Wednesday, September 11, 2013

உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்! பகுதி 3


நேற்றைய தொடர்ச்சி....

பதினாறாவது அத்தியாயத்தில் பிரம்ம ஞானம் கேட்ட ஒருவரைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது்
வாழ்நாள் முழுவதும் செல்வம் சேர்ப்பதிலேயே மூழ்கிப் போனவர், தம்மை பக்தனாக நினைத்துக் கொள்கிறவர், உலக சம்பத்துகள் நிறைந்தவர். அவரிடம் ஆன்ம சக்தியிருந்தால் அதை வைத்து மேலும் சம்பாதிக்கலாம் என நினைத்தார்.
பாபா எல்லாம் தருகிறவர் எனக்கேள்விப்பட்டு அவரை தரிசிக்க வந்து அவரிடம் தனக்கு ஆன்ம ஞானத்தைத் தருமாறு கேட்டார்.
அவரது மன ஓட்டம் பாபாவுக்குத் தெரியாதா?
அவரிடம் சொன்னார், ‘நான் இந்த மசூதியில் உட்கார்ந்துகொண்டு, கஷ்டத்துடன் வந்து தன் குறைகளைக்கூறும் என் மக்களைத்தான் பார்த்திருக்கிறேன். வெளிப்படையாக, பாபா எனக்கு செல்வம் வேண்டும், சொத்து வேண்டும், நோய் நீங்க வேண்டும், ஆபத்து விலகவேண்டும், புகழ் வேண்டும், கவுரமாக வாழ வேண்டும் என்றெல்லாம் உலக சுகங்களை நாடித்தான் வருவார்கள். உன் போல பிரம்மத்தின் மீது நாட்டம் உள்ளவர்களைப் பார்க்க நான் ஏங்குகிறேன். அவர்கள் வருகை எனக்கு பண்டிகையும் திருவிழாவும் போன்றது. உன்னைப் பார்த்ததும் அந்த மகிழ்ச்சிதான் ஏற்படுகிறது. இரு.. இரு.. உனக்கு பிரம்மத்தைக் காட்டுகிறேன் என்று கூறினார்.
அவரை அமர வைத்துவிட்டு, ஒரு பையனை அழைத்து பாபா தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் கேட்டு வருமாறு அனுப்பினார்.
அந்தப் பையனும் ஒவ்வொரு முறையும் அவர் இல்லை, இவர் இல்லை என்றே வந்தான்.
பணக்காரர் பொறுமையிழந்தார். பாபாவிடம், நான் ஆத்ம ஞானம் கேட்கிறேன்.. நீங்களோ கடன் வாங்குவதில் குறியாக இருக்கிறீரே! என்று அடக்கமின்றி கேட்டான்.
வாடா, அப்பா! ஆத்ம ஞானி! இவ்வளவு நேரமாக எதைக் காட்டிக்கொண்டிருந்தேன் என நினைக்கிறாய்?  நான் கேட்டதைப் போல உன்னிடம் ஐம்பது மடங்கு பணம் இருக்கிறதே!  என் தேவையான ஐந்து ரூபாயைக் கொடுத்தால் என்ன,குறைந்தா போய்விடுவாய்?
(ஊசியின் காதில் ஒட்டகம் நுழையலாம்.. பணக்காரன் பரலோகம் போகமாட்டான் என்று பைபிளில் போட்டிருக் கிறதே- காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சித்தர் பாடலில் சொல்லப் பட்டிருக்கிறதே-)
கொடுத்தால் குறைந்துவிடும் என நினைத்து உலக சுகத்தின் மீது ஆசை வைக்கிற உனக்கு எப்படி ஆன்ம ஞானம் கிடைக்கும்? உனக்கு இது கிடைக்காது போய் வா! என அனுப்பி வைத்தார்.
இப்படி போலியாகக் கேட்காமல், தனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டிருந்தால் அதைத் தருவார்.. ஏன் எனில் பக்தர்கள் நலனை மட்டுமே நினைவில் வைத்து வாழுகிற சாது பாபா.
பாபா நமக்குள் வாழ்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். பாபா நமக்குள் இருந்தால் நாம் எப்படியிருப்போம்?
பாபாவைப் போல இருப்போம்.
அவர் மேலோர் கீழோர் பாராதவர்,
நோயாளி ஆரோக்கியமானவர் என்ற பேதமில்லாதவர்,
சுத்தம் அசுத்தம் பார்க்காதவர்,
படித்தவன் பாமரன் என்ற எண்ணமில்லாதவர்..
ஆளைப் பார்த்து பாசம் காட்டுகிற கொள்கையில்லாதவர்..
அப்படிப்பட்ட சுயநலமற்ற அன்பை மட்டுமே இலக்காகக் கொண்ட சாது நமது பாபா. அந்த சாது என்னுள் இருந்தால், நான் அப்படித்தான் இருப்பேன்.. சமத்துவம், சகோதரத்துவம், சுய நலம் இல்லாமை, அகங்காரம் இல்லாமை, அந்நியரை உபசரித்தல், சுயநலமற்ற அன்பு கொண்டிருத்தல்.. இப்படி அனைத்திலும் எனது சாதுவை நான் என்னில் பிரதிபலிப்பேன்... என்று சொல்லிக்கொள்ள வேண்டும்..
ஜாதியாலும் மதத்தாலும் சச்சரவிட்டு பிரிந்துபோகும் நிலையை தவிர்க்க வேண்டும். செத்து பேயான பிறகு, நான் முதலியார் பேய், செட்டியார் பேய், தேவர் பேய், நாடார் பேய், கன்னடப் பேய், தெலுங்குப் பேய், தமிழ்ப்பேய், முஸ்லிம் பேய், இந்துப் பேய், கிறித்தவப் பேய் என்று சொல்லிக்கொள்வதில்லை.
பேய் என்றால் பேய்தான்.. நாம் பேயாக அலையப்போகிறோமோ,
நாயாகப் பிறக்கப் போகிறோமோ, அல்லது நல்லவர்களாகப் பிறக்கப்போகிறோமோ யாருக்குத்தெரியும்.. அப்போதைக்கு நமக்கு நன்மை நடப்பதற்காக இப்போதைக்கு நம் சாது வழியில் செல்ல முயற்சிக்க வேண்டு;ம். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று கேட்காமல் உள்ளதை உள்ளவாறு கேட்கத் தைரியம் வேண்டும். பிறர் மீது காட்டுகிற அன்பை சுபாவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
சிலரிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள் என்பார்கள்.
உன்னிடம் இருப்பதில் சிறிதளவையாவது பிறருக்குத் தந்து பிறர் நலம் காக்க வேண்டும்.
பசித்தோர் முகம் பார்ப்பதும், தாகமாயிருப்பவருக்கு தண்ணீர் தருவதும், உடையில்லாதவனுக்கு உடை தருவதும் வசதியில்லாதவருக்குப் படிக்க உதவி செய்வதுமான புண்ணியங்களைச் செய்து விட்டு பிறர் நலனுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்றால் அது உண்மையான வேண்டுதல்.
அழிந்து போகிற செல்வத்தை வைத்து அழியாத ஞான செல்வமாகிய இறைவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதெல்லாம் எப்படி என எனக்குத் தெரியாதே என்று நினைக்காதீர்கள். நான் அடையாளம் காட்டுகிற அந்த சாது உங்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி அனைத்தையும் கற்பிப்பார், வழி நடத்துவார், பாதுகாப்பார். மனதைத் திறந்து வைத்துவிட்டு,
 ஓ சாயி என்கிற பரம சாதுவே!
என் மனதிற்குள் வாருங்கள். என்னை மாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொள்ளுங்கள்..

ஜெய் சாய் ராம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...