Sunday, August 25, 2013

கவலைப்படாதே உனக்கு ஒன்றும் ஆகாது!



கடவுள் மிகவும் கருணை உள்ளவர். பக்தர்களின் மீது இரக்கமும் உருக்கமும், நீடித்த பொறுமையும் உள்ளவர். நாம் துக்கப்பட்டால், துயரப்பட்டால் அவரால் அதைப்பொறுத்துக் கொள்ள முடியாது.
அவர் நம் மீது வைக்கிற பாசத்தால் மாயையில் சிக்கிக் கொண்டு நம்மைப் போலவே பலமற்ற மனம் கொண்டவராக மாறிவிடுகிறார். பெற்ற தாய் தந்தையர் எப்படி பிள்ளைகளைப்பற்றி இரவு பகலாக சிந்திக்கிறார்களோ அப்படியே சிந்திக்கிறார். சத் சரித்திரமும் பாபா இதைத்தான் சொன்னதாகக் கூறுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவு விக்ஷயத்திற்கு பாபா முதல் இடம் தருகிறார். அன்னமே பிரம்மம் என்பது அவர் கருத்து. பசியோடு இருக்கும் எந்த உயிருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதை விதிமுறையாகவே தனது பக்தர்களுக்கு அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
பட்டினியால் வாடிய ஓர் அம்மாவுக்கு எப்படி உதவினார் என்பதையும், பட்டினி இருக்க விரும்பிய ஓர் அம்மாவை எப்படி அதிலிருந்து மீட்டார் என்பதையும் பற்றி கூறுகிறேன், தெரிந்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் ஓர் அம்மாவை சந்திக்க நேர்ந்தது. கடந்த காலங்களில் அந்தத் தாயார் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் பேசியதில் ஒரு விக்ஷயத்தைச் சொன்னார்.  சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கஷ்ட காலம் எங்களைப் பிடித்துக்கொண்டது. இருந்ததையெல்லாம் இழந்தோம். வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நானும் என் கணவர் பிள்ளைகளும் வனவாசம் மேற்கொண்டோம்.
அந்தக் காலத்தில் எங்கள் சம்பாத்தியமாக மூவாயிரம் ரூபாயில் ஒரு நிலத்தை வாங்கியிருந்தோம். அதைப்பார்க்க, என் கணவருடன் சென்றுகொண்டிருந்தேன். பற்றாக் குறையால் தவித்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டில் உணவு இல்லை, நிறை மாத கர்ப்பிணியான எனக்கு சரியான பசி. வரும் வழியில் ஓர் அத்திமரம் இருந்தது. அதில் இரண்டு மூன்று பழங்களைப் பறித்து சாப்பிட்டுவிட்டு, வாய்க்கால் நீரை அள்ளிக் குடித்து பசியாறியபடி வயலுக்கு வந்தேன்.
வெயிலில் களைப்பு அதிகமாக இருந்ததால், வயலில் இருந்த வேப்ப மரத்தடியில் ஒரு வேர் மீது தலை வைத்துப்படுத்துக் கொண்டேன். என் கணவர் என்னருகில் அமர்ந்திருந்தார்.. படுத்த சிறிது நேரத்தில் நான் உறங்கிப் போனேன்.
அப்போது ஒரு கனவு. வயதான ஒரு பெரியவர் வந்து என் அருகே அமர்ந்தார். நீண்ட தாடியும், ஜடா முடியும் வைத்திருந்தார். கையில் பிரம்பு ஒன்றும் இருந்தது.

 எனது தலையை அவர் மடி மீது வைத்து வருடிக்கொடுத்தபடி,  ‘மகளே! களைப்பாக இருக்கிறாயா? அன்னம் பிரம்மம்! நீ போய் சாப்பிடுமகளே, கவலைப்படாதே! உனக்கு ஒன்றும் ஆகாது. அமைதியாக உறங்கு. இது என் இடம். இதில்தான் நான் வசிக்கிறேன்.
உச்சி வெயிலில் இந்த இடத்திற்கு யாரும் வருவதை அனுமதிக்க மாட்டேன், விரும்பவும் மாட்டேன். நீ பசியால் களைத்திருப்பதால் உன் மீது எனக்குக் கோபமில்லை! பரிதாபம்தான் வருகிறது. இன்று உன்னை உபசரித்து அனுப்புகிறேன்.. நாளை முதல் இந்த நேரத்தில் இங்கு வந்து படுக்காதே.. இதைப் பின்பற்றினால் உன்னை எப்பொழுதும் காத்து அருள்வேன் என்றார்.
தந்தையாரின் ஸ்பரிசத்தை விட மென்மையான ஸ்பரிசம் அது. அந்த ஸ்பரிசத்தை நான் நிஜமாக உணர்ந்ததால் அதை கனவு என்று சொல்ல முடியாது. திடுக்கிட்டு எழுந்தேன்..
கணவர் பதறியபடி, என்ன? என்ன?எனக் கேட்க, நடந்ததைச் சொன்னேன்.
கடவுள் வந்திருக்கிறார்’, என்றவர், உடனே கை கூப்பி அந்த மரத்தை வணங்கி,  ‘மனித உறவுகள் யாரும் எங்களுக்கு இல்லை.  நீயே கதி. வேறு வழி இல்லாத நிலையில் இருக்கிறோம். குற்றம் குறை பொறுத்து எங்கள் குல தெய்வமாக இருந்து எங்களைக் காப்பாற்று என வேண்டினார்.
எத்தனையோ பசி பட்டினியான காலங்களைக் கடந்து வாழ்ந்தோம்.. என் மக்களை அவர் வளர்த்தார். இன்று கடவுள் என்று கைதொழும் அளவில் என் பிள்ளைகளில் சிலர் உயர்ந்து நிற்கிறார்கள். அதைப் பார்க்கப் பார்க்கப் பூரிப்பாக இருக்கிறது. இந்தக் கடவுள் எங்களுக்காக எங்களுடனேயே தங்கிவிட்டார்..
பல காலங்களுக்குப் பிறகு, எனது குடும்பம் சாயி பக்தக் குடும்பமானது. இப்போதுதான் தெரிகிறது, அன்று வந்ததும் அரவணைத்ததும் அவரே என்பது. அநேக ரூபங்களில் உலவும் இறைவன் அவர். அவரது கருணையை நினைத்தால் இன்றும் என் உடலில் மயிர்க்கூச்செரிகிறது என்றார்.
எனக்கு உடனே பாபா சொன்ன இந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. நானும் சில சமயங்களில் சில இடங்களுக்குச்செல்கிறேன்.. போய் அதே இடத்தில் ஓய்வாக உட்கார்ந்து கொள்கிறேன்.. ஆயினும் என் ஜீவன் மாயையில் சிக்கிக்கொண்டு சுழற்காற்றில் சிக்கிய காகிதப்பட்டம் போல் கீழ் நோக்கிப் பாய்கிறது.
இந்த மாயையில் இருந்து விடுபடுவது கடினமான காரியம். அது என்னை ஹீனனாகவும், தீனனாகவும் ஆக்கி விடுகிறது.. இரவு பகலாக என் மக்களைப்பற்றியே சிந்திக்க வைக்கிறது! - ( ஸ்ரீ பாபா. அத் - 32)
எவ்வளவு அற்புதமான கடவுள் பாபா! இவரை கடவுளாக அறிவதற்கு நாம் பல ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்..
பசியோடு இருந்த அம்மாவுக்கு வேறு ஒரு ரூபத்தில் குல தெய்வமாக அமர்ந்து, பல ஆண்டுகள் கழித்து தன்னை பாபா என வெளிப்படுத்தினார். பசியை தானாக வரவழைத்துக்கொண்ட ஒரு அம்மாவுக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார். இதை சத்சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.
கேள்கர் என்ற பாபா பக்தருக்கு காசீபாயி கானிட்கர் என்ற உறவினர் இருந்தார். அவருக்கு வேண்டிய ஒரு பெண்மணியின் குடும்பப் பெயர் கோகலே. திருமதி கோகலே என்பார்கள். இந்த அம்மையாருக்கு பாபாவை தரிசனம் செய்து வைக்குமாறு கேள்கருக்கு அறிமுகக்கடிதம் கொடுத்தனுப்பினார் கானிட்கர்.
அறிமுகக் கடிதத்தோடு சீரடி வந்த அம்மையார், சாயி மகராஜின் பாதங்களில் மூன்று நாட்கள் உபவாசமாக உட்காருவது என்ற தீர்மானித்தார். எல்லாவற்றையும் அறிகிற இறைவனான சாயி, அந்தத் திட்டத்தை முறியடிக்க திருவுளம் கொண்டார். கேள்கரை அழைத்து, ஹோலிப்பண்டிகைப் போன்ற நன்னாளில் என் குழந்தைகள் பட்டினி கிடப்பதை நான் அனுமதிக்கமுடியாது.. அதைப்பார்த்துக் கொண்டு என்னால் இங்கு அமைதியாக உட்காரவும் முடியாது. என்று சொன்னார்.
பாபா பட்டினி கிடந்ததில்லை. பிறரையும் பட்டினி கிடக்க அனுமதித்தது இல்லை. பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது.. அவர் எப்படி ஆன்மீக சாதனைகளை ஏற்க முடியும்?
வெறும் வயிற்றுடன் கடவுளை அடைய முடியாது. யுக முடிவு வரை முயன்றாலும் வெறும் வயிற்றுடன் இறைவனை அடைய முடியாது.
ஆகவே முதலில் ஆத்மாவை திருப்தி செய்யுங்கள்.. பசிக்கு உணவளித்து ஜீவனை சாந்தப் படுத்தாமல் கண்கள் எப்படி இறைவனைக் காண முடியும்? வாய் எப்படி இறைவனின் புகழைப் பாடும்? காதுகள் எப்படி அதைக்கேட்கும்..என்றார்.
ஆன்மீக சாதனைகளை விரும்பு வோர் முதலில் ஒரு சோள ரொட்டித் துண்டையாவது சாப்பிட்டாக வேண்டும் என்பதே பாபாவின் விதிமுறை.
மறுநாள் திருமதி கோகலே சீரடிக்கு வந்தார். பாபாவை கண் குளிர தரிசனம் செய்துகொண்டு அமர்ந்திருந்தார். அப்போது பாபா, உணவு மகா விஷ்ணு ரூபம், உண்பவரும் மகாவிஷ்ணு ரூபம். உபவாசம் இருப்பது, சமைக்காத உணவைத்தின்பது, பட்டினி கிடப்பது, நீரும் அருந்தாமல் கிடப்பது,  எதற்காக இந்த வீண் சிரமம்? என்றவர்,
நேரடி யாக அந்தப் பெண்மணியிடம், ‘ எதற்காகப் பட்டினி கிடக்கவேண்டும்? தாதா கேள்கரின் இல்லத்திற்குச் சென்று சந்தோக்ஷமாகப் பூரண போளிகளைச் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு நீங்களும் சாப்பிடுங்கள்! என்றார்.
அந்த அம்மையார் உணவு தயாரிப்பதற்கான சூழலையும் எப்படி ஏற்படுத்தினார் தெரியுமா?
கேள்கரின் மனைவி மாதவிலக்காகி வெளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் திருமதி கோகலே அந்த வீட்டில் தானே சமைக்கவும், தன் கையால் பிறருக்கு பரிமாறிவிட்டுத்தானே சாப்பிடவும் வேண்டியதாகிவிட்டது.
உபவாசம் என்ற பெயரில் பட்டினி கிடப்தை விட, பிறர் பசியாற்றும் உபகாரச் செயல்களை மேற்கொள்வது சிறந்தது என்கிறார் பாபா. அப்படியானால் விரதம் இருப்பது தவறானதா? என்ற கேள்வி பக்தர்கள் மனதில் எழும். தவறானது அல்ல.. ஆனால் சாயி பக்தர்களுக்கு இது தேவையில்லாதது என்பதே பதிலாக இருக்கும். ஏனெனில் பாபாவே தன் பக்தர்கள் மீது எப்போதும் எண்ணம் உள்ளவராக இருக்கும்போது, விரதம் இருந்து எதை சாதிக்கப் போகிறீர்கள்?
விரதத்தால் கடவுள் இறங்கி வரமாட்டார்.

விரதம் என்ற பெயரில் மனத்தூய்மை அடையும் போது நீங்கள் கடவுளிடம் ஏறிச் செல்கிறீர்கள் என்பார்கள். மிதமாக சாப்பிட்டுவிட்டு, உணவு இல்லாதவருக்கு, பசித்தவருக்கு உணவு தரும் வேலையைச் செய்து வாருங்கள்.. உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தானாக சரியாகும்..

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...