Thursday, August 13, 2015

என்னிடம் நம்பிக்கை வை !

தினத்தியானம் 2
தைரியத்தை இழந்துவிடாதே! உன் மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டா. சுகமாகிவிடும். கவலையை விடு. பக்கீர் தயாளகுணம் உள்ளவர். உன்னை ரட்சிப்பார். வீட்டிற்குப் போய் அமைதியாக இரு.
வீட்டை விட்டு வெளியே எங்கும்போகாதே. தைரியமாக இரு, கவலையை விட்டொழி. என்னிடம் நம்பிக்கை வைப்பாயாக.
 
என்னிடம் நம்பிக்கை வை !

பாபா தனது பக்தர்களுக்கு வலியுறுத்திய முதல் விக்ஷயம் நம்பிக்கை. இந்த உலகம் தொடர்ந்து இயங்குவதும், சூரியன் உதயமாவதும், அஸ்தமிப்பதும் நம்பிக்கையினால்தான். நம்பிக்கையில்லாமல் வாழ்க்கைக் கிடையாது. நம்பிக்கை உள்ளவன் பாக்கியவான். அவன் இந்த ஜன்மத்திலேயே தான் விரும்பிய அனைத்தையும் பெற்றுக்கொள்வான்.
பாபாவின் அனுக்கத் தொண்டரான சாமாவின் சுண்டு விரலில் பாம்பு தீண்டிவிட்டது. விஷம் ஏறி, உயிரே போய்விடுவது ருந்தது. மாதவராவ் பீதியும் கவலையும் அடைந்தார். உறவினர்கள் பல உபாயங்களைக் கூறினார்கள். ஆனால், மாதவராவ் (சாமா) உறுதியுடன் சரண் அடைந்த போது, பாபா இந்தத் திருவாய் மொழிகளைக் கூறினார்.

சுண்டு விரல் அளவு பிரச்சினை

அன்றாட வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினைகள் அனைத்தும் சிறிய விக்ஷயங்கள் வடிவிலேயே நுழைகின்றன. கவனக்குறைவு, அலட்சியம், எதிர் பாராத நிலை, சந்தர்ப்ப வசம், விருப்பம், வெறுப்பு, கோபம், பொறாமை, அன்பு, நட்பு, காதல்,சச்சரவு, கோள் சொல்லுதல், வேடிக்கை என எந்த நிலையிலும் இந்தப் பிரச்சினைகள் நமது வாழ்க்கையினுள் நுழையக்கூடும்.
சின்ன விக்ஷயம்தானே, பார்த்துக்கொள்ளலாம் என்று எந்த ஒன்றையும் உடனே கவனிக்காவிட்டால் அதுவே பூதாகரமாக மாறிவிடும். சுண்டு விரலில் தீண்டினாலும் விக்ஷம் ஒட்டு மொத்த உடலை பாதிப்பதைப் போல, நம்மைத் தாக்குகிற எந்த ஒரு விக்ஷயமும் ஒட்டு மொத்த வாழ்வையும் வீணடித்து விடும். எனவே, எந்த நிலையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் உடனடியாகத் தீர்வு காணவேண்டும்.
கவலையும், பீதியும் கைமாற்றாக ஒருவர் கடன் கேட்கிறார். நாணயமானவர், திருப்பித் தந்துவிடுவார் என நம்புகிறீர்கள். கணவருக்குத் தெரியாமல் அல்லது மனைவிக்குத்தெரியாமல், சீக்கிரம் தந்துவிடுங்கள் எனக் கூறித் தருகிறீர்கள். இரண்டே நாள்களில் தந்துவிடுகிறேன் என வாங்குபவர், இரண்டு நாட்களுக்குள் தராவிட்டால் ஒருவித பயம் நம் மனதைத் தொற்றும். ஒருவாரம், ஒரு மாதமானால் கவலை மனதை ஆக்கிரமிக்கும்.
அடுத்த வாரம் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய நிலையிருக்கிறது. பணம் தேவைப்படும். வீட்டில் உள்ளவர் கேட்கப் போகிறார் என்ற நிர்ப்பந்தம் உருவாகப்போகிறது என வைத்துக்கொள்ளுங்கள். கவலை அதிகமாகி பீதி ஏற்படும்.
இது வீட்டில் கணவனுக்கோ, மனைவிக்கோ தெரிந்தால் தேவையில்லாத பிரச்சினைகளில் கொண்டு போய்விட்டுவிடும். பிறகு வாழ்க்கை சீரழியத்தொடங்கும்.
ஆரம்பத்திலேயே இல்லை எனக் கூறியிருக்கலாம், அவரைக் கேட்டுத் தருகிறேன் எனக் கூறி சமாளித்து இருக்கலாம். அப்படி செய்யாமல், வீட்டில் சும்மா இருப்பதுதானே! கொடுத்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற அலட்சியத்தால் இப்படி சிக்கிக் கொண்டோமே என வருந்துவோம்.
தன் ஆயுதத்தையும், தன் கையிலுள்ள பொருளையும் பிறர் கைக்குத் தருகிறவரை பேதை (அறியாமை உள்ளவர்) பதர் (எதற்கும் லாயக்கில்லாதவர்) என்று முன்னோர் கூறினார்கள்.
இது பணத்துக்கு மட்டுமல்ல, நமது ஏதோ ஒரு சறுக்கலுக்கும் பொருந்தும். இந்த நிலையில் என்ன செய்யலாம்?

அமைதியாக இரு:

முள் மீது போட்டுவிட்ட சீலையை மெதுவாக எடுக்கவேண்டும் என்பார்கள். அப்படியே நீங்கள் செய்த சிறு தவறின் பெரிய விளைவுகளை சீரமைக்க வேண்டுமானால், வீட்டுக்குப் போய் அமைதியாக இருக்கவேண்டும்.
வீடு என்பது மனது. குறிப்பிட்ட எல்லை. இந்த எல்லையை தாண்டி எதையும் கெடுத்துக்கொள்ள வேண்டா. உன்னையும் காயப்படுத்திக் கொள்ள வேண்டா. நிச்சயம் இதற்குத் தீர்வு உண்டு. எப்படி தீர்வு காண்பது என யோசித்துக்கொண்டிரு.

தைரியமாக இரு:

ஏமாற்றுகிறவன் ஏமாந்து போவான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை திடமாக நம்பு. மற்றவர்கள் கூறுகிற ஆலோசனைகளைப் புறம் தள்ளி, எப்படியும் வந்து விடும் எனத் திரும்பத் திரும்ப நினை. இந்த நினைவு மனதுக்கு தைரியத்தைக் கொடுக்கும்.

பாபா மீது நம்பிக்கை வை:

பக்கீர் தயாள குணம் உள்ளவர். அவர் நிச்சயம் நமது தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வார். எந்த நிலையிலும் கைவிடாமல், நம்மை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றுவார் என்பதை திடமாக நம்பு. உனது நம்பிக்கை வீண் போகாது. நிச்சயமாக பாபா உனது பிரச்சினையை களைந்துவிடுவார்.
பாபா களைந்துவிடுவார் என்பதற்காக நீ கண்டு கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது அல்லவா? சாமாவுக்குக் கூறியதைப் போல, இரவு முழுவதும் உறங்கக் கூடாது. அதாவது, பிரச்சினை தீரும் வரை முயற்சியை மேற்கொண்டு, தீர்வு காணவேண்டும். இதற்கு பாபா உதவி செய்வார்.

பிரார்த்தனை

சமர்த்த சத்குருவே!
என்னுடைய அலட்சியம் மற்றும் பிறர் தந்த நெருக்கடியால் நான் பிரச்சினையில் சிக்கிக்கொண்டேன். வெளியே இந்தப் பிரச்சினை தெரிந்தால் எனது வாழ்க்கை சீரழிந்துவிடவும், கேலிக்கு இடமாகவும் நேரிடலாம் என்ற பயத்தோடு இத்தனை நாட்கள் கவலையோடு வாழ்ந்துவிட்டேன்.
எங்களிடமிருந்து ஏமாற்றிப் பறித்துக் கொண்ட நபர்கள் அனைவரும், எங்கள் பணத்தையும், உடைமைகளையும் திருப்பித் தருமாறு அருள் செய்யுங்கள்.
பக்தர்களைக் காப்பவரும், பரம தயாளருமான தாங்கள் எனது பிரச்சினையிலிருந்து என்னைக் காத்தருளுங்கள். அலை பாயும் மனதை ஆட்கொண்டு, நிம்மதியை தாருங்கள். எனது மனம் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் எனது பிரச்சினையிலிருந்து என்னை மீட்டுக் காத்தருங்கள். உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையால், வேறு இடங்களை தேடி ஓடாமல் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். கருணை மிக்க சாயி மாதாவே! காத்தருளுங்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...