நல்ல புத்தகம் நல்ல நண்பன். வாசிப்பு ஓர் அருமையான பொழுதுபோக்கு. உருப்படியான உயர்வு தரும் பொழுது போக்கு. வாசிப்பை ஏனோதானோ என்றில்லாமல் ஒரு மனத்தோடு செய்தால் அதன் பலன் நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
திருக்குறள், பகவத் கீதை, பைபிள், குர்ஆன், ஸ்ரீ சீரடி சாய் சத்சரிதம் மற்றும் அந்தந்த மதநூல்களின் வாசிப்பு, ஒரு மனிதன் என்றைக்காவது என்ன செய்வது எனத் தோன்றவில்லையே என தவித்து நிற்கும்போது கை கொடுக்கும். வழிகாட்டும். இதில் எளிமையானது மற்றும் முதன்மையானது சாயியின் சத்சரிதம்.
இது ஒரு பாராயண நூல் மட்டுமல்ல, ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒரு புது அர்த்தம் தோன்றும். நின்று நிதானித்து ஆழமாகப்படிக்கும்போது ஒரு பிரமிப்பு உண்டாகும். மனிதனின் தற்கால எல்லா பிரச்சினைக்கும் அது வழிகாட்டுகிறது.
பூனாவைச் சேர்ந்தவர் கோபால் நாராயண் அம்படேகர். இவர் பாபாவின் பக்தர். தாணா மாவட்டத்தில் சுங்க இலாகாவில் பத்தாண்டுகளும், ஜவகர் மாவட்டத்தில் பத்தாண்டுகளும் பணி யாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றபின் வேறு வேலை தேடினார் கிடைக்கவில்லை. இவரை கடுமையான கஷ்டம் துரத்தியது. ஒவ்வொரு ஆண்டும் சொல்லவொணாத துயரம்.
ஆண்டு தோறும் சீரடிக்கு வருவார். பாபாவிடம் தன் துயரத்தைச் சமர்ப்பிப்பார். இவ்வாறு ஏழு ஆண்டுகள் ஓடின.
1916ம் ஆண்டு தாங்க முடியாத கஷ்டம். சீரடிக்கு வந்தார். பக்தர்கள் தங்கும் தீட்சித் வாதாவில் இரண்டு மாதம் மனைவியோடு தங்கி னார். ஒருநாள் வாதாவின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்த மாட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் கிணறு இருந்தது. தாங்க முடியாத தொல்லைகளால் அவதிப் பட்ட அவர், அந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
அப்போது பக்கத்திலிருந்த ஓட்டல் முதலாளி சகுண்மேரு நாயக் ஆம்படேகரிடம் வந்து அக்கல்கோட் மகராஜ் சரித்திரத்தைப் படிக்கக் கொடுத்தார்.
சகுண் மேரு நாயக்கிடம் வெண்ணெயில் சர்க்கரை போட்டு, காலையில் தனக்குக் கொடுக்குமாறு பாபா கூறுவார். இந்தப் பழக்கம் இன்னும் சீரடியில் தொடருகிறது. சீரடி சன்ஸ்தான் இதைப் பிரசாதமாக வழங்குகிறது.
அதை வாங்கிய அம்படேகர், அதிலிருந்து ஒரு அத்தியாயத்தைப் பிரித்துப் படித்தார். மகராஜின் பக்தன் ஒருவன் தீராத நோயால் கஷ்டப்பட்டான். இதிலிருந்து தப்ப தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து ஒருநாள் நள்ளிரவு கிணற்றில் விழுந்தான். உடனே மகராஜ் அவன் முன்னே தோன்றி, அவரை தன் கைகளால் தூக்கியெடுத்து காப்பாற்றினார்.
அவனிடம் சொன்னார், ”நல்லதோ, கெட்டதோ உனது முந்தையை கர்மவினையை அனுபவித்தே தீரவேண்டும். தற்கொலை தீர்வு இல்லை. மீதியுள்ள கர்மவினையை அனுபவிக்க நீ மீண்டும் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்” என்றார். இதைப் படித்த அம்படேகர் கண்ணீர் விட்டார்.
ஆகா, பாபா அல்லவா தம்மை சாவிலிருந்து காத்தார் என நெகிழ்ந்தார். பின் வீடு திரும்பினார். உழைத் தார், செல்வம் பெருக்கினார், வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தார்.
கு.ராமச்சந்திரன்
No comments:
Post a Comment