Friday, July 31, 2015

வந்தது பாபாவே!

சில மாதங்களுக்கு முன்பு நானும் எனது நண்பர் நாச்சிப்பிள்ளையும் இன்னொரு நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு ஓர் இரவு நேரத்தில் மும்பையில் இருந்து சீரடிக்குச் சென்றோம்.
பாபாவை கண்குளிர தரிசனம் செய்துவிட்டு, இரவு பத்து மணியளவில் மும்பைக்குத் திரும்பினோம். இரவு மூன்று மணியளவில் மும்பையின் புறநகர் பகுதியான சயன்பெல்லி வாடா என்ற பகுதியில் எங்களை இறக்கிவிட்டு பஸ் சென்றுவிட்டது. இறங்கிய இடம் ஒரே இருட்டு. நாங்களோ, மும்பைக்கு முதல் தடவையாக வந்தவர்கள். சீரடியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்பட்டுத் திரும்பியிருந்தோம்.
இரண்டு மூன்று ஆட்டோக்காரர்கள் எங்கே செல்லவேண்டும் என இந்தியில் கேட்டார்கள். பெல்லிவாடாவில் இறங்கவேண்டிய இடத்தைச் சொன்னோம். நூறு ரூபாய் கேட்டார்கள். வீடு சென்றால் போதும் என்பதாலும், மொழி தெரியாததாலும் சரி என ஒப்புக்கொண்டு ஓர் ஆட்டோவில் ஏறினோம். இரண்டு மூன்று சந்துகள் சென்ற ஆட்டோ இறக்கி விட்டது. கவனித்துப் பார்த்தால் நாங்கள் எங்கு ஏறினோமோ அதே இடத்தில் இறக்கிவிடப்பட்டது தெரிந்தது.
”இதற்காக  நூறு ரூபாயா? ” என ஆங்கிலத்தில் கேட்டதும், இந்தியில் அவன் ஏதோ சத்தம் போட்டான்.. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பகலில் வந்திருக்கலாம் என நினைத்தபடி, பணத்தைக் கொடுக்கத் தயாரானபோது, எதிரில் இருந்த ஓர் வீட்டிலிருந்து வந்த ஒருவர் என்ன விக்ஷயம் எனத் தமிழில் கேட்டார்.
” ஐயா, சயன்பெல்லிவாடா என்ற இந்த இடத்தில் வசிக்கும் கோவில் ஓவியர் கண்ணன் வீட்டுக்குப் போக ஆட்டோவில் ஏறினோம், ஆட்டோ டிரைவர் இதே இடத்தில் சுற்றி வந்து விட்டுவிட்டு நூறு ரூபாய் கேட்டு சத்தம் போடுகிறான்!”  எனக் கூறினோம்.
இந்தியில் அந்த ஆட்டோ டிரைவரிடம், ”பக்கத்திலேயே இருக்கும் இடம் செல்லாமல் எங்கே சென்று சுற்றினாய்? காவல் துறையிடம் கூறட்டுமா? அல்லது இருபது ரூபாயைப் பெற்றுக்கொண்டு கண்ணன் வீட்டில் இறக்கிவிடுகிறாயா? எனக் கோபத்துடன் கேட்டார்.
ஆட்டோ டிரைவர் பயந்து விட்டான். பஸ்ஸில் இருந்து இறங்கிய பக்கத்து வீடு அருகே எங்களை கொண்டு போய் விட்டுவிட்டு இருபது ரூபாயை மட்டும் பெற்றுச் சென்றான்.
இருட்டில் வந்த தமிழர் யார்?
அவர் எங்களுக்காக ஏன் ஆட்டோ டிரைவரிடம் சண்டைபோட்டார்? எனக் குழம்பமாட்டோம். ஏனெனில், வந்தது பாபாவே என்பது எங்களுக்குத் தெரியும். அவரை வாழ்த்தி வீடு சென்றோம்.
டி. சவுந்தரபாண்டியன்,
சீர்காழி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...