Sunday, August 2, 2015

எப்போதும் மகிழ்ச்சியாய் இரு!

அன்புள்ள மகளே!
உன்னோடு மனம் விட்டுப் பேச மனம் ஏங்கிக்கிடக்கிறது, ஆனால் உன்னைப் பார்க்கும்போது பயமாகவும் இருக்கிறது, என்ன செய்ய!
”என்ன அப்பா இது, நான்தான் அடிக்கடி உன்னை கொஞ்சுகிறேன், மனம் விட்டுப் பேசுகிறேன்.. அப்படி இருந்தும் மனம்விட்டுப் பேச ஏங்குவதாக சொல்கிறீர்களே, என்று கேட்கலாம்.
நீ கோபமாக இருக்கும்போதும், எரிச்சலாக இருக்கும்போதும், கவலையோடு இருக்கும்போதும் உன்னுடன் மனம் விட்டுப் பேச நினைப்பேன்..
குழந்தாய்.. அந்த இயற்கை மலைகளின் அருகே மிகப் பெரிய பள்ளங்களையும், இயற்கையான இடத்தின் அருகே குப்பைக் கூளங்களையும் கவனித்துப் பார்த்திருக்கிறாயா?
இவையெல்லாம் நான் படைத்தபோது இருக்கவில்லை.. மனிதனைப் படைத்தபோது அவனது தேவைகளுக்காக, ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவனால் உருவாக்கப்பட்டவை. மலையை உடைத்து அதன் அழகைக் குலைத்து இருப்பது தனது தேவைகளுக்காகத்தானே! இயற்கை அழகின் மீது குப்பைக் கூளங்களையும், கழிவுகள் போன்றவற்றையும் கொட்டியிருப்பது தன்னிடம் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ளத்தானே!
இங்கே பார் குழந்தாய்!
உன்னைப் படைத்தபோது உனக்கு கவலை என்றால் என்னவென்று தெரியாது, கோபம் என்றால் என்னவெனத் தெரியாது.. பிரச்சினைகளின் சுவடு கூட தெரியாது.. ஒன்றே ஒன்றை மட்டும் வைத்தேன்.. அது சிரிப்பு.. அதாவது மகிழ்ச்சி.. உனது மகிழ்ச்சியால் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை பரிசாகத் தந்தேன்.. நீ ஆடை உடுத்தும் போது பிறருக்கு மகிழ்ச்சி, மழலைப் பேசும் போது பிறருக்குக் கேட்கக் கேட்க மகிழ்ச்சி, நீ நடக்கும் போது மகிழ்ச்சி, படிக்கும்போது மகிழ்ச்சி, பிறருடன் கலந்துரையாடியபோது மகிழ்ச்சி..
அப்போது பேசினால் நீ பொறுத்துக்கொண்டு என் பேச்சை கவனிப்பாயா, என்ன? அதனால்தான் அந்த நேரத்தில் என் மனம் ஏங்குவதைச் சொன்னேன்.
நான் வெளியிடங்களுக்கு உன்னை அழைத்துப்போகும்போதெல்லாம் அந்த இடத்தில் உள்ள இயற்கை அழகை ரசித்துப் பார்த்தது உண்டா?
மலைகளையும் பள்ளத்தாக்கையும் நான் அழகாகப் படைத்தேன்.. மரங்களையும், செடி கொடிகளையும், மலர்களையும் காய் கனிகளையும் செம்மையாகப் படைத்தேன்.. இந்த அழகை எங்காவது, என்றாவது பார்த்து ரசித்தது உண்டா?
இருக்கும் கவலையிலும், பிரச்சினையிலும் இதையெல்லாம் ரசிக்க ஏது நேரம் என்றுதானே இருந்துவிடுகிறாய்?
இப்படி எங்கும் எதிலும் உன் மூலம் மகிழ்ச்சி என்ற செய்தியைத்தான் நான் பிறருக்குத் தந்தேன்.. நீ வளர வளர இன்றை ஒன்றுடன் இன்னொரு விக்ஷயமாகச் சேர்த்துச் சேர்த்து வளர்த்துக் கொண்டு வந்தாய்.. வாழ்க்கையில் ஈடுபட்ட பிறகு நான் முழுமையாக வைத்த மகிழ்ச்சியை, நீ உனது உணர்வுகளில் ஒன்றாக்கிக் கொண்டாய்.. நாட்கள் செல்லச் செல்ல மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே உனக்கு மறந்துபோனது..
இப்போது நீ ஆடை உடுத்தும்போது பிறரது கண்களுக்கு அது உறுத்தல், நகை அணிந்தால் பிறரது மனதுக்குப் பொறாமை.. பிறரிடம் பேசினால் சந்தேகம், நீ நடந்தால் நடக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு, பிறருடன் கலந்துரையாடினால், ஏதோ வம்பு வரப்போகிறது என்ற பயம்.. எல்லாம் உனது நன்மைக்கு என்ற பெயரில் உனது சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு என்பதை அப்போது உணர்ந்திருக்கமாட்டாய்.
இதன் காரணமாக, எது உனக்கு துவக்கத்தில் நன்மையாக இருந்து வந்ததோ அது இப்போது உனக்குத் தீமையாக மாறிவிட்டது. இதனால் எப்போதும் கவலை, டென்க்ஷன், கோபம், விரக்தி, வெறுப்பு என ஏதாவது ஒன்றில் மூழ்கிப் போய் இருக்கிறாய்.. அந்தக் கட்டுப்பாடு இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும் என்றால், நீ பொறுப்பில்லாதவளாக மாறி இருப்பாய். ஆகவே, உனது சுதந்திரம் உனது நன்மைக்காக வரையறைக்குள் கொண்டுவரப் பட்டு அதைப் பின்பற்ற பழக்குவிக்கப் பட்டாய்.
இதெல்லாம் இருக்கட்டும்.. நீ பிறந்த போது உன்னை தாயிடம் மட்டும் அணுகுமாறு வைத்தேன்.. அந்த கதகதப்பில் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தேன். இப்போது வளர்ந்த பிறகு உனது நிலையைப் பார்..
உன்னை கவனித்துக் கொள்ளவும், நீ கவனித்துக் கொள்ளவும் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.
ஆனால், நீ உணர்வு ரீதியாக தனித்துப் போய் இருக்கிறாய்.. ஏன்?
இதுதான் வாழ்க்கை என ஒற்றை வரியில் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், குழந்தாய், என் இயற்கையின் வழிக்கு மாறான ஒரு மாற்றம் ஏற்பட்டது அல்லவா? அந்த மாற்றம் தந்த பரிசு இது.. இதற்குப் பெயர்தான் கர்மா.
குழந்தையாக இருந்தபோது எதிர்பால் இனத்தவர் யாருக்காவது நீ முத்தம் கொடுத்திருந்தால், அது அப்போது அன்பு, கன்னிப் பருவத்தில் தந்தால் அது காதல், அதற்குப் பிறகுக் கொடுத்தால் காமம்.. ஒரு முத்தம்கூட பருவத்திற்குப் பருவம் மாறுகிறது
பார்த்தாயா? இது தான் வாழ்க்கை. இதையெல்லாம் யோசித்துப் பார்க்க எங்கே நேரம் இருக்கிறது? இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், குழந்தாய்.. முன்பு நன்மையாக இருந்த ஒன்று, பிறகு தாமாகவே தீமையானதாக மாறும். அந்தந்த செயல்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் கற்பிக்கப்படுவது இயல்பானது, தவிர்க்க முடியாதது. எனவே, நீ அனைத்தையும் சரிபார்த்து உனக்கு எது நன்மை தருமோ அதைப் பின்பற்ற வேண்டும்.
குலை தள்ளும் முன் உடல் வளர்க்கத் தேவைப்பட்ட நீர், குலை வெட்டிய பிறகு வாழைக்கு அழுகுவதாக முடிந்து அதை அழித்துவிடும்.
இப்படித்தான் அனைத்தும் முதலில் நன்மையாகவும் பிறகு தீமையாகவும் மாறும். சரி, இதெல்லாம் எதற்கு? எதற்காக இந்த பீடிகை என எரிச்சல் படுகிறாயா?
துவக்கத்தில் நல்லவர்களாக, நன்மை செய்பவர்களாக இருந்தவர்கள் அனைவரும் இப்போது உனக்கு வேண்டாதவர்களாகவோ அல்லது அவர்களுக்கு நீ வேண்டாதவளாகவோ தெரிவது கால மாற்றத்தின் விளைவு. ஆகவே, இதை தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறேன்.
உன் வீட்டில் கணவன் – நீ -  பிள்ளைகள் என ஒன்றாக இருந்து, ஒரே படுக்கையில் படுத்த காலங்கள் அனைத்தும் இப்போது கனவாகக் கூட வருவது கிடையாது.. அவரவர் அவரவர் வேலையை பார்க்கிறீர்கள். உங்கள் வேலைக்கு யார் உதவி செய்கிறார்களோ, உங்களுக்கு யார் தேவைப்படுகிறார்களோ அவர்களுடன் உங்களது நேரம் அதிகமாகச்செலவாகிறது..
இதனால் கணவன் மீது பாசம் இரண்டாம் பட்சமாகிறது, மனைவி மீது பாசம் இரண்டாம் பட்சமாகிறது.. பிள்ளைகள் உங்கள் மீது விருப்பம் கொள்வது அவர்களது விருப்பத்தைப்பொறுத்தது ஆகிறது.
ஏதோ கடமைக்காக என்று வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விடுகிறீர்கள். இதுவும் கால மாற்றத்தினால் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழ்வது தவிர்க்க முடியாதது ஆகிறது.
இப்படிப்பட்ட சூழல்களில்தான் குடும்பத்தில் தவறுகள் நடக்க ஆரம்பிக்கின்றன. ஒருவர் மீது ஒருவர் குறை காணும் நிலை உண்டாகிறது. நீ ஒன்றைச் சொன்னால், அது அவர்களுக்கு எரிச்சலை தந்து, நீ குடும்பப் பெண்ணா அல்லது பள்ளிக்கூட ஆசிரியையா? எனக் கேட்கும் அளவுக்குப் போகிறது.
உங்களுக்குள் தேவையான ஒற்றுமை இல்லாத காரணம், ஒரு வீட்டுக்குள்ளேயே பொறுப்பில்லாத பலரை உருவாக்குகிறது. குடும்ப உறவுகள் சிதைய ஆரம்பிக்கிறது.. வாழ்க்கை என்பதில் தேவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அது ஒரு முழம் பூ வாங்குவதாக இருந்தாலும், உனது கணவருக்கு ஒரு பெல்ட் வாங்குவதாக இருந்தாலும்கூட.. தேவையாகி அது செலவைத் தருகிறது.
செலவுகளில் பிள்ளைகளின் கல்வி, குடியிருக்க வாடகை அல்லது சொந்த வீடு, நெருங்கிய உறவுக்காரர் திருமணம் போன்ற சுபச் செலவுகள், யார் வந்தாலும் வடித்துப் போட்டு, செலவுக்குத்தந்தனுப்புவது, விருந்து வைப்பது, தகுதிக்கு மீறி செலவு செய்வது என்பன விரையச் செலவுகள், நன்றாகப் பேசி நம்மிடம் வாங்கியவர்கள் திருப்பித்தராமல் போனதால் ஏமாந்தது, சேமித்து வைத்து காரணம் தெரியாமல் இழந்தது, தேவையற்றச்செலவுகள் என பல வந்து சேர்ந்து கையிருப்பைக் கரைத்துக் கொண்டிருக்கும்.
இந்தச் சூழல்கள் குடும்பத்தில் தற்காலிக மகிழ்ச்சியைத் தந்து நிரந்தர மகிழ்ச்சியை பிடுங்கிக்கொண்டு போய்விடும்.
இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் நல்லது போல உள்ளே கால் வைத்து உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்தி பிறகு பிரச்சினையைப் பதியம் செய்து விட்டுப் போய்விடும். அதன் பிறகு மகிழ்ச்சி, நிம்மதி என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
நான் மகிழ்ச்சியில் துவக்கி வைத்ததை கால மாற்றத்தினாலும் உங்கள் நடத்தையில் நீங்கள் கவனம் செலுத்தாதினாலும் கவலையில் முடித்துக் கொள்கிறீர்கள்..
நான் எதிலும் மகிழ்ச்சி என்ற ஒன்றைத் தந்தேன். அதில் உங்கள் சவுகரியத்திற்காக கோபதாபம், எரிச்சல், பொறாமை, அழுகை, சோகம், கவலை, டென்க்ஷன் என மாற்றிக் கொண்டீர்கள்.
இப்போது உனது கணவர் உன் மீது எரிச்சல் படுவதைப் பார்க்கும் போது, அவருக்கு யாரோ வசியம் செய்துவிட்டார்கள் என நினைப்பாய். அதற்கேற்றார் போல உன்னிடம் மட்டும் அவர் எரிச்சலைக் காட்டி மற்றவர்களிடம் நெருக்கத்தைக் காட்டுவார். இதைப் போல நீயும் நடந்துகொண்டால் உன் மீது அவருக்கு சந்தேகமே வந்துவிடும்..
இதுபோன்று எண்ணற்ற விக்ஷயங்களால் நீ பாதிக்கப்பட்டு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறாய்.. இதையெல்லாம் நீயே தனியாக இருக்கும்போது அமர்ந்து யோசித்துப் பார்.
இதையெல்லாம் சரிப்படுத்த முடியாதா? நிச்சயம் சரிப்படுத்தலாம். அதற்கு நீ நான் சொல்வது போல நடந்துகொள்ள வேண்டும். நிறைய சொல்ல நேரம் கிடையாது, சுருக்கமாகக் கூறுகிறேன்.
முதலில் நீ மாறவேண்டும்!
நான் உன்னிடம்தான் மகிழ்ச்சியை வைத்தேன். மகிழ்ச்சிக்குக் காரணம் என உன்னைத்தான் தேர்வு செய்தேன்.. ஆனால் அந்த மகிழ்ச்சிக் குலைவுக்கு நீதான் காரணம் என நான் கருதுகிறேன்.. பிறர் மீது நீ குறை சொல்வதை நான் விரும்பமாட்டேன்.
உன்னைத் திருத்திக் கொண்டால் எல்லாம் சரியாகும் என்பதுதான் எனது கோட்பாடு. ஆகவே, முதலில் நீ உன்னை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னிடம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
உனது அணுகுமுறையில் மாற்றம், பழகுவதில் மாற்றம், செயல்படுவதில் மாற்றம் என இன்று முதல் அந்த மாற்றம் உன் வாழ்வில் இடம் பெற வேண்டும்.
அப்போது நீ நினைத்தபடி உன் குடும்பம் மாறும். நீ மாறுவதற்கு முதல் அடையாளம் எதிலும் விட்டுக் கொடுப்பது..
உனக்கு விருப்பமில்லாத விக்ஷயத்திலும் நீ விட்டுக் கொடுக்க வேண்டும். உன் வீட்டில் பிறர் கூறும் கருத்துக்கு மதிப்புத்தர வேண்டும். அவர்களைப் பேசவிட்டுக் கேட்பதற்கு தயாராக இருக்கவேண்டும்.
சுருக்கமாகக் கூறினால் உனது குடும்பத்தாரிடம் நீ தோற்கத் தயாராக இருக்க வேண்டும்.
நிறைய பேசவேண்டும்!
நிறைய பேசுவது என்றால் ஏதோ வம்பளப்பது என்று நினைக்கிறார்கள். முதலில் உனது மனச்சுமைகளை இறக்கி வைப்பது பற்றி பேசு. பிறகு, உன் பிள்ளைகள், கணவர், மாமனார் மாமியார், அக்கம் பக்கத்தார் ஆகியோரின் நலனை மட்டுமே பேசு..
அவர்கள் நலனில் நீ அக்கறை காட்டுவதை அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் பேசு..
உனது மனதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசாமல் உனது விருப்பங்களையும், பிறர் மீது நீ வைத்திருக்கிற அன்பையும், அவர்கள் மீது கொண்டுள்ள அக்கறை பற்றிய விக்ஷயத்தையும் நீ பேசவேண்டும். குடும்பத்தாரோடு அமர்ந்து நீண்ட நேரம் பேசுவதை நடைமுறைக்குக் கொண்டு வா.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் நல்லது போல உள்ளே கால் வைத்து உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்தி பிறகு பிரச்சினையைப் பதியம் செய்து விட்டுப்போய்விடும். அதன் பிறகு மகிழ்ச்சி, நிம்மதி என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்து பிறர் மனம் புண்படுவதுபோலப் பேசுவதைத் தவிர்த்து விடு. பல வேளைகளில் நாம் கிண்டலுக்குப் பேசும் பேச்சுக்கள்தான் நமது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
பேசும்போது குரலை உயர்த்திப் பேசாமல், தாழ்த்திப் பேசு.. அந்தக் குரலில் கனிவு தெரியப்பேசு.. இதை நீ செய்தால் மற்றவர்கள் உன்னிடம் நெருங்கிப் பழக ஆரம்பிப்பார்கள். அப்போது உனது நிலைமை மாறிவிடும்.
பெண்டிர்க்கு அழகு எதிர்பேசாதிருத்தல் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பாய். உனது அலுவலகம் வேறு, குடும்பம் வேறு. குடும்பத்தில் நீ சாதிக்க வேண்டுமானால் எப்போதும் குரலை உயர்த்திப் பேசுவதையும், கோபப்படுவதையும் விட்டு விடு. அப்போது நீ ஜெயிப்பாய்.
பிறரது விருப்பத்தை நிறைவேற்று ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். யாரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பது கிடையாது. இதனால் குடும்பத்தில் பல பிரச்சினை தலை தூக்கி நிற்கும். கருத்து வேறுபாடுகள் தோன்றி உறவுமுறைகளில் சிக்கலை உண்டாக்கும். உன்னை வெறுக்கவும் செய்வார்கள்.
இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், நீ பிறரது விருப்பத்தை முதலில் நிறைவேற்ற கற்றுக்கொள்ள வேண்டும். பிறருக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதைச் செய்ய வேண்டும்.. உனது விருப்பத்தை இரண்டாம் பட்சமாக நினைத்து வாழப்பழகினால், தானாக உனது விருப்பத்திற்கு அவர்கள் முதலிடம் தருவார்கள். இழந்து போன மகிழ்ச்சி மீண்டும் உன்னிடம் வந்துவிடும்.
எதையும் திணிக்காதே!
கணவராகட்டும், பிள்ளைகளாகட்டும் அவர்கள் கருத்து சுதந்திரம் பெற்றவர்களாக -  வேறுவித எண்ணங்களை தயங்காமலும் தாராளமாகவும் சொல்லும் விதத்தில் நடத்து. உன்னுடைய ஆசையை, எண்ணத்தை, விருப்பத்தை பிறர் மீது திணிக்க முயற்சிக்காதே. இவ்வாறு திணிக்க ஆரம்பித்தால் உன்னை அவர்கள் வெறுப்பார்கள்.
தங்களது கருத்துக்களை உன் மீது திணிக்க பிறர் முற்படும்போது அதை எதிர்க்காதே.. பொறுமையோடு அதை மேற்கொள். இப்படி செய்யும்போது உனது தியாகத்தை பிறர் மதிப்பார்கள்.
சமரசம் செய்கிறேன் என்ற பெயரில் பிறரை விட்டுக்கொடுக்க வைக்காதே, நீயும் விட்டுத் தர வேண்டாம். பிரச்சினைக்கான காரணத்தை அலசி அதன் தன்மையை பிறர் புரிந்துகொள்ளும் வகையில் கூறு, அல்லது பிறர் கூறும்போது அதை ஏற்றுக்கொள். எப்போதும் மகிழ்ச்சியாய் இரு.
உண்மையான அக்கறை செலுத்து!
வாழ்க்கையில் பல மைல் கல்களைக் கடந்து வந்துவிட்டோம். இனி எவ்வளவு காலம் கடக்கப்போகிறோம் என்பது தெரியாது. இருக்கும் ஒவ்வொரு நாளிலும் பிறர் மீது உண்மையான அக்கறை செலுத்த வேண்டும்.
என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள். பாபா, தனது பக்தர்களின் மீது உண்மையான அன்பு செலுத்துகிறார். எனவேதான் பக்தர்கள் கூப்பிட்ட உடனேயே ஓடிவந்து உதவுகிறார் என்கிறார்கள்.
இந்தப் பெயரை நீயும் எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு நிலையிலும் பிறரைவிட உன்னை உயர்வாக நினைத்துக்கொள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் உன்னிடம் தீர்வு உள்ளது என நினைத்து அதன்படி நடந்துகொள். அனைத்தையும் தாங்கும் சக்தி நீ என்பதை உணர்ந்துகொள். அப்போது உன் குடும்பம் உயர்வடையும்.
விட்டுக்கொடுத்து வாழக் கற்றுக்கொண்டால், கெட்டுப்போவது என எதுவும் இருக்காது. எதுவும் கெட்டுப்போகாதவரை உன்னை துன்பத்தின் நிழல் அணுகவே அணுகாது. மீதியை பிறகு கூறுகிறேன்.
அன்புடன்
அப்பா சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...