்பாக பணத்துடன் போகலாம் என நினைத்து சாப்பிட்டான். உயிரை விட்டான்.
உழைக்காமல் பணம் வந்தால் இப்படித்தான் போய்விடும்.. நம்மையும் போக வைத்துவிடும்.
ஆகவே, மேலுக்கு வர ஆசைப்பட்டால் பாபா அதற்கான தகுதியை வளர்த்துத் தருவார். உன் தேவையைப் பூர்த்தி செய்து அனைவரை விடவும் செல்வந்தனாக மாற்றுவார்.
நீ விரும்பியவனைத் தருவார், விரும்பிய பெண் கிடைக்கும்.. விரும்பிய வேலையும் கிடைக்கும்.. ஆசைப்பட்ட எல்லாமும் காசில்லாமலேயே கிடைக்கும்.
உனக்குத் தகுதியென்றால்-
நியாயமான ஆசை என்றால்-
பாபா இதை ஆய்வு செய்து உனக்குத் தருவதற்காகவே அவதாரம் செய்தவர் அல்லவா?
பக்தர்களை தரிசனத்திற்கு அழைக்கிறவர், பொதுவாக நமக்கு ஒரு தேவை என்றால் நாம்தான் ஓடுவோம். சாமியிடம் கூட, நாம் தான் ஓடிப்போய் வேண்டுதல் வைப்போம்.
மாறாக,  ‘நான் உனக்கு மாடி வீடு வாங்கித் தருகிறேன். என் கோயிலுக்கு வந்து நீ மொட்டை போடு என்று சாமி சொல்லமாட்டார்.
நாம்தான் எனக்கு மாடி வீடு வாங்கித் தந்தால் கோயிலுக்கு வந்து மொட்டைப் போடுகிறேன் என வேண்டுவோம்.
ஆனால் பாபா வித்தியாசமானவர். உனக்குத் தர வேண்டும் எனத் தீர்மானம் செய்துவிட்டால் உன்னை எப்படியேனும், எங்கிருந்தாலும் உடனடியாக அழைத்து வந்துவிடுவார்.
என் பக்தன் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், சிட்டுக் குருவியின் கால்களில் நு}லைக் கட்டி இழுப்பதைப் போல அவனை என்னிடம் இழுத்துக் கொள்வேன்.. என்பது இதனால்தான்.
உலகியல் தேவைகளைத் தருகிறவர் ---என்னிடம் உலகியல் தேவைகளுக்காக வருகிற பக்தர்களை தடை செய்யாதீர்கள். அவர்கள் கேட்பதைப் போல நூறு மடங்கு ஆயிரம் மடங்கு நான் தரவேண்டியுள்ளது என்பார் பாபா.
அம்மணி என்ற பெண் குழந்தை பாபாவிடம் தினம் பிச்சை கேட்கும்போது, நான் என்ன உன் அப்பனுக்குக் கடன் பட்டிருக்கிறேனா, என்ன? என்று திட்டுவார்.
ஆனால் அவளுக்கு தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு ரூபாய் தருவார்..
இப்படித்தான்.. பாபா நமக்குக் கடன் பட்டவர் போல, தரவேண்டியிருக்கிறது எனத் தருவார்.
உலகியல் தேவைகளைத் தந்துகொண்டே, நமது மனதை சிறிது சிறிதாக ஆன்மீகத்தின் பக்கமாக திருப்புவார். நம்மை பக்தி மார்க்கத்தில் வழி நடத்திவிடுவார்.

மாறாக, உலகியல் தேவை மீது ஆசை வைத்துக்கொண்டு, ஆன்ம ஞானம் கேட்டால், அப்படிப்பட்டவரை கிண்டலடித்து அனுப்பி விடுவார். இதைப் பற்றியும் சத்சரித்திரம் கூறுகிறது.

இதன் கடைசி பகுதி நாளை.......

Monday, September 9, 2013

உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்! பகுதி 1


என் மனம் சஞ்சலங்களால் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. தேற்றுவார் யாருமில்லை. என்ன செய்தால் என் மனம் அமைதியுறும்?
 யார் எனக்கு உண்மையான தீர்வு தர முடியும்? எப்போது நான் நிம்மதியாக இருக்கப் போகிறேன்!
இருந்து தினம் தினம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது..  நான் பிறக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது பிறந்தவுடனே இறந்திருக்கலாம்..
இப்படி நீங்கள் புலம்புவராக இருந்தால், உங்களுக்குத் தீர்வு தரக்கூடிய ஒரு சாதுவை நான் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.
அவரிடம் சென்றால் நிச்சயமாகத் தீர்வு கிடைக்கும். அவரை அடையாளம் கண்டு அவரிடம் செல்லுங்கள்.
அவரைப் பார்த்தவுடன், அவரது தரிசனம் பெற்றவுடன் அலை பாய்கிற மனம் அமைதி அடைந்து விடும். இவ்வுலகுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி உங்கள் உள்ளத்தை நிரப்ப வேண்டும்.
அப்படிப்பட்ட சாது ஒருவர் இருக்கிறாரா? என்கிறீர்களா? நிச்சயம் உள்ளார். அவர் எப்போதும் இருக்கிறவராக இருக்கிறார்.
எவரை கோபம் தொட்டது இல்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரம்புவதைப் பற்றி கவலைப்படுவது இல்லையோ, அவரையே உண்மையான சாது என்று அறிக என சத் சரித்திரம் முப்பதாவது அத்தியாயம் நமக்குக்கற்றுத் தருகிறது.
அந்த சாதுவிடம் ஒரு லட்சியம் கூட இருக்கிறது. அது எல்லோரிடத்திலும் சுயநலமில்லாத அன்பு செலுத்துவது. எல்லோரிடத்திலும் சுயநலம் இல்லாத அன்பு என்பதே ஒரு சாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களைத் தவிர, வேறு எதிலும் அவர்தம் வார்த்தைகளை வீண் செய்வது இல்லை. இந்த இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்ட சமர்த்த சத்குருவான சீரடி சாயி பாபாவே அந்த சாது.
பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.
அவர் விருப்பங்கள் அனைத்தும் நிறை வேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர். சுயநலம் அற்றவர். அகங்காரம் இல்லாதவர். பற்று அற்றவர். பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர்.. என்று அவரை சத்சரித்திரம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.
அவர்தான் மகாசமாதியடைந்துவிட்டாரே- இருப்பதாக நினைத்தாலும் சீரடியில்தான் அவர் இருக்கிறார் அல்லவா என நினைக்காதீர்கள்.
அவர் எங்கும், எந்த வடிவிலும் இருக்கிறார். உங்களின் உள்ளும் புறமும் இருக்கிறார்.  அவரை தரிசித்தால் போதும் உங்கள் சஞ்சலம் எல்லாம் சரியாகிவிடும்.
பாபாவின் இலக்கணத்தைப் பார்க்கலாம் வாருங்கள்.
அவர் பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறவர். பக்தர்களை தரிசனத்திற்கு அழைக்கிறவர். உலகியல் தேவைகளை நிறைவேற்றுகிறவர். ஆன்மீகத் தேடல்களை நிறைவேற்றுகிறவர். இதற்காக எதையும் எதிர்பார்க்காதவர். பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர்.
இந்த விஷயங்கள் அனைத்தும் சத்சரித்திரம் முப்பதாவது அத்தியாயத்தில் உள்ளன.
முதலில் பாபாவின் அவதார நோக்கத்தை எடுத்துக்கொள்வோம். ராம பிரான் ராவணனை வதம் செய்ய அவதரித்தார், கிருஷ;ணர் பூமி பாரத்தைக் குறைக்க அவதரித்தார் என்று சொல்கிறேhம். ஆனால் சாயி அவதார நோக்கமோ முற்றிலும் வித்தியாசமானது. அது பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுவது. பக்தர்களின் நலனே, பாபாவின் அவதார நோக்கம். எனவேதான் பாபாவிடம் எதை வேண்டினாலும் உடனடியாகக் கிடைக்கிறது.
ஆசையை நிறைவேற்றுவார், விருப்பத்தை நிறை வேற்றுவார் என்றால் எல்லா வற்றின் மீதும் ஆசைப்பட லாம்.. அதை நிறைவேற்றித் தருவார் என நினைத்து விடாதீர்கள். பாபா தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
 என் பக்தன் எதைக் கேட்டாலும் அதை அவனுக்காகச் செய்வேன்.. ஆனால் கேட்பவரின் தகுதியறிந்து அவன் பெற்றுக் கொள்ளும் விதத்தில் தருவேன்- என்று கூறியுள்ளார் என்பது உனக்குத் தெரியும்.
ஆசைப்படு, தப்பில்லை.. கேள்.. அதிலும் தப்பில்லை.. இது உனக்குத் தேவையா? இதைப்பெற்றால் இதன் மூலம் உனக்கு நன்மை மட்டும் வருமா? என்று நான் சீர்தூக்கிப் பார்த்து அதை உனக்குத் தகுந்த நேரத்தில் வழங்குவேன் என்பதுதான் பாபாவின் நோக்கம்.
பாபா, நான் புலியின் மீது ஏறிச் செல்ல ஒரு புலி வேண்டும் எனக் கேட்பீர்கள். புலிக்கு பசித்தால் என்ன ஆகும்? இரையாவோம்.
பாபா எனக்குப் பணம் தேவை எனக்கேட்பீர்கள். தகுதியில்லாமல் பணத்தைக்கொடுத்தால் உயிரை விட வேண்டியிருக்கும்..
அதனால் உழைப்பையும், பிழைக்க வழியையும் கொடுத்து அதன் மூலம் அவர் பணத்தைத்தருவார். பணம் கிடைத்தால் உடனே அதனால் உயிரை விட வேண்டியிருக்குமா? எனக்கேட்காதீர்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.
அதனை நாளை பார்ப்போமா.......

Sunday, September 8, 2013

இனி உனக்கு வருவதெல்லாம் வசந்த காலங்களே! பகுதி 2



நேற்றைய தொடர்ச்சி.......


என் மகள் எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்தேன். ஆனந்தமே பிரம்மம் என்பதை நீ உணர்ந்து கொள்வதற்காகச் செய்தேன்.
ஆனந்தம்.. மன மகிழ்ச்சியாக இருக்கும்போது அல்லவா வருகிறது? மன மகிழ்ச்சி எப்போது வருகிறது? உன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிய பிறகுதானே வருகிறது?
இதையெல்லாம் நான் செய்து நான் உன்னை ஆனந்தமாக வைத்துக்கொள்ளவே இவ்வளவு நேரமும் முயன்று கொண்டிருக்கிறேன். நீயோ, நான் முடித்துவிட்ட பிரச்சினைகள் இன்னும் முடியவில்லை என தவறுதலாகப் புரிந்து கொண்டு, இன்னும் துக்கத்தில் இருக்கிறாய்..
இது கிடக்கிறது கர்மம்.. என அதைத் தூக்கி உன் மனதிலிருந்து எரிந்து விடு. அப்போது நீ கலக்கம் அடையமாட்டாய்.. மனிதனாகப் பிறந்தால் எல்லாவற்றையும் அனுபவித்துதான் தீரவேண்டியிருக்கிறது. கிரகக் கோளாறுகள் உச்சத்திலிருக்கும்போது அழுது லாபமென்ன? என நினைத்துக்கொண்டு, பேசாமல் இருந்துவிடு
அப்போது உன்னை எதுவும் பாதிக்காது.
நீ ஆனந்தமாக இருக்கும்போது உனக்குள் தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கைப் பிறக்கும். எதையும் சாதிக்கலாம் என்ற உற்சாகம் பிறக்கும்.. உன் வேண்டுதல்கள் எல்லாம் பலிக்கும். உனக்கும் எனக்கும் அவ்வப்போது சண்டை வருவது சகஜம்தானே-
பூஜையறையில் இருக்க வேண்டிய நான் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாக மாறுவதும், நீ செய்யவேண்டிய பூஜையை குழந்தைகள் செய்யட்டும், அல்லது வேறு யாராவது செய்யட்டும் என விடுவதும் வாடிக்கையாக நீ செய்கிறாய்.. என்னை இப்படி தவிக்கவிடும் உனக்கு விளையாட்டுக் காட்டலாம் என எதையேனும் நான் செய்கிறேன்..
இனி நீயும் அப்படியிருக்காதே, நானும் அப்படி நடந்து கொள்ளமாட்டேன்.
ஒரு வீட்டில் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாகிக்கொண்டிருந்தார்கள். சாப்பாட்டிற்குக் கூட கஷ்டம். அந்த நிலையில் அவர்கள் வீட்டிற்குப் போய் உட்கார்ந்தேன்.. எல்லாம் கொடுத்தேன்..
நாட்கள் நகர நகர செல்வமும் செல்வாக்கும் அவர்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.. அவர்கள் என்னை நினைப்பதும் குறைந்துகொண்டு வருகிறது.
தினமும் என்னருகில்தான் இருக்கிறார்கள், ஆனால் என்னை நினைப்பது குறைவு. எனக்கு வேளா வேளைக்கு சாப்பாடு தருவதில்லை.. அந்த வீட்டம்மாவுக்கு வேலைக்காரர்கள் தேவை.. பண்டை வீட்டில் யாராவது எடுப்பு சாப்பாடு எடுத்துப் போக ஆட்கள் இருந்தால்தான் எனக்கு சாப்பாடு அனுப்புவார்.. இல்லாவிட்டால் நான் அன்றைய தினம் பட்டினிதான். யாராவது எதையாவது கொடுத்தால் கொறித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டும். சில வேளைகளில் இதை வெறுத்து நான் பட்டினி கிடந்திருக்கிறேன், தெரியுமா உனக்கு?
சம்பாதித்துத் தருவது நான், சாப்பிடுவது அவர்கள்.. பெற்ற பிள்ளைகள் நன்றாக சாப்பிடவேண்டும், தத்துப்பிள்ளையான நான் பட்டினி கிடக்கவேண்டும்.. முன்பு என் பெயரை அவர்கள் உச்சரித்ததற்கும், இன்று அவர்கள் உச்சரித்து சொல்வதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன.
இன்னும் பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கிக்கொண்டு இருக்கிறேன்.. மனசு இருந்தால் உணர்வு வரும்.. அந்தத் தவறை செய்யாதிருப்பார்கள்..செய்வது தொடர்ந்தால் நானும் அவர்களோடு இருக்க முடியாமல் வெளியேறிப் போவேன்.
பிள்ளைகள் நன்றி கெட்டுப் போகும்போது பெற்றவர்கள் நாசுக்காக விலகிப்போவதுதானே முறை?
இந்த விஷயங்கள் போன்று உன்னிடம் நடக்க வேண்டாம் என எதிர்பார்க்கிறேன்.. நான் மாயை வசப்பட்டுள்ள காரணத்தால் உங்களிடம் வலிய வந்து சேவை செய்கிறேன். இதைத் தவறாகப் புரிந்து கொள்வதும், என்னைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதும் பாவத்தைச் சேர்க்கும் செயல்கள்.
என்னை நிந்திப்பதால் உனக்குப் பாவம் வரும். என்னை குறை கூறாதே.. நீ எனக்கு ஒன்றும் செய்யவில்லை என என்னிடம் குறையாக சொன்னால், உன்னைச் சுற்றியுள்ள அஷ்ட திக்குப்பாலகர்கள், உனக்காக அளிக்கப்பட்ட காவல் தெய்வங்கள் என அனைவரும் ததாஸ்து எனச் சொல்வார்கள். அந்த வார்த்தைகளை நான் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும்..
எனவே இனி அப்படி சொல்வதை விட்டு விடு. எனக்கு செய்தீர்கள்.. செய்கிறீர்கள் என்று சொல்..அப்போது நான் செய்வது உனக்கு சுலபமாகக்கிடைக்கும். அதுவரை எதையும் தாங்கும் இதயத்தோடு செயல்படு.. எல்லாம் சரியாகிவிடும்.
எனக்காக அல்லாமல் இந்த உலகத்திற்காக அழுபவர்களிடம் எனக்கென்ன வேலை என நான் ஒதுங்கிய நாட்கள் முடிவுக்கு வந்து, இனி என் மகளுக்காக.. என் மகளின் சந்தோஷத்திற்காக என்னை நான் தேய்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் எண்ணமிடுகிற நாட்கள் வரும்.
உனக்காக அழுவதற்காகவே நான் இருக்கும்போது நீ எதற்காக அழுகிறாய் மகளே- உனக்கு நன்மைகளை வாடிக்கையாகவே நான் செய்து தரும்போது துன்பத்தை நினைத்து நீ புலம்புவது வேடிக்கையாக அல்லவா தெரிகிறது..-
இமைப்பொழுது உன்னை கைவிட்டேன்.. நீ பெருந்துன்பத்தில் சிக்கிக்கொண்டாய்.. இனி ஒரு பொழுதும் உன்னை விட்டு விலகமாட்டேன்.. எனவே, இன்று முதல் உனக்கு சோதனை விலக்கம் என்பதை உணர்ந்து ஆறுதல் கொள்..இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும். நான் இனி தரும் ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்..
உனக்கு சொத்து சுகங்கள் மிக வேகமாக வளரும்.. மக்களும் உறவுகளும் அதிகமாவார்கள்.. உன்னை நம்பி உன் உதவிக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
நீ நினைத்ததெல்லாம் நடக்கும். தொட்டது எல்லாம் துலங்கும். ஏனெனில் உன்னைக் கைப்பிடித்து நடத்திக்கொண்டு போகிறவர் உன் தந்தையாகிய இந்த சாயி அல்லவா? அவரால் உன்னை மறந்திருக்க முடியுமா, அல்லது மறந்து விடத்தான் முடியுமா?
இதோ நீ பெருங்களத்தூருக்கு எப்போது வருவாய் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நிறைய பேசலாம்-

                                                   அன்புடன் அப்பா

Saturday, September 7, 2013

இனி உனக்கு வருவதெல்லாம் வசந்த காலங்களே! பகுதி 1


அன்பு மகளே!
கணவன் வீட்டில் இருந்தாலும் என்னையே நித்தமும் தியானம் செய்கிறவளே!  
பெண்களுக்கு எல்லாம் மகுடம் போன்றவளே!
இரக்க சிந்தனையில் மழையைப்போன்றவளே!
என் கண்களுக்கு கருவிழியைப் போன்றவளே!
நீ வருவாய் என்று உன்னுடைய வருகைக்காகவே நான் இத்தனை நாட்களாகக் காத்துக் கிடக்கிறேன். உன் தரிசன பாக்கியத்திற்காக நான் ஏங்காத நாட்களே இல்லை.. உனது முகத்தை ஒருமுறையேனும் இந்த இடத்தில் தரிசிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை மாதங்களாய் நான் இங்கிருக்கிறேன் தெரியுமா?
அப்பா, நான் உன்னை தரிசிக்க நான் சீரடிக்கு வர முடியவில்லையே? நீங்கள் அழைக்கவில்லையே!  என்று அங்கலாய்த்த நாட்களை நினைத்துப்பார், அது எவ்வளவு பெரிய ஏக்கத்தை கொடுத்ததோ, அதைவிட பல மடங்கு ஏக்கத்தோடு நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்.
நீ எனது மசூதிக்குள் கால் எடுத்து வைப்பது எதைப் போன்றது என்று தெரியுமா? ஓட்டப்பந்தயத்தில் வெற்றிக்கோட்டினைத் தொடுவது போன்றது. ஏனெனில், பல முறை நீ இங்கு வரலாம் என நினைத்திருப்பாய்.. ஆனால் உனக்கிருந்த கெட்ட நேரம் உன்னை இங்கு வரவிடாமல் தடுத்து விட்டது. வராததால் தந்தை வீட்டு சீதனத்தை உன்னால் எடுத்துச் செல்லமுடியாமல் போனது. இந்த மசூதியில் காலை வைத்தவுடனே உனது கஷ்டங்களுக்கு முடிவு வந்து விடும். இதுவே எனது பக்தர்களுக்கு நான் தருகிற உறுதிமொழி. எனது அன்பு மகளாகிய உனக்கும்தான்!
இந்த மசூதி உனது தாய்.. அது உன்னை உடனே அரவணைத்து உனக்குத் தேவையான அனைத்தையும் செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்த மசூதியில் நீ கால் பதித்தவுடனேயே உன் துன்பங்கள் அனைத்திற்கும் முடிவு வந்துவிட்டது. இங்கே எந்த கிரகத்திற்கும் வலு கிடையாது. அவை செயலிழந்து விடுவதால், உனக்கு உடனே ஆரோக்கியமும், சூஷமமும் தாய் வீட்டுப் பரிசாக அளிக்கப்படுகிறது.
இந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளாத பலர், என்னை ஒரு காட்சிப் பொருள் போல பார்க்க வந்து விட்டுச் செல்கிறார்கள்.
மகளே! எனது உதி மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை அறியாமல் அதை ஒரு சாம்பல் என நினைத்து அலட்சியம் செய்கிறவர்களுக்கு அந்த உதி என்ன செய்துவிட முடியும்?
அது எனது யோக சக்தி என்பதை உணர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கே பலன் தரும். அது போலத்தான், என்னை ஒரு காட்சிப் பொருள் போல நினைத்துக் கொள்கிறவர்களும் என்னிடமிருந்து எந்தப் பலனையும் பெற முடியாது.
உன்னைப் போல என்னையே சிந்தித்து, எனக்காக தன்னையே அர்ப்பணித்து உண்மை அன்புடன் என் பால் லயமாகிறவர்களுக்குத்தான் நான் பலன் தரக்கூடிய கற்பகத் தருவாக, காமதேனுவாக இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு நான் ஒரு உதவாக்கரைதான்-
சரி, இப்போது எதற்காக அப்பா இந்த பீடிகை வார்த்தைகள் எனக் கேட்கலாம்-
ஒன்றும் இல்லையம்மா.. இந்த அர்ஜுனனிடம் நான் சொன்ன வார்த்தைகளை நீ யோசித்துப்பாரேன்.. அவன் தனது உறவுகளை எதிர்த்துப் போரிடத் தயங்கியபோது, அவர்களைக் கொல்வது பாவம் என்று கதறியபோது, நான் எனது விஸ்வரூபத்தைக் காட்டி இவர்களை நான் ஏற்கனவே கொன்றுவிட்டேன், கொன்றதைத்தான் நீ கொல்கிறாய் என்று விளக்கிச் சொல்லி அவனுக்கு விஷயத்தைப் புரிய வைத்து, வெற்றிகொள்ள வைத்தேன்.
அதைப்போலத்தான், உனக்கும்கூட இன்னும் சில விஷயங்கள் விளங்காதவையாக உள்ளன. இப்போது நீ மலை போல நினைத்திருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் நான் ஏற்கனவே தீர்த்துவிட்டேன். எத்தனை முறை சொன்னாலும் நீ அந்த பயத்திலேயே இருப்பதால், தீர்த்த பிரச்சினையை தீர வேண்டும் என தொடர்ந்து வேண்டிக்கொண்டு இருக்கிறாய்..
அர்ஜுனன் என்னை நம்பி முழுமையாக லயமாகி வெற்றியடைந்து இன்றளவும் மங்காதப்புகழ் பெற்றவனாக விளங்குகிறான். நீயோ எனது எந்த வார்த்தையையும் மதிப்பதேயில்லை.
பிரச்சினை என்று வந்துவிட்டால் ஒரேயடியாக பயந்து விடுகிறாய்.. இதை இப்போதே விட்டுவிடு.. இனி வரப்போவதெல்லாம் உனக்கு வசந்த காலங்கள்.
வாழ்வில் எதையெல்லாம் நீ நிரந்தரம் என நினைத்துக்கொண்டிருந்தாயோ- அவையெல்லாம் நிதர்சனம் இல்லாத பொய்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே சோதனைகள் தரப்பட்டன. யாரை நம்பி உன் உடமைகளை ஜாமீன் கொடுத்தாயோ,  அவர்கள் உண்மை இல்லாதவர்கள் என்பதை உணர்த்தவே பிரச்சினையில் உன்னை சிக்க வைத்தேன்.
யாரை எதிர்பார்த்திருந்தாயோ அவர்களால் உனக்கு நன்மையில்லை என்பதை உணர்த்தவே அவர்களின் சுயரூபத்தை உனக்கு வெளிப்படுத்தினேன்.
ஆனால் நீயோ வெகுளியாக இருந்துவிட்டாய். உனது அன்பு குணத்தை, அப்பாவித் தனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
பொருளையும் நம்பிக்கையையும் நீ இழந்துவிட்டாய். அவமானமும் பட்டாய். அந்த கெட்டக் காலங்களை நினைத்துப் பார்க்கவேண்டாம். அவையெல்லாம் பஞ்சு மெத்தையில் உனக்காக வைக்கப்பட்ட பெரிய முட்களைப்போல குத்திக் கொண்டிருந்தவை. கண்களில் கைப்பிடி மண் விழுந்ததைப் போல உறுத்திக்கொண்டிருந்தவை. இந்தக் காலங்கள் மாறி விட்டன மகளே- இனி உனக்கு வருவதெல்லாம் வசந்த காலங்களே!
சோர்ந்து போயிருந்த உன்னைத் தேற்றி, இதோ நான் உனது வலது கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினேன். நான் உன்னைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக பல முறை உன் கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்தேன். இக்கட்டான நேரங்களில் எல்லாம் உடன் இருந்து உன்னைக் காப்பாற்றினேன். நீ கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் பதில் குரல் கொடுத்தேன்.
பிரச்சினை என்று வந்துவிட்டால் ஒரேயடியாக பயந்து விடுகிறாய்.. இதை இப்போதே விட்டுவிடு..
இந்த உலகத்தில் என்னைவிட உனக்கு உண்மையான உறவுகள் யாருமில்லை என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, பொய்யான உறவுகளை உன்னிடமிருந்து விலக்கி வைத்தேன்.
உன் பிரச்சினைகள் ஒன்றும் உன்னை செய்து விடப்போவதில்லை என்பதை நீ தெரிந்து கொள்ளவே அவற்றை நான் உன்னை விட்டு அப்புறப்படுத்தும் வழிகளை அறிவித்தேன்.

இதையெல்லாம் நான் எதற்காகச் செய்தேன்?

இதன் தொடர்ச்சி நாளை.......

Friday, September 6, 2013

சாயி பக்தனின் அடையாளங்கள்!


யாரையும் வெறுக்காதவன்,  அனைவரிடமும் நட்பு பூண்டவன்,  எல்லாவற்றிடமும் கருணை உடையவன்,  அகங்காரம் விட்டவன்,  இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவன், பொறுமை உடையவன்,  எப்போதும் திருப்தியுற்றவன்,  எப்போதும் யோகத்தில் நிலை பெற்றவனாய் செயல் புரிபவன்,  தன்னைக் கட்டுப்படுத்தியவன், திட சங்கல்பம் உடையவன்,  மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவன் -  இத்தகையவனே எனது பக்தன்.
யார் பிறரைத் துன்புறுத்துவது இல்லையோ, யாரைப் பிறரால் துன்புறுத்த முடியாதோ, யார் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி இவற்றிலிருந்து விடுபட்டவனோ, - இத்தகையவனே எனக்குப் பிரியமானவன்.
எதையும் சார்ந்திருக்காதவன், தூயவன், சுறுசுறுப்பு உடையவன், துன்பமோ இன்பமோ எது வந்தாலும் பொருட்படுத்தாதவன், ஒரு போதும் துயரப்படாதவன், தனக்கான எல்லா முயற்சிகளையும் விட்டவன், புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாகக் கொள்பவன், அமைதியாக இருப்பவன், ஆழ்ந்த சிந்தனையுடையவன், சிறிதே கிடைத்தாலும் அதில் திருப்தி கொள்பவன், உலகே தன் வீடாக இருப்பதால் தனக்கென்று வீடு இல்லாதவன், தனது கொள்கையில் உறுதி படைத்தவன்- இத்தகையவனே எனது பக்தன்.
சாயி பக்தர்கள் எப்படியிருக்கவேண்டும் - இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமே மேற்சொல்லப்பட்டவை.
பொதுவாகவே சாயி பக்தர்கள் அமைதியானவர்களாகவே காணப்படுவர். அதுவும் நமது குரு சாயிவரதராஜனின் சத்சங்கத்தை கேட்பவர்கள், எப்படிப்பட்ட மனநிலையில் அவரைச் சந்திப்பதற்கு முன்பு இருந்தாலும், அவரைச் சந்தித்த பின் சத்சங்கம் கேட்டபின், அவர் கையால் உதி பூசப்பட்டு, உதி வாங்கியபின் பெரும் மாற்றத்திற்கு உள்ளாவார்கள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் பெரும் மாற்றம் ஏற்படுவது நிதர்சனம்.
அவருடைய சத்சங்கத்தை ஒரு முறை கேட்டாலே அவர்கள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். தொடர்ந்து அவரது சத்சங்கம் கேட்டு வருகிறவர்கள் நிச்சயமாக, ஒரு புது மனிதராக நடைபோட்டு வருகிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை.
எளிமைக்கும் அன்புக்கும் எடுத்துக்காட்டாய் அவர் விளங்கும்போது நாளுக்கு நாள் சாயி அடியார்கள் பெருகி வருவதும், அவரது போதனைகளை பின்பற்றி மாற்றத்தை தன்னுள்ளே கொண்டு புது அவதாரமாக சாயி பக்தர்கள் பொங்கி வழிவதும் பெருங்களத்தூழ் பாபா பிரார்த்தனை மையத்தின் பெருமையன்றோ!
எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், சோதனைகள் வந்தாலும் சாயி பக்தர்கள் ஒரு போதும் மனம் தளர்வதி;லை. ஏனெனில் இயக்குவதும், இயங்க வைப்பதும் சாயி அன்றோ பிரச்சினைகளுக்குப் பின் தீர்வு, சோதனைகளுக்குப் பின் சாதனை- இதுதான் சாயி பக்தர்களின் அனுபவம்.
பகவத் கீதையின் போதனைகளே சாயிபக்தனின் அடையாளங்கள். சாயியைப் பணிவோம், சகல நலன்களையும் பெறுவோம்.

                                      சாயி கலியன், நங்கநல்லூர்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...