Thursday, June 19, 2014

பாபாவிடம் பெற்ற அனுபவம்!

baba2



ராவ் பகதூர் எஸ்.பி. துமால் நாசிக்கைச் சேர்ந்த சட்ட வல்லுநர். பாபாவிடம் அவர் பெற்ற அனுபவம் பற்றி கேட்ட போது,  “எனது வாழ்வில் இரவும் பகலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவம்தான், எதைச் சொல்ல?”  என்றார்.



இவை ஒவ்வொரு பக்தனுக்கும் சொந்தமானவை. இவை பிரசுரிக்கப்படக்கூடாது. மக்களின் கேலிக்கு உள்ளாகும். பாபாவின் அற்புதத்தை அவரவர் அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் அதன் மகிமை புரியும். மேலும் அதை எனது மொழியில் சொல்ல, வேறு மொழியில் எழுத அர்த்தம் மாறும். பாபா எங்கு



சென்றுவிட்டார்? இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். முன்பைவிட மிகுந்த சுறுசுறுப்போடு இருக்கிறார். சமாதி மந்திரில் அவரைப் பாருங்கள், இன்றும் என்றும் அவரைப் பணிவோடு வழிபட்டால் தொடர்பு கொள்ளலாம். இருந்தாலும் தன்னிடம் பாபாவின் மகிமையைப்பற்றி கேட்டதால் அவற்றை சொல்கிறேன் என துமால், தனது அனுபவத்தைக் கூற ஆரம்பித்தார்.



1907 ம் ஆண்டு நான் பாபாவை தரிசித்தேன். அவரது அதீத தெய்வத் தன்மையையும், சக்தியையும் கண்டு என்னுள்ளே ஓர் திருப்தி. ஆனந்தம். அதன் பின் பூட்டியையும் பாபாவுக்கு அறிமுகம் செய்தேன். அவர் பாபாவின் பக்தராகிவிட்டார்.



என்னுடைய ஒவ்வொரு செயலையும் பாபாதான் தீர்மானிக்கிறார், நடத்தி வைக்கிறார் என்ற நம்பிக்கை என்னுள் தீர்க்கமாக ஏற்பட்டு விட்டது. ஒருமுறை பாபா என்னிடம், “துமால், உனது ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்து வருகிறேன். இல்லையென்றால் உனக்கு என்ன ஆகியிருக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார். இது மிகையல்ல, உண்மை. மற்றொரு முறை நானும் பாபாவும் தனித்திருந்தபோது, “துமால் நேற்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. நேற்று இரவு முழுவதும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.



இதைக்கேட்ட நான் நன்றியால் நெகிழ்ந்து போனேன். கண்ணீர் விட்டு அழுதேன். பாபாவுக்கு நான் என்ன சேவை செய்துவிட்டேன்? எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. இதற்காக அவர் என்னைப் பற்றி எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார்?



எனக்கு வரப்போகும் கெடுதல்களை எல்லாம் தடுத்து, நல்லதைச் செய்துக்கொண்டிருக்கிறார்.  இப்படியாக நடந்தவை ஏராளம்.



அவர் வாழ்ந்த போதும், சமாதியானபோதும் எனக்கு வழிகாட்ட அவரின் படத்தின் முன் சீட்டுப்போட்டுப் பார்ப்பேன். எப்போதும் அவர் சரியான வழியையே காட்டித் தந்தார்.



அவர் வழிகாட்டுதல் படியே நடந்தேன், தொல்லையில்லை. அவர் வாழ்ந்தபோது எந்த ஒரு பிரச்சினைக்கும் கடிதம் எழுதுவேன். சாமா பாபாவிடம் பதில் பெற்று எழுதுவார். அதன் படியே நடப்பேன்.



நாசிக்கில் எனது பூர்வீக வீட்டில் நான் வாழ்ந்து வந்தேன். அங்கே திடீரென பிளேக் நோய் பரவியது. எலிகள் செத்துக்கிடந்தன. உடனே பாபாவுக்கு கடிதம் எழுதினேன். அவரே என்னைக் காப்பவர். எனக்கு வழிகாட்டி. பதில் வரும்வரை எனக்கு எந்த தீங்கும் நேராது என உணர்ந்தேன்.



அவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். நாசிக்கில் என்ன நடக்கிறது என அவருக்கு நிச்சயம் தெரியும். நான் ஒரு குழந்தை போல் அவரை சார்ந்து இருந்தேன். ஆகவே, பாபா எனக்கு எந்த தீங்கும் நேரவிடமாட்டார். கடந்த 29 ஆண்டுகளில் நான் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போனதில்லை.



பாபாவிடமிருந்து பதில் வந்தது. நாங்கள் பெரிய பங்களா வீட்டிற்கு மாறினோம். ஆனால் அதே இரவு எனது சகோதரனின் மகன் படுக்கையருகே எலி செத்துக்கிடந்தது. அதாவது பிளேக் நோய்தான் காரணம். மீண்டும் பாபாவுக்கு எழுதினேன். வீட்டை மாற்றவேண்டாம் என பதில் வந்தது. வீட்டிலும், வெளியிலும், வேலைக்காரர் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும், நாங்கள் தண்ணீர் எடுக்கும் கிணற்றிலும் எலிகள் செத்துக்கிடந்தன. மீண்டும் பாபாவுக்கு கடிதம் எழுதினேன். பதில் வரும் முன் சாமான்களை எடுத்துக்கொண்டு பழைய வீட்டுக்குச் சென்றோம். கதவைத் திறந்தேன். பாபாவின் பதிலைப் படித்தேன். நாம் ஏன் வீட்டை மாற்ற வேண்டும்? என கேட்டிருந்தார்.



உடனே சாமான்களையெல்லாம் எடுத்துக் கொண்டு பங்களா வீட்டிற்கே வந்துவிட்டேன். தண்ணீரை வீட்டுக் கிணற்றிலிருந்து எடுக்காமல் கோதாவரியிலிருந்து எடுத்துக்கொண்டோம்.



பிளேக் சமயத்தில் ஒரு நாளில் பதினாலு பதினைந்து பேர் இறந்தார்கள். ஆனால் எங்களுக்கு எந்த வித தீங்கும் நேரவேயில்லை. மிகவும் பாதுகாப்பாக இருந்தோம்.



நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனித்து வருகிறேன். இரவு பூராவும் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறேன் என என் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை கொண்ட பாபா, தொழில் ரீதியாகவும் நிறைய அற்புதங்கள் செய்தார்.



1910 அல்லது 1916ம் ஆண்டு. சீரடியில் ஒரு கிரிமினல் வழக்கு. எல்லா கிராமத்திலும் இருப்பது போல சீரடியிலும் மக்கள் இரு பிரிவுகளாக பிளவு பட்டிருந்தனர். பாபாவுக்கு சேவை செய்யும் ரகு மற்றும் அவருடன் சேர்ந்த ஐந்து பேரை மார்வாடி பெண்ணை இழிவாகப் பேசியதாக கை செய்து, நீதி மன்றத் தீர்ப்பின்படி ஆறு மாதம் சிறையில் அடைத்தனர். நேரடியாகப் பார்த்தவர்கள் வலுவான சாட்சி அளித்ததால் வழக்கு வலுவடைந்தது. பாபா பக்தர் தாத்யா கோதே பாடீல், குற்றவாளிக்காக இரக்கப்பட்டார்.



தீர்ப்பின் நகலை எடுத்துக் கொண்டு சீரடியில் இருந்த புகழ்பெற்ற வக்கீல் திரு. கபர்டே, காகா சாகேப் தீட்சித், ஓய்வு பெற்ற நீதிபதி ராவ் பகதூர் சாதே இவர்களிடம் காட்டி மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டினார். அவர்கள் தீர்ப்பின் நகலைப் படித்துவிட்டு, வழக்கு மிக வலுவாக உள்ளதால் மேல்முறையீட்டுக்கு மறுத்துவிட்டனர். தாத்யா, பாபாவிடம் ஆலோசனை கேட்டார்.



எல்லா பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு  ‘பாவ்’ இடம் (துமாலிடம்) போ என்றார். தாத்யா என்னிடம் நாசிக் வந்தார். நான் எல்லாவற்றையும் படித்து விட்டு மும்பை அல்லது அகமது நகரிலுள்ள தலை சிறந்த வக்கீலிடம் செல்லச் சொன்னேன். வழக்கு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.



உடனே தாத்யா, பாபாதான் என்னிடம் அனுப்பியதாகக் கூறினார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே, மேல் முறையீட்டு மனுவை தயாரித்து அகமது நகரின் மாவட்ட நீதிபதியின் வீட்டுக்குச்சென்றேன். அவரிடம் தீர்ப்பின் நகல் வரவில்லை, படிக்கவில்லை. எனது மேல் முறையீட்டு மனுவையும் அவர் படிக்கவில்லை. என்ன வழக்கு எனக் கேட்டார். ”சீரடியில் ஒரு மார்வாடி பெண்ணை இழிவாக பேசியதாக, நேரடி சாட்சியங்களை வைத்து ஆறு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது”  என்றேன்.



”துமால், வழக்கு வலுவாக உள்ளது. உனது கருத்து என்ன?”  எனக் கேட்டார் நீதிபதி.  ”இந்த வழக்கும், சாட்சியங்களும் இரு பிரிவினருக்கு இடையேயுள்ள பகையால் ஏற்பட்டது”  என்றேன்.



”அப்படியா நினைக்கிறாய்?” என்றார் நீதிபதி.



”அப்படி நினைப்பது மட்டுமல்ல நீதிபதி அவர்களே, இதுவே என உறுதி மொழியும் கூட!” என்றேன்.



நான் சொன்னதை நம்பிய நீதிபதி, உடனே மேல் முறையீட்டு மனுவை வாங்கி அந்த ஆறு பேரையும் நிரபராதி என தீர்ப்பு வழங்கி எழுதி விட்டார். பின் என்னிடம் நீதிபதி,  “உன் சீரடி சாயி பாபா எப்படி இருக்கிறார்? அவர் இந்துவா? முஸ்லிமா? உனக்கு என்ன உபதேசிக்கிறார்”  எனக் கேட்டார்.



“அவர் இந்துவும் அல்ல, முஸ்லிமும் அல்ல.  அதற்கும் மேலானவர். அவரின் உபதேசத்தை என்னால் விளக்கமுடியாது. அதை நீங்களே நேரடியாக பாபாவிடம் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்!”  என்றேன்.



அதற்கு அவரும் ஒத்துக்கொண்டார். ஒரு கோடை விடுமுறையில் கோபர்கான் வரை வந்தார். அங்கே வெயில் கடுமையாய் இருந்ததால் சீரடி செல்லாமலே திரும்பிவிட்டார்.



இந்த வழக்கில் ஒரு நூதனத்தை நீங்கள் பார்க்கலாம்.. அகமது நகர் நீதிபதிக்கு தீர்ப்பின் நகல் வரவில்லை. அதை அவர் படிக்கவும் இல்லை. நான் கொடுத்த மேல் முறையீட்டு மனுவையும் படித்தது இல்லை. போலீசுக்கும், அரசாங்க வக்கீலுக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால், உடனே தீர்ப்பு வழங்கிவிட்டு, சாய்பாபாவைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். இது எதைக் காட்டுகிறது? பாபாவின் தெய்வீக சக்தியை அல்லவா காட்டுகிறது. நான் உடனே சீரடி திரும்பினேன்.



அங்கே பாபா மசூதியில் சில பேரைக் கூப்பிட்டு இன்னும் சற்றுநேரத்தில் எனது சமத்காரத்தைப் பார்ப்பீர்கள் என்றார்.



ஆனால் அன்றுதான் காகா சாகேப் தீட்சித்தின் மகன் இறந்து அடக்கம் செய்ய எல்லோரும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எந்த சமத்காரத்தையும் காணாததால் சென்றுவிட்டார்கள். நான் சீரடி வந்து ஆறு பேர்களின் விடுதலை பற்றி கூறியவுடன், இதுதான் பாபா சொன்ன சமத்காரம் என அனைவரும் புரிந்து கொண்டார்கள்.



நு}று ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கு எதிரான இழிவான பேச்சு, நடத்தை கடும் குற்றமாகக் கருதப்பட்டது. வழக்கு பொய் வழக்கு என்பதால் தோற்று விட்டது என்பது வேறு விஷயம்...





கு. இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...