நேற்றைய தொடர்ச்சி.....
நான் சாயி பக்தரில்லை, வள்ளலாரை குருவாக வைத்திருக்கிறேன், ரமணரை குருவாக வைத்து இருக்கிறேன், வெங்கையா
சுவாமியை அல்லது விசிறி சுவாமியை குருவாக வைத்திருக்கிறேன், அய்யா வைகுண்டர்தான்
என் குரு என்றாலும், யார் உனது
குருவாக விளங்குகிறாரோ அவரை மானசீகமாகப் பிடித்துக் கொண்டு,உன்னை ஒப்படைத்துவிடு! அப்போது நீ எந்தப் பிரச்சினையும்
இல்லாமல் சுலபமாக வாழ்க்கையை நடத்தலாம்.
கடவுள் சோதிப்பார், குருவோ சோதனையிலிருந்து தப்பிக்க வழிகாட்டுவார். நீ
திறமைசாலியாக இல்லாவிட்டால் உனக்காக அவர் போராடி உன்னை சோதனையிலிருந்து மீட்பார்.
அக்கரை சேர்ப்பதில் அக்கறை கொண்டவர் நம் குரு.
எப்போதும் அவரைப் பிடித்துக்கொண்டிருக்கமுடியுமா?
முடியாதே சுவாமி எனலாம். எப்போதும்
பிடிக்கவேண்டாம். போகும் வழியில் மட்டும் அவரை நினைத்துக்கொள். போகும் வழி
என்றால்...?
கடன் வாங்கப் போகும் முன்...
கடன் தரப்போகும் முன்..
ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்..
சாப்பிடும் முன்... உறங்கும் முன்...
அவரை நினைத்துக்கொள்.. அவர் உன்னை வழி நடத்துவார்.
சத்சரித்திரம் சத்குருவை நம் படகோட்டி என்று சொல்கிறது.
இதைப் பற்றி தியானிப்போம்.
படகோட்டிக்கும் படகுக்கும் தரையில் வேலை எதுவும்
கிடையாது. நமக்கோ எப்போதும் தண்ணீரில் வேலை கிடையாது. அவசியம் இருந்தால் மட்டுமே ஆற்றைக்
கடப்போம். மற்றபடி அந்தப்பக்கம் கூட தலை வைத்துப் படுக்கமாட்டோம். அதற்குத்தேவையே
கிடையாதே எனவே, தேவை ஏற்படும்போது
மட்டும் நாம் அந்தக் கரையைக் கடக்க வேண்டிய நிலை வருகிறது. இந்த நிலையில் படகோட்டி
இல்லாமல் நாம் அக்கரை செல்லவேண்டுமானால் பின் வரும் விஷயங்கள் நமக்குத் தேவை.
ஒன்று நாம் படகு வைத்திருக்கவேண்டும், அதை இயக்கவும், பாதுகாக்கவும் தெரிந்தவராக இருக்கவேண்டும்.
நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், நீந்தும் போது தண்ணீர் ஆழமில்லாமலும், அதில் முதலைகளோ, முள்களோ பள்ளங்களோ இல்லாமலும் இருக்க வேண்டும். சுழல்
இருக்கக்கூடாது.. நாம் அக்கரைக்கு பத்திரமாகப் போகவேண்டும், நாம் எடுத்துச்செல்லும் பொருட்களும் பத்திரமாக வந்து
சேர வேண்டும்.. ஈரம் படக்கூடாது.. நம்மோடு நம் குடும்பத்தையும் அழைத்துச் செல்லும்
திறன் வேண்டும். ஆபத்து நேர்ந்துவிட்டால் தப்பிக்க வழி தெரிந்திருக்க வேண்டும்.
இப்படி நிறைய விஷயங்கள் இருந்தால்தான் நாம் தைரியமாக
ஆற்றைக் கடக்க முடியும். இல்லாவிட்டால் ஆற்றங்கரையை வெறித்துப் பார்த்துவிட்டு வீடு
திரும்பிவிட வேண்டியதுதான்.
இப்படி யாராவது நினைத்துக் கொண்டிருப்பது உண்டா?
கிடையாது.. ஒரு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ ஓடக்காரனிடம் கொடுத்துவிட்டால்
அவன் பார்த்துக்கொள்ளப் போகிறான் என தைரியமாக எதைப் பற்றியும் சிந்திக்காமல் போகிறோம்.
ஓடக்காரன் எதற்கு?
டிரைவரை நம்பித்தானே வண்டியில் சொகுசாகப்பயணிக்கிறோம்.. நமது பாதுகாப்பு,
உடைமைகள், உயிர், எதிர்காலம்
எல்லாவற்றையும் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, ஓட்டுநரை நம்பி உட்காருவதில்தானே ஐயா இருக்கிறது அவன் பிரயாசைப்பட்டு,
கண் விழித்து, வழியில் மேடு பள்ளங்கள், எதிர் வண்டிகள், குறுக்கே வரும் தடைகள் எல்லாவற்றையும் பார்த்து கவனமாக நம்மை
இலக்குக்குக் கொண்டு போய் சேர்க்கிறான்.
இவ்வளவு தூரம் கொண்டு போனீர்களே! வாருங்கள் வீடு வரை
என்று டிரைவரைக் கூப்பிடுகிறோமா, என்ன?
அதுபோல உன் இலக்கை சேரும் வரையாவது
சத்குருவை உன் டிரைவராக வைத்துக்கொள். அவர் உன்னை கொண்டு சென்று சேர்ப்பார்..
பகவான் ராமகிருஷ;ணரிடம் தண்ணீர் மேல் நடக்கக் கற்றுக்கொண்ட மூடயோகி
ஒருவர் வந்து, ’பகவான், பதினைந்துஆண்டுகள்
தவமிருந்து நீர் மேல் நடக்கும் யோகத்தைக் கற்றுக்கொண்டேன்’ என்று சொன்னான்.
’பைத்தியக்காரா! ஒரு
எட்டணா தந்திருந்தால் ஓடக்காரன் உன்னை தண்ணீரை கடக்க வைத்து அக்கரையில் பத்திரமாக
சேர்த்திருப்பானே! இதற்குப்போய் பதினைந்து முழு ஆண்டுகளை வீணடித்து விட்டாயே’, என்றார்.
நாம் எல்லோருமே அந்த மூடயோகியைப் போல, தேவையற்ற ஒன்றுக்காக வாழ்நாளை வீணாக்குகிறோம்.
இது தேவையற்ற ஒன்று என்ற தெளிவு நமக்கு வருவதில்லை.
ஐம்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் போக வேண்டிய விஷயத்திற்காக
ஐந்து லட்சம் கொடுத்து கார் வாங்குகிறவனைப் போன்றதுதான் நமது தெளிவு. பெட்ரோல்,
மெயின்டனென்ஸ், டிரைவிங், டாக்ஸ் செலவுகள் மிச்சம் என நினைக்கவேண்டும்.
அந்தத் தெளிவு இல்லாததால் காருக்கு அடம் பிடிக்கிறோம்..
அது ஒரு சின்ன விபத்தில் சிக்கினாலும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம். ஐம்பது ரூபாய்
கொடுத்து போய்விட்டிருந்தால் இந்தக் கவலை நமக்கு வந்திருக்காது..
சரி.. இந்தத் தொல்லைகள் வராமல் வாழ்வை நகர்த்த
சத்குருவைப் பிடித்துக்கொள்ள வேண்டும். எப்படி அவரைப் பிடிப்பது? எப்படி அவரை நம் ஓடக்காரனாக்குவது?
இதன் தொடர்ச்சி நாளை.......
No comments:
Post a Comment