Saturday, September 7, 2013

இனி உனக்கு வருவதெல்லாம் வசந்த காலங்களே! பகுதி 1


அன்பு மகளே!
கணவன் வீட்டில் இருந்தாலும் என்னையே நித்தமும் தியானம் செய்கிறவளே!  
பெண்களுக்கு எல்லாம் மகுடம் போன்றவளே!
இரக்க சிந்தனையில் மழையைப்போன்றவளே!
என் கண்களுக்கு கருவிழியைப் போன்றவளே!
நீ வருவாய் என்று உன்னுடைய வருகைக்காகவே நான் இத்தனை நாட்களாகக் காத்துக் கிடக்கிறேன். உன் தரிசன பாக்கியத்திற்காக நான் ஏங்காத நாட்களே இல்லை.. உனது முகத்தை ஒருமுறையேனும் இந்த இடத்தில் தரிசிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை மாதங்களாய் நான் இங்கிருக்கிறேன் தெரியுமா?
அப்பா, நான் உன்னை தரிசிக்க நான் சீரடிக்கு வர முடியவில்லையே? நீங்கள் அழைக்கவில்லையே!  என்று அங்கலாய்த்த நாட்களை நினைத்துப்பார், அது எவ்வளவு பெரிய ஏக்கத்தை கொடுத்ததோ, அதைவிட பல மடங்கு ஏக்கத்தோடு நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்.
நீ எனது மசூதிக்குள் கால் எடுத்து வைப்பது எதைப் போன்றது என்று தெரியுமா? ஓட்டப்பந்தயத்தில் வெற்றிக்கோட்டினைத் தொடுவது போன்றது. ஏனெனில், பல முறை நீ இங்கு வரலாம் என நினைத்திருப்பாய்.. ஆனால் உனக்கிருந்த கெட்ட நேரம் உன்னை இங்கு வரவிடாமல் தடுத்து விட்டது. வராததால் தந்தை வீட்டு சீதனத்தை உன்னால் எடுத்துச் செல்லமுடியாமல் போனது. இந்த மசூதியில் காலை வைத்தவுடனே உனது கஷ்டங்களுக்கு முடிவு வந்து விடும். இதுவே எனது பக்தர்களுக்கு நான் தருகிற உறுதிமொழி. எனது அன்பு மகளாகிய உனக்கும்தான்!
இந்த மசூதி உனது தாய்.. அது உன்னை உடனே அரவணைத்து உனக்குத் தேவையான அனைத்தையும் செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்த மசூதியில் நீ கால் பதித்தவுடனேயே உன் துன்பங்கள் அனைத்திற்கும் முடிவு வந்துவிட்டது. இங்கே எந்த கிரகத்திற்கும் வலு கிடையாது. அவை செயலிழந்து விடுவதால், உனக்கு உடனே ஆரோக்கியமும், சூஷமமும் தாய் வீட்டுப் பரிசாக அளிக்கப்படுகிறது.
இந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளாத பலர், என்னை ஒரு காட்சிப் பொருள் போல பார்க்க வந்து விட்டுச் செல்கிறார்கள்.
மகளே! எனது உதி மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை அறியாமல் அதை ஒரு சாம்பல் என நினைத்து அலட்சியம் செய்கிறவர்களுக்கு அந்த உதி என்ன செய்துவிட முடியும்?
அது எனது யோக சக்தி என்பதை உணர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கே பலன் தரும். அது போலத்தான், என்னை ஒரு காட்சிப் பொருள் போல நினைத்துக் கொள்கிறவர்களும் என்னிடமிருந்து எந்தப் பலனையும் பெற முடியாது.
உன்னைப் போல என்னையே சிந்தித்து, எனக்காக தன்னையே அர்ப்பணித்து உண்மை அன்புடன் என் பால் லயமாகிறவர்களுக்குத்தான் நான் பலன் தரக்கூடிய கற்பகத் தருவாக, காமதேனுவாக இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு நான் ஒரு உதவாக்கரைதான்-
சரி, இப்போது எதற்காக அப்பா இந்த பீடிகை வார்த்தைகள் எனக் கேட்கலாம்-
ஒன்றும் இல்லையம்மா.. இந்த அர்ஜுனனிடம் நான் சொன்ன வார்த்தைகளை நீ யோசித்துப்பாரேன்.. அவன் தனது உறவுகளை எதிர்த்துப் போரிடத் தயங்கியபோது, அவர்களைக் கொல்வது பாவம் என்று கதறியபோது, நான் எனது விஸ்வரூபத்தைக் காட்டி இவர்களை நான் ஏற்கனவே கொன்றுவிட்டேன், கொன்றதைத்தான் நீ கொல்கிறாய் என்று விளக்கிச் சொல்லி அவனுக்கு விஷயத்தைப் புரிய வைத்து, வெற்றிகொள்ள வைத்தேன்.
அதைப்போலத்தான், உனக்கும்கூட இன்னும் சில விஷயங்கள் விளங்காதவையாக உள்ளன. இப்போது நீ மலை போல நினைத்திருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் நான் ஏற்கனவே தீர்த்துவிட்டேன். எத்தனை முறை சொன்னாலும் நீ அந்த பயத்திலேயே இருப்பதால், தீர்த்த பிரச்சினையை தீர வேண்டும் என தொடர்ந்து வேண்டிக்கொண்டு இருக்கிறாய்..
அர்ஜுனன் என்னை நம்பி முழுமையாக லயமாகி வெற்றியடைந்து இன்றளவும் மங்காதப்புகழ் பெற்றவனாக விளங்குகிறான். நீயோ எனது எந்த வார்த்தையையும் மதிப்பதேயில்லை.
பிரச்சினை என்று வந்துவிட்டால் ஒரேயடியாக பயந்து விடுகிறாய்.. இதை இப்போதே விட்டுவிடு.. இனி வரப்போவதெல்லாம் உனக்கு வசந்த காலங்கள்.
வாழ்வில் எதையெல்லாம் நீ நிரந்தரம் என நினைத்துக்கொண்டிருந்தாயோ- அவையெல்லாம் நிதர்சனம் இல்லாத பொய்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே சோதனைகள் தரப்பட்டன. யாரை நம்பி உன் உடமைகளை ஜாமீன் கொடுத்தாயோ,  அவர்கள் உண்மை இல்லாதவர்கள் என்பதை உணர்த்தவே பிரச்சினையில் உன்னை சிக்க வைத்தேன்.
யாரை எதிர்பார்த்திருந்தாயோ அவர்களால் உனக்கு நன்மையில்லை என்பதை உணர்த்தவே அவர்களின் சுயரூபத்தை உனக்கு வெளிப்படுத்தினேன்.
ஆனால் நீயோ வெகுளியாக இருந்துவிட்டாய். உனது அன்பு குணத்தை, அப்பாவித் தனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
பொருளையும் நம்பிக்கையையும் நீ இழந்துவிட்டாய். அவமானமும் பட்டாய். அந்த கெட்டக் காலங்களை நினைத்துப் பார்க்கவேண்டாம். அவையெல்லாம் பஞ்சு மெத்தையில் உனக்காக வைக்கப்பட்ட பெரிய முட்களைப்போல குத்திக் கொண்டிருந்தவை. கண்களில் கைப்பிடி மண் விழுந்ததைப் போல உறுத்திக்கொண்டிருந்தவை. இந்தக் காலங்கள் மாறி விட்டன மகளே- இனி உனக்கு வருவதெல்லாம் வசந்த காலங்களே!
சோர்ந்து போயிருந்த உன்னைத் தேற்றி, இதோ நான் உனது வலது கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினேன். நான் உன்னைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக பல முறை உன் கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்தேன். இக்கட்டான நேரங்களில் எல்லாம் உடன் இருந்து உன்னைக் காப்பாற்றினேன். நீ கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் பதில் குரல் கொடுத்தேன்.
பிரச்சினை என்று வந்துவிட்டால் ஒரேயடியாக பயந்து விடுகிறாய்.. இதை இப்போதே விட்டுவிடு..
இந்த உலகத்தில் என்னைவிட உனக்கு உண்மையான உறவுகள் யாருமில்லை என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, பொய்யான உறவுகளை உன்னிடமிருந்து விலக்கி வைத்தேன்.
உன் பிரச்சினைகள் ஒன்றும் உன்னை செய்து விடப்போவதில்லை என்பதை நீ தெரிந்து கொள்ளவே அவற்றை நான் உன்னை விட்டு அப்புறப்படுத்தும் வழிகளை அறிவித்தேன்.

இதையெல்லாம் நான் எதற்காகச் செய்தேன்?

இதன் தொடர்ச்சி நாளை.......

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...