Sunday, July 19, 2015

தினத்தியானம் 1

சத்சரித்திரத்திலிருந்து!
”நீர் சத்குருவிடம் போய்ச் சேரவேண்டும் என்றும் அவரிடம் பரிபூரண நம்பிக்கையையும், பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
நீர் பிறவி எடுத்தது அர்த்தமுள்ளதாக ஆகும். இந்த ஜன்மத்தில் பரம மங்களங்களை அடைவீர். போங்கள், போங்கள். போய் சத்குருவின் பாதங்களை மனத்தாலும் வாக்காலும் உடலாலும் வழிபடுங்கள்.”
(அத்: 28– 31- 32)

நம்பிக்கையை வளர்த்துக்கொள்!
இறைவனே மனித வடிவில் வந்து குருவாக அருள்பாலிக்கிற நிலைதான் சத்குரு நிலை. சத்குருவைப் பிடித்துக்கொண்டால் இந்த ஜன்மத்தில் எல்லா விதமான மங்களங்களும் விளையும்.
இப்போதிருக்கிற கஷ்டநிலைகள், கடன் பிரச்சினைகள், வாழ்வியல் தடைகள், திருமண வாழ்வில் ஏற்படுகிற பிரச்சினைகள் என எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் நீங்கி, நமது வாழ்வு சுகப்பட வேண்டும் என்றால் சத்குருவைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அதாவது அவரை மனதாலும், வாக்காலும், உடலாலும் வழிபடவேண்டும்.
எப்போதும் அவரை நினைத்துக் கொண்டு இருப்பது மனதால் வழிபடுவது ஆகும். அவரது திருநாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டு இருப்பதும், அவரது திருவிளையாடல்களை பிறருக்கு எடுத்துக் கூறவதும் வாக்கால் வழிபடுவது ஆகும். அவருக்குக் கோயில் அமைப்பது, அமைக்க உதவி செய்வது, வழிபாட்டுத் தலங்களை பராமரிப்பது, விழாக் காலங்களில் அழைக்காமல் போய் சேவை செய்வது, அன்னதானம் செய்வது போன்று உடல் உழைப்பினால் வருகிற பலன்களை சத்குருவுக்கு அர்ப்பணிக்கிற செயல்கள் யாவும் உடலால் வழிபடுவது ஆகும்.
இந்த விதமாக இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடுவது கிடையாது.
விட்டகுறை, தொட்ட குறை என்பதுபோல, தந்தையார் வழிபட்டு, மகன் காலத்தில் விட்டுப்போன நிலை ஒரு குடும்பத்தில் இருந்தால், நிச்சயம் அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் இறை சேவைக்கு வந்துவிடுவார்.
நாம் முதலில் கடவுளை வணங்கியவராக இருந்து, பிறகு நமக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத இழப்பு, கடவுளை நம்பி வேண்டிய ஒரு விக்ஷயம் நடக்காமல் போனதால் அவரை மறந்தவர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்படுதல் போன்றவற்றால் கடவுளை மறந்தவர்கள் ஆகியோர் இறைசேவைக்கு வந்துவிடுவார்கள்.
நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்து, இதுவரை ஒதுங்கியருந்தால், திரும்ப வந்து வழிபாடு செய்யுங்கள். இதுவரை உங்களுக்கு என்ன நடந்ததோ அது கர்மவினைப்படியே நடந்தது.
கடவுள் உங்களைக் கைவிடவில்லை. மேலும் கஷ்டங்களைத் தரக்கூடாது என்பதால் அதில் இருந்து விடுவித்து இருக்கிறார். இந்த உண்மை காலம் போகப் போக உங்களுக்குவிளங்கும்.
.”நீர் சத்குருவிடம் போய்ச் சேர வேண்டும் என்றும் அவரிடம் பரிபூரண நம்பிக்கையையும் பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். பிறவி எடுத்தது அர்த்தமுள்ளதாக ஆகும்.
இந்த ஜன்மத்தில் பரம மங்களங்களை அடைவீர். போங்கள், போங்கள். போய் சத்குருவின் பாதங்களை மனத்தாலும் வாக்காலும் உடலாலும் வழிபடுங்கள்.” என்று உங்களை சத்சரித்திரம் சத்குருவிடம் அழைக்கிறது.
சீரடியில் சாதே வாடாவைக்கட்டியவர் ராவ் பகதூர்  ஸாடே. கேடா  ஜில்லா உதவி மாவட்ட ஆட்சியராக வேலை செய்தார். சிவன் கோயில் கட்டியிருந்தார். இவர் வழி தவறிப் போயிருந்த மேகா என்பவரை அழைத்து, அவனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்து சிவன் கோயிலுக்குப்பூசாரியாக நியமித்தார். இவர் மீது அன்பும் இரக்கமும் கொண்ட ஸாடே, அவரிடம் குருவின் பெருமைகளைப் பற்றி கூறினார்.
இத்தகைய பெருமை மிக்க குருவாக பாபா இருப்பதையும், அவருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யும் தனது விருப்பத்தையும் கூறினார். இதற்காக கேடா ஜில்லாவிலிருந்து சீரடிக்கு மேகாவை செல்லுமாறு கூறினார்.
மேகா, தூய பிராமணர். அவர் இன்னொரு பிராமண குருவை நாடுவதை விரும்புவார் என்பது இயல்பான விக்ஷயம்தான். இந்த இயல்பில் அவர், சாதேவிடம், பாபா என்ன ஜாதி எனக் கேட்டார்.  சாயி பாபா என்ன ஜாதி என்பது சாடேவுக்குத் தெரியாது.
”அவர் காது குத்தியிருக்கவில்லை. எனவே  “அவிந்த”  அதாவது காது குத்தப்படாத முஸ்லிம் என்று கூறுகிறார்கள்”  எனக் கூறினார்.
அக்காலத்தில் முஸ்லிம்களை யவனர்கள் என அழைப்பார்கள். யவனர் என்றால் வெளிநாட்டினர். அந்நியர். இவர்களைத் தொடுவது பாவம் என நினைத்தார்கள். எனவே, மேகா உடனே அவிந்த என்ற வார்த்தையைக் கேட்டு காதைப் பொத்திக்கொண்டார்.
சாடே மீதிருந்த மரியாதையாலும், தனது வேலை போய்விடும் என்ற பயத்தாலும், சீரடிக்குச் செல்ல ஒப்புக் கொண்டார்.
அவர் சீரடிக்கு வந்து, மசூதியில் ஏற கால் வைத்தவுடன், பாபா ஒரு கல்லை எடுத்துக்கொண்டு, ”படிமேல் கால் வைத்து ஏறினால் என்ன செய்வேன் என தெரியாது,  ஜாக்கிரதை எனக் கத்தினார்.
”வெளியே போ.. நீயோ உயர் குலத்துப் பிராமணன், நானோ நீசனிலும் நீசனான யவனன். இது நீசன் வாழுகிற இடம். உம் மேல் தீட்டு ஒட்டிக்கொண்டு விடும்!” என சத்தம் போட்டார்.
மேகா பயந்துவிட்டார். சில நாட்கள் சீரடியிலிருந்தாலும் பாபாவிடம் நெருங்க முடியாமல் ஊருக்கே திரும்பிவிட்டார். அங்கு சென்றதும் காய்ச்சலில் படுத்தார். கூடவே, பாபா மீது ஏக்கம் வளர்ந்தது. மறுபடி சீரடிக்கு வந்தார். இந்த முறை, அவரது மனதில் பக்தி வளர்ந்தது, பாபா சிவன் என்பதை உணர்ந்தார். அவருக்கு இரவு பகலாக சேவை செய்து, அவருடைய திருவடி களை அடைந்தார். துவேக்ஷத்தை விட்டு,  தேவையற்ற கேள்விகள் மனதில் தோன்றுவதை விட்டு, இறைவனை சரண் அடைந்து எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
பிரார்த்தனை
சமர்த்த சாயி நாதப் பிரபுவே,
இந்த நாள் முதல் நாங்கள் உங்களை அறிந்து, உங்களுடனே வாழ எங்களுக்கு வாய்ப்புத் தந்து ஆசீர்வதியுங்கள். காலம் முழுக்க நாங்கள் உங்கள் காலடியில் வாழும் இந்த பாக்யம் நீடிப்பதாக.
ஜெய் சாய்ராம்!


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...