”எங்கு போனாலும் நம்பிக்கையும், திடமான அர்ப்பணிப்பும் இருந்தால்தான் நினைத்ததை சாதிக்க நம்மால் முடியும்”
நமக்கு இன்றுள்ள பிரச்சினைகளைவிட நமக்கு ஏற்படுகிற குழப்பங்கள்தான் அதிகம். இந்தக்குழப்பத்திற்குக் காரணம், ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கிற புதிய வாய்ப்புகள், நாம் அறிமுகமாகிற புதிய சூழல்கள். இதனால் இது நல்லதா? அது நல்லதா? என யோசித்து குழம்புகிறோமே தவிர, சரியான முடிவு எடுக்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் இருக்கிற உன்னை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வேன்! என்று பாபா கூறுகிறார். சத்சரித்திரம் கூறுகிறதை கேளுங்கள்.
தீட்சித் போன்ற பக்தர்கள் பாபாவுடன் ஒரு குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பக்தர் கேட்டார்: “பாபா, எங்கே போவது?” என்று!
பாபா சொன்னார்: “ மேலே போ!” என்று!
கேள்விக்கேட்டவர் மேலும் பாபாவிடம் கேட்டார்: ”வழி எப்படியிருக்குமோ?”
”பல வழிகள் உள்ளன. சீரடியிலிருந்தும் ஒரு வழி உள்ளது. ஆனால் இந்த வழி கடினமானது. வழியில் ஓநாய் போன்ற மிருகங்களையும் குண்டு குழிகளையும் காண நேரலாம்!” என்றார் பாபா.
உடனே, தீட்சித் குறுக்கிட்டு, ‘ வழிகாட்டி உடனிருந்தால்?” எனக் கேட்டார்.
பாபா, ”அப்பொழுது எந்தவித குழப்பமும் இருக்காது. வழிகாட்டி உன்னை சிங்கம் ஓநாய் போன்ற மிருகங்களிடமிருந்தும், குண்டு குழிகளில் இருந்தும் காப்பாற்றி சரியான இடத்திற்கு அழைத்துச்செல்வார். அவர் இல்லையென்றால் காட்டில் வழி தவறவும், குழியில் விழவும் கூடும்!” என்றார்.
இந்த சம்பாக்ஷணை, குருவைப் பற்றியது அல்லவா? இது ஆன்மீகத்திற்குத்தானே பொருந்தும் என நினைக்காதீர்கள். பாபா ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமல்ல, லவுகீகத்தில் இருப்பவர்களுக்கும் கடவுள்தானே!
நாம் இந்த விக்ஷயத்தை நமது வாழ்க்கையோடு பொருத்தி தியானிக்கலாம்.
மேலே போ!
நாம் குழம்பும்போது, உடனடியாக சோர்ந்து விடுகிறோம். எல்லாம் அவரது அனுமதியோடும், ஆசியோடும் நடக்கிறது என்ற எண்ணத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும். அடுத்த மாதம் உனக்கு மிகப்பெரிய வேலை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில், இந்த மாதம் செய்கிற வேலையை விட்டுவிடுவது ஆபத்தானது அல்லவா? ஆகவே, இதில் தொடர்ந்து கொண்டே, அந்த வேலையை எதிர்பார்க்கவேண்டும்.
மேலே போ என்ற பாபாவின் வார்த்தைக்கு தொடர்ந்து முன்னேறு என்று பொருள். ஆன்மீகமாக இருந்தாலும் சரி, லவுகீகமாக இருந்தாலும் சரி, முன்னோக்கித்தான் போகவேண்டும். பின்னே திரும்பிப் பார்க்கக்கூடாது. அதுவா? இதுவா என சந்தேகப்படக்கூடாது. தடைகளைத் தாண்டி போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
”பிறந்த குழந்தை வெளிச்சத்தைப் பார்க்கக்கண்கூசுகிறது என்பதற்காக கண்களை மூடிக் கொண்டே இருந்தால், அதனால் கடைசிவரை உலகத்தைப் பார்க்கவே முடியாமல் போய்விடும். நடக்கும்போது விழுந்துவிடுவோம் என பயந்து படுத்தே கிடந்தால், வாழ்க்கையில் அக்குழந்தையால் நடக்க முடியாமலே போய்விடும்.
குழந்தையாயிருந்தபோதே, நீ உலகத்தை உற்றுப்பார்த்தாய்! அந்தப் பழக்கத்தால் இப்போது உன்னால் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. கால்களில் சக்தியில்லாதபோதே, நடக்கப் பழகினாய்.. அதனால் இப்போது மான் போல துள்ளிக் குதித்து ஓடுகிறாய்..
அறியாப் பருவக் காலத்தில் உன் சக்திக்கு மீறிய விக்ஷயங்களை தைரியமாக எதிர்கொண்டதைப்போலவே, இப்போது எதிர்காலத்தைப் பற்றி அறியாத நிலையில் உள்ளபோதும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். முன்பிருந்த அதே தைரியத்தை வளர்த்துக்கொண்டு பிரச்சினையை எதிர்கொள்ள முடியும்! தொடர்ந்து முன்னேறு! ” என்கிறார் பாபா.
எந்த வழியில் முன்னேறுவது?
போகச் சொல்லிவிட்டார். எந்த வழியில் போவது என்பது அடுத்தக் குழப்பம்.
இதுவரை நான் எத்தனையோ வழிகளில் முயன்று பார்த்துவிட்டேன்.. பெரும்பாலானவை தோல்வியில் முடிந்துவிட்டன. நான் ஜெயிக்கலாம் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலும் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. நான் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்தவர்கள் பலரும் இப்படித்தான் தோற்றுப் போய் விட்டார்கள். ஆகவே, எப்படிப்போவது என்று தெரியவில்லை.
இதற்குத் தீர்வாகத்தான் பாபா சொன்னார்: “பல வழிகள் உள்ளன. சீரடியிலும் ஒரு வழி உள்ளது!”
ஆன்மீகத்தில் வழிகாட்டுவதற்கு பல சத்குரு, குருமார்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பினால் உலகியல் வாழ்க்கைக்கும் வழிகாட்டுவார்கள். ராகவேந்திரரை நம்புகிறவர்கள் அவரிடம் வேண்டுவார்கள், ரமணரை நம்புகிறவர்கள் அவரிடம் வேண்டுதல் வைப்பார்கள். சாயியை நம்புகிறவர்கள் பாபாவிடம் வேண்டுவார்கள் அல்லவா? இப்படி பல வழிகள் இருந்தாலும், பாபாவின் வழியும் உள்ளது. அந்த வழி சுலபமாக இருக்கும் என நினைத்து விடவேண்டாம், கடினமானது என்கிறார் பாபா.
நாம் நினைத்தவுடனே அனைத்தும் நடந்து விட வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் அப்படி நடக்காது.. அதற்கான நேரம் வரவேண்டும், நமது நம்பிக்கை அந்த விக்ஷயத்தில் திடமாக இருக்க வேண்டும். சோதிக்கப்படும்போது தளர்ந்துவிடாமல் அவர் மீது உறுதியாக பாரத்தைப் போடவேண்டும்.
இப்போதுள்ள மனநிலையில் அதெல்லாம் சாத்தியப்படாது.. என்கிறார் பாபா. இது சாத்தியமில்லாவிட்டால் வேறு வழியில் போகலாம் எனச் சென்றாலும், அதுவும் சாத்தியம் ஆகாது. எங்கு போனாலும் நம்பிக்கையும், திடமான அர்ப்பணிப்பும் இருந்தால்தான் நினைத்ததை சாதிக்க நம்மால் முடியும்.
நம்பிக்கையை - குருவை மாற்றிக்கொண்டே இருந்தால் எந்தக் காலத்திலும் வெற்றிகிட்டாது. இதனால்தான் பாபா ; “இந்த வழி கடினமானது!” என்றார்.
எச்சரிக்கை தேவை:
வழியில் ஓநாய், சிங்கம் போன்ற மிருகங்கள் இருக்கும்.. குண்டு குழிகள் இருக்கும் என்று பாபா எச்சரிக்கிறார்.
அ) மிருகங்களிடம் ஜாக்கிரதை
ஓநாய், சிங்கம் என பாபா குறிப்பிடுவது காட்டில் வாழ்கிற மிருகங்கள் அல்ல.. நம்முடனே இருந்து கொண்டு நம்மை மறைமுகமாகவும், நேரடியாகவும் அழிப்பதற்காகக் காத்திருக்கிற பகைவர்களை - போட்டியாளர்களை, பொறாமைக்காரர்களைப்பற்றித்தான் அவர் இப்படி எச்சரிக்கிறார்.
பலராக கூட்டு சேர்ந்து நம்மை வீழ்த்த நினைப்பவர்களும் இருக்கிறார்கள், தனியாளாக இருந்து போட்டுக்கொடுத்து நம்மை காட்டித் தந்து வீழ்த்துபவர்களும் இருக்கிறார்கள்.
நமக்கு எதிரிகள் பணியிடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, நண்பர்கள் வடிவில், உறவுக்காரர்கள் வடிவில், தெரிந்தவர்கள் வடிவில், சில சமயங்களில் சொந்த இரத்த உறவுகளிலேயே எதிரிகள் தோன்றிவிடுவார்கள். அதுமட்டுமல்ல, ஆலோசனை தருகிறவர்கள் என்ற பெயர்களில் புகுந்துகொண்டும் நம்மை அழித்துவிடுவார்கள்.
சாயி பக்தர்கள் என்ற பெயரில் அறிமுகமாகி, எத்தனையோ பேருடைய குடும்பங்களை நாசம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.
நீ யாரை அதிகமாக நம்புகிறாயோ, அவரால் ஏமாற்றப்படுவதும் உண்டு. நீயுமா நண்பா? என ஜூலியஸ் சீசர் கேட்டதைப் போல, எல்லோருடைய வாழ்விலும் இந்த நிகழ்வுகள் உண்டு.
இத்தகைய நபர்களால் இதுவரை நீ பாதிக்கப்பட்டு இருப்பாய்.. இதனால் யாரைப் பார்த்தாலும் அவர்கள் மேல் ஒருவித அச்சம் உனக்கிருக்கும். குழப்பம் நீடிக்கும்..
இப்படிப்பட்ட நபர்கள் உன்னைச் சுற்றியிருக்கும் போது வெற்றி எப்படி வரும்?
உன்னுடைய சக்தியை மீறி, வாழ்வோம் என்ற நம்பிக்கை அற்றுப் போகும்வகையில் உன்னை இந்த விலங்குகள் எதிர்கொள்ளும். அப்போது வெற்றி எங்கிருந்து வரும்?
பாபாவை நம்பினால் மட்டுமே வரும்.
இப்படிப்பட்டவர்கள் யாருமில்லை என நீ நினைத்து நடைபோட்டால் அடுத்த சோதனை ஒன்று காத்திருக்கிறது.. அது குண்டும் குழியும் நிறைந்த வழிகள்..
ஆ) வழிகளில் எச்சரிக்கை தேவை்
எதிரிகள் யாருமே இல்லை. ஆனால் இதில் தப்பிவிடலாம் என நம்பிக்கொண்டிருப்போம். நாமே முயன்று தனிவழியொன்றை உருவாக்குவோம்.
மற்றவர்கள் போன பாதைதானே என நினைத்து நாமும் அதில் போகமுயன்று விழுந்துவிடுவோம்.
ஏன் இப்படி?
பாதைகள் எல்லாமே உறுதியானவையோ, தெளிவானவையோ கிடையாது. மலர் போர்த்தப்பட்ட பாதையாக இருந்தாலும் அதன் அடியில் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
ஆர்வத்தால் நாம் ஒன்றில் ஈடுபட்டு பிறகு
அதில் சிக்கிக்கொள்வோம். இதைத் தவிர்க்கத்தான் ”எண்ணித் துணிக கருமம்” என்றார் வள்ளுவர்.
லாபம் வருமென நினைத்தது நட்டத்தில் முடிவதும், கடன் வாங்கி வீடுகட்டி, வட்டிக்காக வீட்டை விற்பதும், நல்லது என நினைத்து செய்து கெட்டதை சம்பாதிப்பதும் போன்ற விக்ஷயங்களே அனைத்தும் குண்டு குழிகளான பாதைகள்.
இத்தகைய விக்ஷயங்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாத நிலை வந்துவிடும்.
இதெல்லாம் பாபாவின் எச்சரிக்கையில் இருக்கிற விக்ஷயங்கள்.
பிறகு என்ன செய்வது?
வழி காட்டியை வைத்துக்கொள்ள வேண்டும்.
வழிகாட்டியின் அவசியம்:
சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். குருடனுக்குக் குருடன் வழிகாட்ட முடியாது என்பார்கள்.
இதெல்லாம் எதற்காக என்றால், விக்ஷயம் தெரியாத நாம், விக்ஷயம் தெரிந்த நல்லவர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காக!
மேல் நாடுகளில் மலைச்சறுக்கு, மலை ஏறுதல் போன்றவற்றுக்குச் செல்பவர்கள், தங்களுடன் ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்வார்கள்.
ஏற்கனவே, அந்த வழிகளைப் பற்றிய அறிமுகம் வழிகாட்டிக்கு இருப்பதால், அவர் தன்னுடன் வருகிறவர்கள் வழி தவறிவிடாமல் சரியான வழியை காட்டுவார். அது மட்டுமல்ல, மலையில் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் - எது சுலபமாக கடக்கக் கூடியது? எந்த இடத்தில் மலைப் பாம்பு போன்றவை இருக்கும் என்பன வற்றையெல்லாம் அறிந்திருப்பதால், தன்னுடன் வருபவர்களுக்கு இவை பற்றிய அனைத்துத் தகவல்களையும் தருவார்.
கூடவே, போகும்போது தான் வைத்துள்ள நாய்களை முன்னால் அனுப்பி, சூழல்களை அறிந்து கொள்வார். புதர்களில் மலைப் பாம்புகள் இருக்கக் கூடும் என்பதால் கற்களை எடுத்து வீசிக்கொண்டே நடக்கவைப்பார்..
அதேபோல, மலை ஏறுகிறவர்களை தன் பின்னால் வரச் சொல்லிவிட்டு, தான் முன்னால் செல்வார். உயிர்போனாலும் தன்னுயிர் போகட்டும், தன்னை நம்பியவர்கள் வாழட்டும் என நினைப்பார். இப்படித்தான் பாபாவும்!
நாம் அவரை முழுமையாக நம்பி, சரணடைந்து விட்டால் சரியான வழியை எளிமையாகத்தெரிவித்து, நமது செயல்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதற்காக நம்முடனேயே இருப்பார். அதுவும் ஜன்ம ஜன்மமாக!
அவர் சரியான வழியைக் காட்டுவதற்கு, நீங்கள் அவருக்கு ஒத்துழைப்பை முழுமையாகத் தாருங்கள்.
வெற்றி பெறுங்கள்.
ஸ்ரீ சாயி வரதராஜன்