Sunday, August 2, 2015

உன் விருப்பம் நிறைவேறும் நேரம் வரும்!

சாயி பாபா மிகப் பெரிய அற்புத மகான். தனது பக்தர்கள் மீது நிஜமான அப்பு கொண்டவர். பக்தர்களை கஷ்டங்களில் இருந்தும் கவலைகளில் இருந்தும் கைதூக்கிவிட அவதரித்து வந்தவர். பக்தர்களின் நலனை மட்டுமே கவனத் தில் வைத்து செயல் படுகிறவர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் எந்த வித சிரமத்தையும் மேற் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்.
தன்னை மட்டுமே லட்சியமாகக் கொண்டிருந்தால் போதும், தன் பக்தர்களுக்காக எல்லா வேலைகளையும் அவர் செய்து முடித்துவிடுவார். இந்தத் தகவலை அவர் பலமுறை கூறியுள்ளார்.
எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக் கொண்டு இருந்தால் போதும்.. உங்களை ஏழு கடல்களுக்கு அப்பாலும் கொண்டு போய் சேர்ப்பேன் என்று உறுதியளித்தார்.
சாயி சாயி என்று சொல்லிக் கொண்டு இருந்தால் போதுமா? சொன்னால் பலன் கிடைக்குமா? சாயியின் சங்கத்தில் இருக்கவேண்டும் என்பது தான் இதற்கு அர்த்தம். சத்சரித்திரம் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் தனது குருவின் பெருமையைப்பேசுகிற இடத்தில் பாபா, தனது பக்தன் இருக்க வேண்டிய விதத்தை சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். படித்துப் பாருங்கள்.
சாயியின் சங்கத்தில் இருப்பது என்றால் என்ன பொருள்? எப்போதும் அவரது நினைவுடன் இருக்கவேண்டும் என்பது பொருள். சில சமயம் நான் அவரது காலடியில் இருக்க அனுமதிக்கப்பட்டேன், சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன்.. ஆயினும் எப்போதும் அவரது சங்கமத்தின் சுகத்தை அனுபவித்தேன் என்று பாபா தனது குருவின் மேன்மையைக் கூறினார்.
நீங்கள் எங்கிருந்தாலும் அவர் மீது மாறாத அன்பு செலுத்தினால் போதும், அவரை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தால்போதும். உங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிவிடுவார்.
யார் ஒருவர் பிறிதொன்றின் மீது நாட்டம் இல்லாமல் அவர் மீதே நாட்டம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு அனைத்தும் கிடைத்து விடும் என்பது அனுபவம்.
”நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. ஆனால் நான் எப்போதும் உங்களை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கிறேன்”  என்று கூறினார் பாபா..
எப்போதும் பக்தனையே நினைத்து, பக்த நாம ஸ்மரணம் செய்கிறவர் நம் பாபா. ஆகவேதான் சாயி பக்தர்கள் எப்போதும் தைரியமாக இருக்கவேண்டும் என நான் போதிக்கிறேன்.
நமக்குத் தேவையான ஒரு விக்ஷயத்தில் கால தாமதம் ஆகலாம்.. கேட்டது கிடைக்காதிருக்கலாம். உடனே மனம் உடைந்துவிடாதீர்கள். பொறுமையை கடைப்பிடியுங்கள்.. உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிற அவர், உங்கள் சார்பாக நினைப்பார் என்பதில் தெளிவு கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் நினைப்பார். அவர் நினைப்பது மட்டுமே நடக்கும்.
வழி தெரியாமல் தவிக்காதீர்கள்.. நிச்சயமாக வழியைக் காட்டுவார். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும். நீங்கள் அவரது நினைவாக எப்போதும் இருந்தால் பதற்றப்படவோ, நடப்பதை நினைத்து துக்கப்படவோ மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அவரது சங்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சார்பாக அவர் செயல்படுகிறார்.. உங்கள் பிரச்சினை அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்கிறார்.
இதுவரை ஏன் காட்டவில்லை? அதற்கு இன்னும் நேரம் வரவில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நாம் செய்யமுடியாததை நாள் செய்யும் என்பார்கள்.நேரம் என்பது அவ்வளவு முக்கியமானது. பைபிள் கூட இதை அழகாகக் கூறுகிறது.
இயேசு கிறிஸ்துவை கொல்வதற்காக அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் முயலும் போதெல்லாம் அவர் தப்பித்துக் கொள்வார். அந்த சமயங்களில் அவர் பயன்படுத்தும் வார்த்தை, இப்போது வேளை வரவில்லை என்பது.
சிஷ்யனால் காட்டிக்கொடுக்கப்பட்டு, அவர்கள் இயேசுவை பிடிக்க யூதர்கள் வரும்போது அவர், ”எழுந்திருங்கள் போவோம்... இப்போது வேளை வந்தது” என்பார். ஆகவே, எல்லாவற்றிற்கும் நேரம் உண்டு.
உண்டாக்க ஒருகாலம், பயன்படுத்த ஒரு காலம், அதை தள்ளி வைக்க ஒரு காலம், அழிக்க ஒரு காலம்.. என ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காலம் இருக்கும்போது, நமக்கும் காலம் வர வேண்டும் அல்லவா? அந்த நேரத்திற்காகக் காத்திருங்கள்..
நான் கஷ்டப்பட்ட காலங்களின்போது, எனது ஜாதகத்தை வேறு பெயர் மாற்றி அனுப்ப வைத்தேன். ஆராய்ந்த வல்லுநர்கள், இந்த ஜாதகன் ஆயுள் முழுக்க கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கப்பிறந்தவன். நன்மையை அனுபவிக்க முடியாதவன். இவன் உழைப்பான், அதன் பலனை பிறர் உண்பார்கள். இவனை ஏணியாக வைத்து பிறர் ஏறிச்செல்வார்கள், இவனைத் தரையில் விட்டு விடுவார்கள்.. பூர்வ கர்ம வினையின் தாக்கம் அதிகம் உள்ள ஜாதகம் என்றார்கள். அவர்கள் சொன்ன பிறகு என் வாழ்க்கையில் நல்ல நேரமே வராது என்ற உண்மையை நான் புரிந்துகொண்டேன்..
ஒரே ஒரு துளி வாய்ப்பு.. அதாவது கஷ்ட நேரத்தில் எப்படியோ பாபாவை வழிபட ஆரம்பித்து பல சோதனைகளைத் தாங்கினேன். அனைத்தையும் பாபா மாற்றினார். என்னிடம் காசு நிற்காது என்பது உண்மைதான்.. ஆனால் யாரிடம் காசு நிற்குமோ அவர்களை பக்கத்தில்  வைத்துக் கொண்டு விட்டால் போதுமே- எனது கஷ்டம் தீராது என்பது உண்மை என்பது தெரிந்த பிறகு, பிறரது கஷ்டத்தை நீக்க உதவினால் என்ன என நினைத்தேன்.
தனி மனிதனுக்காக உழைத்து ஏணியாவதை விட, ஒரு சமுதாய மாற்றத்திற்காக உழைத்துப்பார்ப்போமே... இப்படி எனது சிந்தனையை மாற்றிக் கொண்டேன்.. விளைவு? மிகப்பெரிய இடத்தை பாபா தந்தார்.
எனது நேரத்தை மாற்றும் பொறுப்பை பாபாவிடம் ஒப்படைத்தேன்.. நான் காத்திருந்தேன்.. அவரது சங்கத்தில் பொறுமையோடு இருந்தேன்.. சதா சாயி நாம ஜெபம் செய்தேன்..
பாபா குறிப்பிட்ட நேரம் வந்தது... எல்லா கிரகங்களையும் செயலிழக்க வைத்தார். எந்த கிரகத்தால் தோக்ஷமோ, எது என்னை அழிக்குமோ அந்த கிரகத்தைக் கொண்டே என்னை வாழ வைத்தார், எனது புகழை உயர்த்தினார். செல்வம் தந்தார், செல்வாக்குத் தந்தார்..
என்னால் கஷ்ட நிவர்த்தி செய்யப்பட்டவர்கள் எனது தேவைகளை கவனித்துக் கொள்கிறார்கள். என்றால் உருவாக்கப்பட்டவர்கள் எனது வேலையை செய்கிறார்கள். ஆக, நான் பாபாவை நம்பியதால் எனது நேரம் நல்லதாக மாறியது,தப்பித்தேன்.
இன்றைக்கும் நமது பிரார்த்தனை மையத்தை நிர்வகிக்கும் பாஸ்கர் அப்பா பேசும்போது, எப்படி ஐயா உங்களால் துரோகிகளையும், விரோதிகளையும் கூட விலக்காமல் சரிசமமாக நடத்த முடிகிறது? உங்களிடமிருந்து கொள்ளையடிப்பது தெரிந்தும் அவர்களை விலக்காமல் எப்படி அனுசரித்துப் போக முடிகிறது? எனக் கேட்பார்.
எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? என்னுடைய நேரத்தை பாபா கவனித்துக் கொள்கிறார்.. யாரை எப்போது எங்கு வைக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.. என்னை மோசம் செய்த பிறரை பாபா தண்டித்தாரா? கண்டித்தாரா? எனக்குத் தெரியாது. என்னை வாழவைத்தார். என் நேரத்தை நல்ல நேரமாக்கினார். அது எனக்குத் தெரியும்.
எனக்குச் செய்த பாபா உங்களுக்குச் செய்யாமல் போவாரா என்ன?
தைரியமாக இருங்கள். இதுவரை எந்த கஷ்டம் உங்களை பாதித்ததோ தெரியாது. மிக விரைவில் உங்கள் நேரம் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
ஸ்ரீ  சாயிவரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...