Sunday, August 25, 2013

விநாயகர் வழிபாட்டுத்தத்துவம்!

விநாயகர் வழிபாட்டைச் செய்தபிறகே மற்ற கடவுள்களுக்குப் பூசைகள் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
                                     (பி.வி. சுப்பிரமணியன், திருச்சி)

இதைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. விநயம் என்றால் பணிவு, அடக்கம், விவேகம், நிதானம் என்று பொருள். இறை வழிபாடு செய்யும் முன் நமக்கு பணிவும், அடக்கமும், நிதானமும் தேவை.
யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ அப்படி நடப்பது விநயம். அப்படி நடக்கத் தெரிந்தவர், இதற்கு உதாரண புருஷர் விநாயகர்.
இதனால்தான் விநாயகர் வழிபாடு வித்தைகளையும், செல்வ சுகத்தையும், முக்தியையும் தரும் என்றார்கள். பணிவு, அடக்கம், நிதானம் ஆகியவை நமக்கு எப்போதும் தேவை. யார் யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதையும் அறியவேண்டும்.
இதனால் நமக்கு தகுதி வந்துவிடும். இந்த தகுதியை யோக்கியதை என்றனர். யோக்கியமான ஒருவனை பிறர் மதிப்பார்கள். பிறர் மதிக்க ஆரம்பித்தால் அவனுக்கு கவுரவம் தருவார்கள், அவன் பொருள் மட்டுமல்ல, சொல்லும் விலை போகும். இதைத்தான் வித்தையும் பலிக்கும் என்றார்கள்.
இறைவனை வணங்கும் முன்பு முதலில் இதைக் கற்றுக்கொண்டால் எல்லாம் சித்திக்கும் என்றார்கள். இதை நாம் கற்றுக்கொள்ளாமல் இறைவனை வணங்கினால் பலன் கிடைக்காது என்பதே விநாயகர் வழிபாட்டின் உண்மையான பொருள்.
என்னைப் பொறுத்தவரை விநாயகர் என்றால் பணிவுடையவர், பணிவு உடையவர்களுக்கு எல்லாம் தலைவர் (மிகவும் பணிவு மிக்கவர்) என்றே பொருள் கொள்வேன். தாய் தந்தையே உலகம் என்ற பணிவு அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
மஞ்சளைப் பிடித்து வைத்தாலும், சாணியைப் பிடித்து வைத்தாலும், மண்ணைப் பிடித்து வைத்தாலும் அதையும் தன் உருவாக - கோயிலாக ஏற்பவர். குளக்கரை, மரத்தடி என எந்த எளிய இடத்திலும் எழுந்தருளி வரந்தருபவர் இவர். உயர்ந்தப் பிரணவமாக இருந்தும் எளியவர்களுக்காக எளிமையாக இறங்கிவந்துவிடுகிறவர் கடவுள் என்பதற்கு உதாரணம் விநாயகர்.
இவரைப் போல, நீ எந்த இடத்திலிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அதை உனக்கு உரியதாக எடுத்துக்கொண்டு, எப்போதும் பணிவாக இரு... உலகைப் படைத்த பிரணவமே பணிவுடன் இருக்கும்போது நாம் அகந்தை கொள்ளக்கூடாது என அடங்கியிரு என உணர்த்தவே முதலில் விநாயகர் வழிபாட்டைச் செய்யச் சொல்வதாக நினைக்கிறேன்.

அடக்கம் (விநயம்) அமரருள் உய்க்கும் என்பது இதன் பொருட்டே. அவிநயம் அதாவது அடங்காமை துன்பத்தைக் கொடுக்கும். அடக்கத்தோடு நடந்தால் விநாயகரைப் போல முதல் தெய்வமாக வணங்கப்படுவாய், இல்லாவிட்டால் துன்பப்படுவாய் எனவும் பொருள் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...