Friday, June 1, 2018

ஆம்ர லீலா (மாம்பழ அற்புதம்)


ஒருமுறை 300 நல்ல மாம்பழங்கள் கொண்ட ஒரு பார்சல் ஷீர்டிக்கு வந்தது.  அது கோவாவிலிருந்து ராலே என்ற மம்லதரால் பாபாவுக்காக ஷாமாவின் பேரில் அனுப்பப்பட்டு இருந்தது.  அது திறக்கப்பட்டதும் எல்லா மாம்பழங்களும் நன்றாக இருந்தன.  அவைகளில் நான்கை மட்டும் தமது கோலம்பாவில் வைத்துக்கொண்டு மீதியை ஷாமாவிடம் ஒப்படைத்தார்.  "இந்த நாலு பழமும் தாமு அண்ணாவுக்கு, அவைகள் இங்கேயே இருக்கட்டும்" என்றார் பாபா.

இந்த தாமு அண்ணாவுக்கு மூன்று மனைவிகள்.  முன்னரே சொல்லப்பட்ட அவருடைய வாக்குமூலத்தின்படி அவருக்கு மூன்று அல்ல, இரண்டு மனைவியர் தாம்.  அவருக்குக் குழந்தை இல்லை.  பல ஜோசியர்களைக் கலந்தும் தாமே ஜோதிடத்தை ஓரளவு கற்றும் ஒரு பாபா கிரகம் தன ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என அறிந்து கொண்டார்.  ஆனால் பாபாவிடம் அவருக்குப் பெரும் நம்பிக்கை உண்டு.  மாம்பழம் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் பாபாவை வணங்க அவர் ஷீர்டிக்குச் சென்றபோது, மற்றவர்களெல்லாம் அந்த மாம்பழத்துக்காக ஏங்கினார்களாயினும், அவை தாம்யாவினுடையதே.  யாரைச் சேரவேண்டுமோ அவர் அதை "உண்டு மரிக்கவேண்டும்" என பாபா கூறினார்.

இவ்வார்த்தைகளை முதலில் தாமு அண்ணா கேட்டபோது அதிர்ச்சி அடைந்தார்.  ஆனால் மஹல்சாபதி அவைகளை விளக்கினார்.  சாவு என்பது 'தான்' என்ற அஹங்காரச் சாவு ஆகும்.  அது பாபாவின் திருவடிகளருகில் நிகழ்வது ஓர் ஆசியேயாகும்.  மனம் தெளிந்து தாம் பழத்தை வாங்கிச் சாப்பிடுவதாகத் தாமு கேட்டுக்கொண்டார்.  ஆனால் பாபா அவரிடம், "நீயே திண்ருவிடாதே.  உனது இளைய மனைவிக்குக் கொடு.  இந்த ஆம்ரலீலா (மாம்பழ அற்புதம்) அவளுக்கு நான்கு மகன்களையும், நான்கு மகள்களையும் கொடுக்கும்".  காலப்போக்கில் பாபாவின் மொழிகளே உண்மையாயின, ஜோசியர்களுடையது அல்ல என்றும் அறியப்பட்டது.

பாபாவின் கூற்றுக்களின் திறமும், பெருமையும் அவர் வாழ்நாளில்தான் நிரூபனமாயிற்றென்றால், ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  அவர் சாமதியடைந்த பின்னும் அது மாதிரியே நிகழ்ந்தன.  "நான் இறந்து விட்டபோதிலும் என்னை நம்புங்கள்.  எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும்.  நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன் என்னுடைய சமாதியும் பேசும், கூடச் செல்லும், தொடர்புகொள்ளும்.  நான் உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள்.  எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள்.  ஆனால் என்னையே எப்போதும் நினைவு கூறுங்கள்.  உள்ளம், உயிர் இவற்றால் என்னை நம்புங்கள்.  அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்" என்றார்.
                                        சாயி சத்சரிதம் அத்தியாயம்-25

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...