மகான்களை
வழிபடுவது சரியா? என்ற கேள்விக்கு எழுத்தாளர்
இந்துமதி ஓர் இதழில் கூறியுள்ள பதிலை
அப்படியே தந்திருக்கிறேன்.
“மகான்களை
வழிபடுவது சரியே! நான்
கூட சீரடி நாதனையே வழிபடுகிறேன். எந்தக் கோயிலுக்குச்சென்று எந்த
சந்நிதியில் நின்றாலும், எனக்கு எல்லா தெய்வங்களும் சீரடி
சாயி நாதனாகவே தெரிவார். என் மனமும் அப்படித்தான் நினைக்கும்.
சாயி
ராமா, சாயி கிருஷ்ணா, சாயி
சிவா, சாயி முருகா, சாயி விக்னேஸ்வரா, சாயி
ஆஞ்சனேயா, சாயி துர்கா, சாயி
காமாட்சி, சாயி கற்பகாம்பிகா என..
எல்லாமே எனக்கு சாயிதான்.
மனித
ஆன்மாக்கள் கர்ம வினைகளில் இருந்தும்
பல பிறவிகளில் இருந்தும் விடுபட வேண்டும் என்ற
நோக்கத்தில், மகான்கள்
அவர்களை பக்கத்தில் இழுத்து, பலவிதங்களிலும் போதித்து, தவறுகளை திருத்தி, மனதை பக்குவப்படுத்தி ஞானத்தை
ஏற்படுத்தி ஒவ்வொருவரையும்
ஆன்மீக வழியில் முன்னேற்றமடையச் செய்கின்றனர். இதுவே மகான்களின் மகத்தான பணி.
நம்மைச்
சுற்றியுள்ள, நாம் உணரக்கூடிய அல்லது
நம் உணர்வுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சம் முழுவதும் இயங்கும் இயக்கத்திற்கு பரிபூரணமடைந்த குருவே மையப்புள்ளி ஆவார். இப்பிரபஞ்சத்தின் உயிருள்ள
மற்றும் உயிரற்ற ஜடப்பொருட்களின் முன்னேற்றத்திற்காக கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நீண்ட நெடுங்காலமாக பலவித செயல்களை இத்தகைய குருக்கள்
ஒருவருக்கு ஒருவர் ஒத்திசைவுடன் செய்து வருகின்றனர்.
காஞ்சி
பரமாச்சாரியரிடம் சென்ற பால் பிராண்டனை, அவர்
ரமணரிடம் அனுப்பி வைத்தார். ரமணரிடம்
சென்ற நரசிம்ம சுவாமியை அவர், “உன் குரு நானில்லை, வடக்கே இருக்கிறார். அங்கு
போ!” என்று அனுப்பி வைத்ததார். அக்கல்கோட் மகராஜ் தன்னிடம் வந்த
சீடரை, “நான் உன்
குரு அல்ல, சீரடி கிராமத்திலிருக்கும் சாயி பாபாவிடம் செல்”
என்றும் கூறினார். இவ்வாறு
அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு தூரம் தள்ளியிருந்தாலும்
ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாகவும், ஒத்திசைவோடு செயல்படுகிறவர்களாகவுமே
இருந்தது தெரிய வருகிறது.
எல்லா
உயிரினங்களைப் பற்றியும், அவற்றின் ஆன்மா பற்றியும் முழு அறிவும், ஆளுமையும்
கொண்டவர்கள் மகான்கள்.
பெரும்பாலோர்
மகான்களால் கவர்ந்து இழுக்கப்படும்போது, முன் எப்போதுமில்லாத வழிகளில்
நடந்து கொள்வர். அவர்களின் சிந்தனைகள் பெரும் மாற்றத்தை அடையும்.
புராண
காலத்தில் கபிலர், வசிஷ்டர், சுகர்,
விசுவாமித்திரர், தத்தாத்ரேயர் போன்ற ரிஷிகள் அத்தகைய
மகான்களாக இருந்தார்கள். புத்தர்,
ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், ராகவேந்திரர் என்று
பல்வேறு கால கட்டங்களில் மகான்கள் தோன்றினர்.
ராமகிருஷ்ண
பரமஹம்சர், நிக்மானந்தா, லஹரி மகாசாய், யுக்தேஸ்வர், லோக்நாத் பிரம்மச்சாரி, பாமாக்கேபே, ரமணர், சீரடி சாயி
பாபா, அக்கல்கோட் மகராஜ், தாஜுதின் பாபா, கஜானன் அவதூத்,
பாபா ஜான், ஷங்கர் மகராஜ், மெகர்பாபா,
உபாசினி பாபா, நாராயண் மகராஜ்,
காஞ்சி பரமாச்சார்யர், அரவிந்தர், அன்னை என எத்தனையோ
மகான்கள் அவதாரம் எடுத்துள்ள புண்ணிய பூமி இது.
லட்சக்கணக்கான
மக்களுக்கு ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல், மகான்களிடம் இருந்தே கிடைக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமலும், கனவுகளின் மூலமும்
கூட அவர்கள் நல்லறிவை போதிக்கின்றனர். இத்தகைய மகான்களை வழிபடுவதில் என்ன தவறு?
எந்த
மகானை வழிபட்டாலும் அந்த வழிபாட்டில் நாம் உறுதியோடு
இருக்கவேண்டும். நம்பிக்கையும், பொறுமையும் நமக்கு அளிக்கப்பட்ட தாரக
மந்திரங்கள். இவற்றைக்
கடைப்பிடிப்போமா?
தகவல்:
சாயி
கலியன்
No comments:
Post a Comment