Monday, September 9, 2013

உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்! பகுதி 1


என் மனம் சஞ்சலங்களால் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. தேற்றுவார் யாருமில்லை. என்ன செய்தால் என் மனம் அமைதியுறும்?
 யார் எனக்கு உண்மையான தீர்வு தர முடியும்? எப்போது நான் நிம்மதியாக இருக்கப் போகிறேன்!
இருந்து தினம் தினம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது..  நான் பிறக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது பிறந்தவுடனே இறந்திருக்கலாம்..
இப்படி நீங்கள் புலம்புவராக இருந்தால், உங்களுக்குத் தீர்வு தரக்கூடிய ஒரு சாதுவை நான் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.
அவரிடம் சென்றால் நிச்சயமாகத் தீர்வு கிடைக்கும். அவரை அடையாளம் கண்டு அவரிடம் செல்லுங்கள்.
அவரைப் பார்த்தவுடன், அவரது தரிசனம் பெற்றவுடன் அலை பாய்கிற மனம் அமைதி அடைந்து விடும். இவ்வுலகுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி உங்கள் உள்ளத்தை நிரப்ப வேண்டும்.
அப்படிப்பட்ட சாது ஒருவர் இருக்கிறாரா? என்கிறீர்களா? நிச்சயம் உள்ளார். அவர் எப்போதும் இருக்கிறவராக இருக்கிறார்.
எவரை கோபம் தொட்டது இல்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரம்புவதைப் பற்றி கவலைப்படுவது இல்லையோ, அவரையே உண்மையான சாது என்று அறிக என சத் சரித்திரம் முப்பதாவது அத்தியாயம் நமக்குக்கற்றுத் தருகிறது.
அந்த சாதுவிடம் ஒரு லட்சியம் கூட இருக்கிறது. அது எல்லோரிடத்திலும் சுயநலமில்லாத அன்பு செலுத்துவது. எல்லோரிடத்திலும் சுயநலம் இல்லாத அன்பு என்பதே ஒரு சாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களைத் தவிர, வேறு எதிலும் அவர்தம் வார்த்தைகளை வீண் செய்வது இல்லை. இந்த இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்ட சமர்த்த சத்குருவான சீரடி சாயி பாபாவே அந்த சாது.
பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.
அவர் விருப்பங்கள் அனைத்தும் நிறை வேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர். சுயநலம் அற்றவர். அகங்காரம் இல்லாதவர். பற்று அற்றவர். பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர்.. என்று அவரை சத்சரித்திரம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.
அவர்தான் மகாசமாதியடைந்துவிட்டாரே- இருப்பதாக நினைத்தாலும் சீரடியில்தான் அவர் இருக்கிறார் அல்லவா என நினைக்காதீர்கள்.
அவர் எங்கும், எந்த வடிவிலும் இருக்கிறார். உங்களின் உள்ளும் புறமும் இருக்கிறார்.  அவரை தரிசித்தால் போதும் உங்கள் சஞ்சலம் எல்லாம் சரியாகிவிடும்.
பாபாவின் இலக்கணத்தைப் பார்க்கலாம் வாருங்கள்.
அவர் பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறவர். பக்தர்களை தரிசனத்திற்கு அழைக்கிறவர். உலகியல் தேவைகளை நிறைவேற்றுகிறவர். ஆன்மீகத் தேடல்களை நிறைவேற்றுகிறவர். இதற்காக எதையும் எதிர்பார்க்காதவர். பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர்.
இந்த விஷயங்கள் அனைத்தும் சத்சரித்திரம் முப்பதாவது அத்தியாயத்தில் உள்ளன.
முதலில் பாபாவின் அவதார நோக்கத்தை எடுத்துக்கொள்வோம். ராம பிரான் ராவணனை வதம் செய்ய அவதரித்தார், கிருஷ;ணர் பூமி பாரத்தைக் குறைக்க அவதரித்தார் என்று சொல்கிறேhம். ஆனால் சாயி அவதார நோக்கமோ முற்றிலும் வித்தியாசமானது. அது பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுவது. பக்தர்களின் நலனே, பாபாவின் அவதார நோக்கம். எனவேதான் பாபாவிடம் எதை வேண்டினாலும் உடனடியாகக் கிடைக்கிறது.
ஆசையை நிறைவேற்றுவார், விருப்பத்தை நிறை வேற்றுவார் என்றால் எல்லா வற்றின் மீதும் ஆசைப்பட லாம்.. அதை நிறைவேற்றித் தருவார் என நினைத்து விடாதீர்கள். பாபா தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
 என் பக்தன் எதைக் கேட்டாலும் அதை அவனுக்காகச் செய்வேன்.. ஆனால் கேட்பவரின் தகுதியறிந்து அவன் பெற்றுக் கொள்ளும் விதத்தில் தருவேன்- என்று கூறியுள்ளார் என்பது உனக்குத் தெரியும்.
ஆசைப்படு, தப்பில்லை.. கேள்.. அதிலும் தப்பில்லை.. இது உனக்குத் தேவையா? இதைப்பெற்றால் இதன் மூலம் உனக்கு நன்மை மட்டும் வருமா? என்று நான் சீர்தூக்கிப் பார்த்து அதை உனக்குத் தகுந்த நேரத்தில் வழங்குவேன் என்பதுதான் பாபாவின் நோக்கம்.
பாபா, நான் புலியின் மீது ஏறிச் செல்ல ஒரு புலி வேண்டும் எனக் கேட்பீர்கள். புலிக்கு பசித்தால் என்ன ஆகும்? இரையாவோம்.
பாபா எனக்குப் பணம் தேவை எனக்கேட்பீர்கள். தகுதியில்லாமல் பணத்தைக்கொடுத்தால் உயிரை விட வேண்டியிருக்கும்..
அதனால் உழைப்பையும், பிழைக்க வழியையும் கொடுத்து அதன் மூலம் அவர் பணத்தைத்தருவார். பணம் கிடைத்தால் உடனே அதனால் உயிரை விட வேண்டியிருக்குமா? எனக்கேட்காதீர்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.
அதனை நாளை பார்ப்போமா.......

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...