என் தொழில் வக்கீல் என்பதால் என்னிடம் இன்னொரு வழக்கு வந்தது. மூன்று சகோதரர்கள் சேர்ந்து அவர்களின் எதிரி எலும்பை முறித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டவர்கள் ஒரு மருத்துவமனையில் இருபது நாட்களுக்கும் மேல் தங்கி சிகிச்சை பெற்றதற்கான சான்று பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்கள்.
இந்த வழக்கு மேல் முறையீட்டுக்காக என்னிடம் வந்தது. நானும் உடனே மேல் முறையீட்டு மனு,விடுதலை மனு தயார் செய்து, மூத்த ஆங்கிலேயரான செசன்ஸ் நீதிபதியிடம் சமர்ப்பித்தேன்.
வழக்கின் தன்மையைப் பார்த்த நீதிபதி, “ இது மிகவும் வலுவான வழக்கு. இதில் விடுதலை தர முடியாது” என்று கூறிவிட்டார். உடனே பாபாவை நினைத்தேன். பின் நீதிபதியிடம், ”ஐயா, இந்த வழக்கில் எதிரிகளின் எலும்பு முறிந்துவிட்டதாகச்சான்றளித்தவர் பதிவு பெற்ற மருத்துவரல்ல, போலி மருத்துவர். அவரது மருத்துவமனையிலேயே இருபது நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதாகக்கூறியிருப்பது வேடிக்கையானது. மேலும், குற்றம் சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விவசாயிகள். தற்போது சிறையில் உள்ளார்கள். இதனால் அவர்களது விவசாயம் பாதிக்கிறது” என்றேன். குற்றம் உறுதியானால் நிரந்தர சிறைவாசம்தான் என்ற நீதிபதி எனது மனுவை ஏற்றுக்கொண்டார்.
அரசாங்க வக்கீல் என்னிடம், ”வழக்கில் விடுதலைக்காக வாதாடப் போகிறீர்களா? அல்லது நீதிபதியிடம் மன்னிப்புக் கோரி கருணை காட்ட வேண்டப்போகிறீரா?” எனக் கேட்டார்.
பாபா இருக்க பயமேன் எனக்கு? ”விடுதலைக்காக வாதாடப் போகிறேன்” என்றேன். வழக்கைத்தள்ளுபடி செய்து விடுதலை செய்ய வாதாடிய நான், பிறகு குறைந்த பட்சமாக தண்டனையைக் குறைக்க கருணை காட்டுமாறு வேண்டினேன்.
நீதிபதி என்னிடம், கருணை வேண்டும் என்றால் இவ்வளவு நேரம் வாதாடி எனது நேரத்தை வீணடித்து இருக்கவேண்டாம் என்றார்.
அரசாங்க வக்கீலிடம், ”எலும்பு முறிந்துவிட்டது என்று ஒரு போலி மருத்துவர் கொடுத்த சான்றை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் நீதிபதி. அதற்கு அரசாங்க வக்கீல், ”அடிபட்டவர்கள் மருத்துவரின் மருத்துவமனையில் இருபது நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றார்கள்” என்றார்.
கோபம் கொண்ட நீதிபதி ”இதை ஒரு மூன்றாம் வகுப்பு மேஜிஸ்ட்ரேட் இடம் சொல்லவும். நீர் ஒரு செசன்ஸ் நீதிபதி முன்னால் பேசிக்கொண்டிருக்கிறீர், மூன்றாம் வகுப்பு மேஜிஸ்ட்ரேட்டிடமல்ல!’ என்று அரசாங்க வக்கீலைக் கண்டித்தார்.
இதைக் கேட்ட அரசாங்க வக்கீல் அப்படியே அதிர்ந்துவிட்டார். மேலும் எந்த விவாதமும் தொடரவில்லை. குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையானார்கள். வக்கீல் தொழில் செய்து கொண்டே நான் சமுதாயப் பணியிலும் ஈடுபட்டேன்.
அரசாங்கம் நாசிக் மாவட்;ட உள்ளாட்சிக்கழகத்தின் முதல் தலைவராக என்னை நியமித்தது. இது ஒரு கவுரவ பதவி. இதை 1-11-1917 முதல் 13-5-1925 வரை வகித்தேன்.
இந்தப் பொறுப்பில் தினம் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் கையெழுத்திடும் நிலை. இதனால் வக்கீல் தொழிலை கவனிக்க முடியவில்லை. வருமானமும் குறைந்தது. அப்போதைய எனது வருமான வரி 260 ரூபாயிலிருந்து பூஜ்யமாகக் குறைந்து விட்டது. இந்த சேவைக்காக அரசாங்கம் எனக்கு ராவ் பகதூர் பட்டம் தந்தது. இது ஒரு சாதாரண பட்டம்தான். ஆனால் கவுரவப் பட்டம். இருந்தாலும் பாபாவின் மீது பாரத்தைப் போட்டு சேவையைத் தொடர்ந்தேன்.
ஒருநாள் கையெழுத்துக்காக ஆவணங்களை பியூன் என்னிடம் கொண்டுவந்தார். பொதுவாக எல்லாவற்றிலும் கையெழுத்திட்டு அன்றே அனுப்பிவிடுவேன். ஆனால் அன்று என்னைப் பார்க்க ஒரு முக்கியப் பிரமுகர் வந்திருந்தார். அவரிடம் நள்ளிரவு வரை பேசியதால் கையெழுத்து இடவில்லை. காலையில் இடலாம் என விட்டுவிட்டேன்.
காலையில் அவசர வேலையாக வெளியில் சென்றதால், ஆவணங்களை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டேன். மறுநாள் வழக்கம் போல் ஆவணங்கள் வந்தன. அதில் முந்தைய நாள் கையெழுத்திடாத ஆவணங்கள் ஏதுமில்லை.
அவற்றை வாங்கிப் பார்த்தபோது அனைத்திலும் என கையெழுத்து இருந்தது. நான் அதிர்ந்தேன். இது சாத்தியமே இல்லை. பியூனையும் முந்தைய இரவு சாப்பாட்டுக்கு அனுப்பிவிட்டேன். இது பாபாவின் செயல்தான் என நான் எண்ணி நெகிழ்ந்தேன்.
இந்தப் பதவியில் இருக்கும்போது துவக்கப்பள்ளிகள் எனது கட்டுப் பாட்டில் இருந்தன. பள்ளிக்கல்வி ஆய்வாளர் தீபாவளிக்கு முன்னதாக எல்லாருக்கும் சம்பளம் தர கூறினார். அவர் ஒரு முஸ்லீம். அந்த நேரத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கூறினார். தலைமை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, அரசாங்கத்திலிருந்து பணம் வரவில்லை, ஆகவே, சம்பளம் தர இயலாது எனக் கூறினார். மீண்டும் கல்வி ஆய்வாளர் நினைவூட்டினார்.
எனக்கு தர விருப்பம், ஆனால் முடியவில்லை. பாபாவிடம் சீட்டுக் குலுக்கிப் போட்டேன். கொடு என வந்தது. எல்லோருக்கும் சம்பளம் தரப்பட்டது. அனைவரும் மகிழ்ந்தனர். இதனால் வெகுநாட்கள் கழித்து எனக்கு தணிக்கை அதிகாரியிடமிருந்து ஆட்சேபணை வந்தது. நானும் நோட்டட் பார் பியூச்சர் கெயிடன்ஸ் என எழுதி பாபாவின் ஆசியால் அதை முடித்து விட்டேன்.
என் வாழ்வில் பாபாவின் உதவி எண்ணில் அடங்காது. ஆனால் சிலவற்றை மட்டும்தான் நான் கூறுகிறேன். 1910ம் ஆண்டு எனது நண்பர் கோபால் ராவ் பூட்டி, என்னை இங்கிலாந்துக்கு அனுப்பி பார் அட் லா படிக்க வைக்கும் செலவையும், மேலும் இந்தியாவில் எனது குடும்பத்திற்கு ஆகும் செலவையும் தான் கடனாகத் தருவதாகக் கூறினார்.
நாங்கள் எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு பாபாவிடம் அனுமதி பெறச் சென்றோம். சாமா, பாபாவிடம், என்னை மேல் படிப்புக்கு இங்கிலாந்து அனுப்பலாமா? எனக் கேட்டார். பாபா வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
”துமாலின் தேவை இங்குதான் தேவை. அவனது சொர்க்கமும் இந்தியாவில்தான். பின் ஏன் இங்கிலாந்து செல்லவேண்டும்?” எனக் கேட்டார்.
எனக்கு என்ன தேவை என்பதை பாபாதான் அறிவார். ஆகவே, இங்கிலாந்து செல்லவில்லை. 1911ல் மும்பை ஜெ.ஜெ. மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை. மயக்க மருந்து தந்தார்கள்.
பாபா அறுவை சிகிச்சை மேஜைக்கு அருகில் என் தலைமாட்டில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்துக்கொள்ள பாபா இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்தது. அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது.
1915ம் ஆண்டு நாசிக்கில் எனக்கு அரசாங்க வக்கீல் பதவியை அளிக்க அரசு முன்வந்தது. இரண்டு நாள் அவகாசம் கேட்டேன். பாபாவுக்குக் கடிதம் எழுதினேன்.”இப்போது உள்ள வேலை நன்றாகவே உள்ளது. புதிய பதவி வேண்டாம்” என்றார் பாபா. எனவே, அதையும் மறுத்துவிட்டேன்.
1918ம் ஆண்டு பாபா மகாசமாதிக்கு முன், சீரடி, பூனா மற்றும் பல இடங்களில் ப்ளு காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது. பூனாவில் என் சகோதரன் மனைவிக்குக் காய்ச்சல் கடுமையாக உள்ளதாக தந்தி வந்தது. நான் உடனே எண்பது ரூபாய் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். போகும் வழியில் பாபாவிடம் ஆசீர்வாதமும், உதியும் பெற்றுச் செல்லலாம் என சீரடி வந்தேன்.
பாபாவை தரிசித்தபோது, அவர் என்னிடமிருந்து எண்பது ரூபாயையும் தட்சணையாகப் பெற்றுக்கொண்டார். எனக்குப் புரிந்துவிட்டது, என்னை அனுப்ப பாபாவுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் பாபாவிடம் அனுமதி கேட்டேன். நாளை பார்க்கலாம் என்றார். இப்படியாக மூன்று நாட்கள் தங்கினேன். மீண்டும் சகோதரரிடமிருந்து அவர் மனைவி இறந்துவிட்டதாகத் தந்தி வந்தது.
பூனாவில் என்ன நடக்கப் போகிறது என பாபாவுக்கு மட்டுமே தெரியும். காரண, காரியம் எனக்குத் தெரியவில்லை. அவரது தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டேன். பின் பூனா சென்றேன். இது பாபாவின் மகாசமாதிக்கு முன் நிகழ்ந்தது.
ஆகவே, பாபாவை அவரது ஸ்தூல தேகத்தில் தரிசிக்கும் வாய்ப்பையும், அவரோடு சில நாட்கள் தங்கும் வாய்ப்பையும் எனக்கு அவர் அளித்தது அவரின் கருணைதான்.
No comments:
Post a Comment