2015 ஜனவரி சீரடி
யாத்திரை வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. 98 பேர்
கொண்ட குழுவுடன் பாபாவை தரிசித்தது மட்டுமல்ல, ஒரு சிறிய அளவு
பிரச்சினை கூட எழாமல் அவர்களாக வரிசையை
உருவாக்கிக் கொண்டு
ஒத்துழைப்புத் தந்து, விட்டுக்கொடுத்து புனித
யாத்திரையாக இந்தப் பயணத்தை மாற்றினார்கள். இந்தக் குழுவில்
வந்தவர்களுள் பலர் என்னுடன் ஏற்கனவே பலமுறை பயணித்தவர்கள்.
பாபாவை
மட்டுமே தரிசிக்க வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் வந்தவர்கள். நம்முடைய அன்புக்குரிய சாரதா அம்மா உட்பட
சிலர் ரயிலில் அமர்ந்து சத்விக்ஷயங்களைப் பேசிக்கொண்டு வந்தபோது, அழகிய குரலில் பாடிக்கொண்டு
வந்த ஒரு முஸ்லிம் பாடகனை
அழைத்து அமரச் சொன்னேன்.
இன்னும்
சற்று பாடுமாறு நான் விரும்புவதை உணர்ந்துகொண்ட அவன், என்
அருகே அமர்ந்து உரத்தக் குரலில் பாடினான். கேட்க
இனிமையாக இருந்தாலும் பொருள் தெரியாது அல்லவா?
சாரதா அம்மாவிடம் இதற்கான பொருளை விசாரித்தபோது,
பாடலை மொழியாக்கம் செய்து கூறினார்.
அது
இதுதான்:
உன்னை
மட்டுமே நம்பிச் செயல்படு. வீட்டில்
கைகட்டி உட்கார்ந்திருந்தால்
உனக்கு எதுவுமே கிடைக்காது. இப்போதுள்ள கலியுகத்தில் தினமும் ஐந்து நிமிடங்களாவது அல்லாவைத் தொழ வேண்டும். அப்படி எவன் ஒருவன்
செய்கிறானோ அவனை அல்லா கண்டிப்பாகக் காப்பாற்றுவார்.
உனக்கு
எத்தனை சகோதரர்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் அனைவரும் உனது அன்புக்காக
யாரும் காத்திருப்பது இல்லை. சொத்துக்காகவே இருப்பார்கள்.
அந்தப் பணமும் சொத்தும் இல்லாவிட்டால் எவனும் உன்னைத் தீண்டமாட்டான். கஷ்ட காலத்தில்
உன்னிடம் வரமாட்டான். உதவமாட்டான். இதுதான் மாயை.
ஆகவே,
எல்லா நேரமும் அல்லா மீது
பக்தி வைத்து அவரைக் கூப்பிட்டால் அவர் நம்மோடு உற்ற
உறவாக இருப்பார்.
இந்தக்
காலத்தில் மாதா பிதாகூட சொத்துள்ள
பிள்ளையை மட்டுமே அண்டியிருப்பார். ஆகவே, அம்மா அப்பா,
அண்ணன் தம்பி, அக்கா தங்கை,
மகன் மகள் யாவும் மாயை.
உன்னுடைய
கடமையைச் செய்துகொண்டு அல்லாவை நினைத்தபடி போய்க்கொண்டே இரு. அவன் உன்
கூடவே இருப்பார். இதுதான் கலியுகம்.
ரயில்
பாடகனுக்கு நூறு ரூபாய் அன்பளிப்பு
செய்து அனுப்பினேன்..
உறவுகளின் நிலையை நினைவு படுத்தியமைக்காக!
No comments:
Post a Comment