Friday, July 31, 2015

வந்தது பாபாவே!

சில மாதங்களுக்கு முன்பு நானும் எனது நண்பர் நாச்சிப்பிள்ளையும் இன்னொரு நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு ஓர் இரவு நேரத்தில் மும்பையில் இருந்து சீரடிக்குச் சென்றோம்.
பாபாவை கண்குளிர தரிசனம் செய்துவிட்டு, இரவு பத்து மணியளவில் மும்பைக்குத் திரும்பினோம். இரவு மூன்று மணியளவில் மும்பையின் புறநகர் பகுதியான சயன்பெல்லி வாடா என்ற பகுதியில் எங்களை இறக்கிவிட்டு பஸ் சென்றுவிட்டது. இறங்கிய இடம் ஒரே இருட்டு. நாங்களோ, மும்பைக்கு முதல் தடவையாக வந்தவர்கள். சீரடியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்பட்டுத் திரும்பியிருந்தோம்.
இரண்டு மூன்று ஆட்டோக்காரர்கள் எங்கே செல்லவேண்டும் என இந்தியில் கேட்டார்கள். பெல்லிவாடாவில் இறங்கவேண்டிய இடத்தைச் சொன்னோம். நூறு ரூபாய் கேட்டார்கள். வீடு சென்றால் போதும் என்பதாலும், மொழி தெரியாததாலும் சரி என ஒப்புக்கொண்டு ஓர் ஆட்டோவில் ஏறினோம். இரண்டு மூன்று சந்துகள் சென்ற ஆட்டோ இறக்கி விட்டது. கவனித்துப் பார்த்தால் நாங்கள் எங்கு ஏறினோமோ அதே இடத்தில் இறக்கிவிடப்பட்டது தெரிந்தது.
”இதற்காக  நூறு ரூபாயா? ” என ஆங்கிலத்தில் கேட்டதும், இந்தியில் அவன் ஏதோ சத்தம் போட்டான்.. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பகலில் வந்திருக்கலாம் என நினைத்தபடி, பணத்தைக் கொடுக்கத் தயாரானபோது, எதிரில் இருந்த ஓர் வீட்டிலிருந்து வந்த ஒருவர் என்ன விக்ஷயம் எனத் தமிழில் கேட்டார்.
” ஐயா, சயன்பெல்லிவாடா என்ற இந்த இடத்தில் வசிக்கும் கோவில் ஓவியர் கண்ணன் வீட்டுக்குப் போக ஆட்டோவில் ஏறினோம், ஆட்டோ டிரைவர் இதே இடத்தில் சுற்றி வந்து விட்டுவிட்டு நூறு ரூபாய் கேட்டு சத்தம் போடுகிறான்!”  எனக் கூறினோம்.
இந்தியில் அந்த ஆட்டோ டிரைவரிடம், ”பக்கத்திலேயே இருக்கும் இடம் செல்லாமல் எங்கே சென்று சுற்றினாய்? காவல் துறையிடம் கூறட்டுமா? அல்லது இருபது ரூபாயைப் பெற்றுக்கொண்டு கண்ணன் வீட்டில் இறக்கிவிடுகிறாயா? எனக் கோபத்துடன் கேட்டார்.
ஆட்டோ டிரைவர் பயந்து விட்டான். பஸ்ஸில் இருந்து இறங்கிய பக்கத்து வீடு அருகே எங்களை கொண்டு போய் விட்டுவிட்டு இருபது ரூபாயை மட்டும் பெற்றுச் சென்றான்.
இருட்டில் வந்த தமிழர் யார்?
அவர் எங்களுக்காக ஏன் ஆட்டோ டிரைவரிடம் சண்டைபோட்டார்? எனக் குழம்பமாட்டோம். ஏனெனில், வந்தது பாபாவே என்பது எங்களுக்குத் தெரியும். அவரை வாழ்த்தி வீடு சென்றோம்.
டி. சவுந்தரபாண்டியன்,
சீர்காழி

Thursday, July 30, 2015

உதடுகள் உச்சரிக்கட்டும்!



குருராயரே!  பூர்வ ஜென்ம தொடர்பினால்தான் நான் உங்களை இப்போது நெருங்க முடிந்தது என்பதை அறிந்து பயப்படுகிறேன்.
பூர்வத்தில் எனக்கும் உங்களுக்கும் என்ன தொடர்போ? நீங்கள் நடக்கும் வழியில் கல்லாய் இருந்து உங்கள் பாதங்களைத் தடுக்கினேனோ, புல்லாய் இருந்து உறுத்தினேனோ, முள்ளாய் இருந்து குத்தினேனோ? நாயாய்க் குரைத்தேனோ, பாம்பாய் அச்சுறுத்தினேனோ, மாடாய் முட்டினேனோ.. வேறு எதுவாய் இருந்து உங்களுக்குத் தொல்லை தந்தேனோ நான் அறியமாட்டேன்..
உங்கள் ஸ்பரிசம் பட்டதால் மனித ஜென்மம் எடுத்துள்ளேன் என்பதை மட்டும் அறிவேன். மற்ற என் பாவங்களால் நான் சூழப்பட்டும், ஆளப்பட்டும் அல்லல் படுகிறேன்..
சாயி தேவா!  சமீப காலமாக எனது ஆன்மா அமைதியிழந்து தவிக்கிறது. ஏதோ பயத்தால் படபடக்கிறது. விழித்திருக்கும்போது கவலையாலும், உறங்கும்போது திகில் கனவுகளாலும் அருவருப்பான தீய காட்சிகளாலும் திடுக்கிட்டுப்போகிறேன். குழப்பங்களாலும், கேள்விகளாலும் தத்தளிக்கிற மனதோடு, உடலும் தள்ளாடுகிறது.
கஷ்டங்கள் என்ற படகில் அமர்ந்துகொண்டு சம்சாரக்கடலில் பிரயாணிக்கிறேன். தத்தளிப்போடு செல்லும் வாழ்க்கையில் எங்கே தடுமாறி விழுந்து விடுவேனோ என பயமாக உள்ளது. இதிலிருந்தே நான் உங்களுக்கு எதிராக நடந்து கொண்டவன் என்பதை அறிந்து கலங்குகிறேன்.
கடந்த ஜென்மத்தை மறந்துவிடுங்கள். இந்த ஜென்மத்தில் என் குருவே!  உங்களை அறிந்தது முதல் ஆழ்ந்த பக்தி செலுத்துகிறேன்.. கண்ணீரால் உங்கள் திருவடிகளைக் கழுவி, இதயத்தால் துடைத்து, ஆன்மாவால் பூஜீக்கிறேன்..
என்னை நினைவில் வைத்துக் கொள்ளும். உமது இதயத்தின் ஓர் ஓரத்தில் என்னை வைத்து பாது காப்பு அருளுங்கள் குருவே!  குரு ராயரே, குரு ராயரே! இக்கட்டான நேரத்தில் என் மீது கண்களை வைத்துப்பாதுகாப்பாக இருங்கள். என்னைக் கைதூக்கிவிட விரைந்து வாருங்கள்.
பகட்டானவர்களும், படித்தவர்களும் உங்களை வெளிச்சத்தில் தேடுகிறார்கள். பாமரனாகிய எனது ஆன்மாவோ இரவு நேரத்தில் தனிமையில் உம்மை நினைத்துத் துதிக்கிறது. இதயத்தில் நிற்கும் உமது திருவடிகளை இறுகப் பற்றிக்கொண்டு வேக வேகமாகப் பிரார்த்தனை செய்து கலங்குகிறது.
எளியவன் என என்னை புறக்கணிப்பு செய்து விடாதீர்கள். பகட்டில்லாதவன் என என்னைப் பாராமல் போய்விடாதீர்கள். கஷ்டப்படுகிறவன் என உறவுகளைப் போல தூரப் போய்விடாதீர்கள். உதவிக்காகக் காத்திருக்கும் என் மீது விருப்பமாக இருங்கள். தவறு செய்யும்போது மனிதரைப் போல புறம்கூறி, தண்டிக்காமல் மன்னித்து அருள் பாலியுங்கள்.
உம்மைத் துதித்தால் துன்பம் விலகி, எதிரிகள் தொலைவார்கள் என்பதால்உம்மைத் துதிப்பதைத்தொழிலாகக் கொண்டிருக்கிறேன்.
நான் நடக்கும்போது அகலமான பாதைகளைப்பார்த்தால் உங்கள் அருளை எண்ணி உருகிப் போகிறேன்.. நான் சுதந்திரமாக நடக்க இந்த வழித்தடத்தை விசாலமாக வைத்திருப்பதாக நினைத்துப்புல்லரிக்கிறேன்.
வெளிச்சத்தில் நடக்கும் போது, உங்களை எண்ணி துதிக்கிறேன்.. நீங்களே என் கண்களைப் பிரகாசமாக்கி வெளிச்சமாகவும் இருக்கிறீர்கள் என்பதை மனம் உணர்கிறது.
எனக்கென நீங்கள் ஒதுக்கித் தரும் இடத்தில் நிம்மதியாக உறங்கும்போதும், விழிக்கும் போதும் நீங்கள் எனக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.. -
என் சாயி தேவனை ஆராய்ந்து பார்த்தேன். அவர் நல்லவருக்கு நல்லவராக, புனிதருக்குப் புனிதராக  இருக்கிறார். மாறுபட்டுத் தோன்றுகிறவனுக்கு மாறுபட்டு தோன்றுகிறார். இதயத்தில் எளிமை உள்ளவர்களை உடனடியாக காப்பாற்றுகிறார். துரோகம் செய்கிறவர்களையோ அவர் கண்டு கொள்வதில்லை. என் மனமே! நீதியாய் நட, நேர்மையில் விருப்பம் கொள்! மாறாத அகிம்சையைப் பின்பற்று!  இந்த அடிப்படை விஷயங்களால் அவனது அருளைப் பெறலாம் என என் மனதுக்கு ஆலோசனை கூறிக்கொண்டேன்..
அப்படியிருந்தும் என் மனம் சஞ்சலத்தால் தள்ளாடுகிறது. சிறு சிறு பிரச்சினைகளால் நான் களைத்துப் போகிறேன். என் நம்பிக்கை வீண் போகாதவாறு என்னைக் காப்பாற்றுங்கள் பிரபு.
குரு ராயரே குரு ராயரே! இக்கட்டான நேரத்தில் என் மீது கண்களை வைத்துப் பாதுகாப்பு தாருங்கள். துன்பங்கள் சூழும்போதும், கடன்காரர்கள் நெருக்கும் போதும் என்னை கவனித்து அருள் செய்து விடுவித்து அருளுங்கள். உங்கள் செல்வத்தைக் கொடுத்து என் கடனைத் தீருங்கள், நானும் என் குடும்பமும் உங்களுக்குக் காலம் முழுவதும் அடிமைகளாகக் கிடப்போம்.
குரு ராயரே, உங்கள் பார்வை மற்றும் ஸ்பரிசம் பட்ட இந்த மானுட ஜென்மத்திற்கு நன்மை செய்து அருள்புரியுங்கள். நான் வாழ வழிகாட்டுங்கள், நீதியை சரிகட்டுங்கள்.
ஜெய் சாய் ராம்.

மாயை விலகட்டும், மனம் திருந்தட்டும்!

இன்னும் நெடுங்காலம் வாழ்வோம் என்னும் ஆசையில் மூழ்கிக்கிடக்கிறோம். திடீரெனக் கூற்றுவன் வாழ்நாளைப் பறித்து உண்ணும்போது, அஞ்சி -  கண்மூடி அழுவதன்றி வாழ்ந்து கழித்த நாட்களைத் திரும்பப் பெறுவார் யார்?
எவராலும் இழந்த நாட்களை மீட்கலாகாது என அறிவோம். வாழும் குறுகிய காலத்தில் நம்மால் முடிந்த நற்செயல்களைச்செய்து இறைவனடி சேர வழி தேடுவோர் எத்தனை பேர்?
பலவித பிரச்சினைகளுக்கு காரணம் சாயி நாதர் கூற்றுப்படி நம் கர்ம வினைப் பயன்களே!  அவற்றை நாம் வெற்றிகொள்ள ஏதாவது வழி வகைகள் உள்ளனவா? இது குறித்து சாயிநாதர் கூறிய செய்திகளை சற்றே சிந்தித்து சிறிது தெளிவு பெறலாம்.
சாயி நாதருக்கு உயர்ந்த, தாழ்ந்த அடியவர் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரையும் சமமாகவே பாவித்தார். அவர்கள் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார்.
ரோகில்லா தொடங்கி, மேகா வரையிலான ஏராளமான எளிய அடியவர்கள் பாபாவின் பூரண அன்பால் கட்டுண்டவர்கள். பண்டிதர்களும், தொழில் மேதைகளும் பாபாவின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.
விரிந்த மனப்பான்மையுடன் உண்மையை அறிய முடிந்தால் தீய எண்ணம் நசிந்துபோகும். மகாத்மாக்களை ஆராதிக்கும் விஷயத்தில் குல, மதங்களைக் காணாதீர்கள் என்பது பாபாவின் அறிவுரை.
தேவையைப் பூர்த்தி செய்யும் உணவு எவ்வளவு சிறப்புடையதோ, மகான்களின் நல்லுரைகளும்கூட அவ்வளவு உயர்ந்ததே. அப்படிப்பட்ட ஒரு மன நிலையில்லை எனில் விலை மதிப்பிட முடியாத நன்மையைக் காலால் உதைத்துத்தள்ளுவது போலவேயாகும். இந்த உண்மையை சாயி சரித கதை ஒன்றிலிருந்து நாம் அறியலாம்.
ஓர் ஊரின் தாசில்தார் பாபாவை தரிசிக்க, தன் நண்பரான ஒரு வைத்தியரையும் உடன் வருமாறு அழைத்தார். வைத்தியர் ஆசாரம் மிகுந்த அந்தணர். _ ராமரை வணங்குபவர். நியம, நிஷ்டைகளை கடைப்பிடிப்பவர். அவரைப் பொறுத்தவரையில் பாபா ஒரு முஸ்லிம். மசூதியில் வசிப்பவர்.  அவரை வணங்குவது அது தன் குலத்திற்கு ஏற்காது!. 
இதைத் தாசில்தாரிடம் கூறி, தான் சீரடிக்கு வந்தாலும் அங்கே பாபாவை வணங்க மாட்டேன், தட்சணை ஏதும் அவருக்குக்கொடுக்க மாட்டேன், இதற்கு உடன்பட்டால் சீரடி வருவதாகக்கூறினார். தாசில்தார் இதற்கு ஒப்புக்கொண்டார்.
சீரடியில் பாபாவை இருவரும் தரிசித்தபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. யாரை வணங்கமாட்டேன் என தீர்மானமாகக்கூறினாரோ அவரை, சாஷ்டாங்கமாக வைத்தியர் வணங்கி, பாதத்தின் அருகில் அமர்ந்து கொண்டார்.
தாசில்தாருக்கு ஆச்சர்யம்!  என்ன இது? பாபாவுக்கு நமஸ்காரம் செய்ய மாட்டேன் என்றீரே!”  எனக்கேட்டார்.
”இங்கே அமர்ந்திருப்பது பாபா அல்ல, சாட்சாத் சியாமள வண்ணனாகிய  ஸ்ரீ ராமச்சந்திரரே.. சரியாகப் பாருங்கள்!”  என்றார் உணச்சிமயமான வைத்தியர்.
இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே, ஒரு கணத்தில்  ஸ்ரீ ராமருக்கு பதிலாக சாயியின் உருவத்தைக் கண்டு, பாபா முஸ்லிம் அல்ல  ஸ்ரீ ராமரே என்ற முடிவுக்கு வந்தார்.
ஸ்ரீ சாயி நாதர் ஒரு மகா யோகீஸ்வரர்,  அவதார புருக்ஷர். எத்தனையோ பேர் பிறப்பில் தாழ்ந்த குலத்தவராக இருந்தும்,  ஞானிகளாகவில்லையா? என்ற எண்ணம் தோன்றியது.  இருப்பினும், சாயி தனக்கு அருள் புரியவில்லை எனில், மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் பூண்டார்.
இந்த விசித்திர எண்ணம் ஏன்?
நிச்சயத் தன்மை பெறாத மனம் சாதிப்பது ஏதுமில்லை. மனம் எப்படி இருந்தாலும், விதியின் எழுத்து அதைவிட பலமானது.
வைத்தியர் விஷயத்தில் பிறகு என்னதான் நடந்தது?
இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் மன உறுதியுடன் கழிந்தது. நான்காம் நாள் நான்தேட் என்ற ஊரிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வைத்திய நண்பரை சந்தித்ததால், நண்பர்கள் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டபடி மசூதியை நோக்கி நடந்தார்கள்.
வைத்தியரும் தன் உறுதியை மறந்து மசூதிக்குள் வந்துவிட்டார். பாபா, ”என்ன வைத்தியரே!  ஏன் இங்கு வந்தீர்? யார் உம்மை அழைத்தார்கள்? எனக் கேட்க, கேள்வியின் உட்பொருள் மனதை உறுத்த வெட்கமடைந்தார்.
குழந்தையின் பிடிவாதம் தாயைக் கட்டுப்படுத்துமா? தாயே தானே சென்று குழந்தையிடம் பேசுவார். அதுபோல பாபாவும் மறுநாள் இரவு வைத்தியர் கனவில் தோன்றி அனுக்கிரகம் செய்தார்.
வாய்ப்பு இல்லாதபோது எதுவுமில்லை. ஆனால், கிடைத்த வாய்ப்பை வீணாக்குவது அறியாமை. ஆகையால் பாபா வைத்தியருக்கு அருள் புரிந்தார்.
வாழ்வில் ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தே தீரும் -  எவராலும் தடை செய்ய முடியாது.
யார் யாருக்கு எப்பொழுது அருள் பெற வாய்ப்பு வருகிறதோ, அப்பொழுது பாபா அருள் நிச்சயம் கிட்டும். சிறிது நேரம் உலாவி வரலாம் என்று அலைகள் கடலைவிட்டு கரைவரை வரும்போது கடல் கவலையடையாது. அலைகள் திரும்பி வரும் என்று கடலுக்குத் தெரியும். அது போன்றே சாயியும் என்பதை உணரவேண்டும்.
சாயி பக்தர்களாகிய நமக்கும் சில வேளைகளில் பல சந்தேகங்கள் தோன்றும். அவை தீர்ந்து போனால் மகிழ்ச்சியடைகிறோம்.
நவரத்தினங்களை மாலையில் எங்கு பதிக்கலாம் என்பதைப் பொற் கொல்லர் அறிவதுபோல, இந்த சிருஷ்டி நிர்மாணத்தை இறைவன் நன்கு அறிவார்.
சிருஷ்டிகள் அனைத்தும் இறைவனின் மாற்று உருவமே என்பதை அனைவரும் உணரவேண்டும். இது பற்றி பாபா கூறியிருப்பவை்
”சந்தேக உணர்வு, மனிதரை தனிமைப்படுத்தி விடும். சந்தேகம் இல்லாதவர்களாகி இறைவனை ஆராதனை செய்துவந்தால், அப்போது ஏற்படும் ஆனந்தத்துக்கு அளவேயில்லை.
மனிதர்களுக்கு சில ஆசைகள், கோரிக்கைகள் இருந்து வரும். அவற்றில் சில நிறைவேறும், சில நிறைவேறாது. எதிர்பார்த்தது நடக்காவிட்டால் கவலைப்படாமல் நிறைவேறியவற்றை நினைத்து ஆனந்திக்கக் கற்றுக்கொள்ளவும்.
மாயை பிரம்மா முதல் சிறு பிராணிகள் வரை அனைவரையும் பாதித்துள்ளது. ஹரி நாமம் ஜெயிப்பவர்களை இந்த மாயை ஏதும் செய்யாது.
சுகத்தைத் தேடுகையில் ஜீவனைத் தேடி துன்பம் வரும். இது ஒருவித போராட்டமே. இதில் களைத்து விடும் ஜீவன் தான் சுதந்திரமற்றவன் என்பதை உணர்கிறது. இதற்குக் காரணம் கர்மவினைகளே.
அவை சுக வடிவில் வரும்போது சுகமாகவும், துக்கவடிவில் வரும்போது துக்கமாகவும் தெரிகிறது. மாயை விலக சாயி நாமத்தை உச்சரித்து பலன் அடைய வேண்டும்.
கர்மாவின் செயல்கள் கர்மாவினுடையதே, ஆயினும் இறைவனை அனுதினமும் வழிபடுபவர்களிடம் அந்த இறைவனே மறைவாக அவற்றை அனுபவித்து கர்மாவை பலவீனமாக்குகிறான் என வேதங்கள் கூறுகின்றன. சாயி சக்தி என்ற கவசம் நம்மை கண்டிப்பாக காப்பாற்றும் என திட நம்பிக்கை கொண்டு சாயி நாதரைத் தொழுதால் பிறவிப்பிணிகள் எளிதில் அகலும், நாம் வெற்றிபெறலாம்.
ஜெய் சாய் ராம்

ஆதம்பாக்கம் கே. குப்புசாமி

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...