Friday, July 17, 2015

அன்பான குருவை நாடுங்கள்!



அன்பு காட்டப்படும் இடத்தில் மிக சுதந்திரமாகவும்,  நெருக்கமாகவும் இருப்பதே உயிர்கள் வழக்கம். வணங்கும் இறைவனாக இருந்தாலும், அணுகும் குருவாக இருந்தாலும் அன்புள்ளவரானால் நமக்கு அருள் விரைவில் கிடைக்கும்.
இறைவன் யார் மீதும் பழியுணர்வு கொண்டிருப்பதில்லை. பாரபட்சம் பார்ப்பதுமில்லை. நாம் கற்றும், கேட்டும் இருக்கிற விக்ஷயங்களை வைத்து இறைவன் இப்படிப்பட்டவர் என்ற ஒரு முடிவுக்கு வருவது தவறான நிலைப்பாடாகும்.
இறைவன் எப்போதும் அன்பாகவே இருக்கிறார். அவர் யாரையும் தண்டிப்பதும் இல்லை, யார் மீதும் குறை காண்பதும் இல்லை. ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதுமில்லை. அதேபோல, அவர் நமக்கு நோய்களையும், துன்பம், கவலை, கஷ்டம் போன்றவற்றையும் தருவதில்லை. இவை அனைத்தும் நம்முடைய தவறான எதிர்மறை சிந்தனைகள், நம் மீது நாம் கொண்டிருக்கும் தவறான பச்சாதாபம், கடவுள் பற்றிய தவறான கொள்கை போன்றவற்றால்தான் இவை நமக்கு வருகின்றன.
எண்ணம், சிந்தனை அனைத்தையும் நேர்மறையாக மாற்றி, கடவுளும் குருவும் நம்மீது மாறாத அன்புள்ளவர் என நினைத்து வாருங்கள், அனைத்தும் சாதகமாக மாறுவதை உணர்வீர்கள்.
அவர் உங்களோடு இருப்பதாக நினைத்து நடந்தால், தன்னம்பிக்கையும் தைரியமும் எப்போதும் உடன் இருக்கும். நன்மை, தீமை என்பவை மனதின் சிந்தனை வெளிப்பாடு ஆகும். நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர் களோ அது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் குரு அல்லது கடவுள் உங்களுக்கு மிக நெருக்கமானவர், அன்பானவர், நீங்கள் எதைக்கேட்டாலும் தருவார் என நினைத்து அப்படியே நாடுங்கள். பதிலுக்கு குருவும் உங்களை அவ்விதமாகவே பார்ப்பார்.
சாயி பக்தரான நீங்கள், சாயி நாமத்தை உங்களுக்கு உரிய மந்திரமாக்கிக் கொண்டால், பாபா எல்லா நிலைகளிலும் பொறுப்பு எடுத்துக் காப்பார். இன்றைக்கு உங்களுக்கு கற்பிக்கிற பாடம் நாளைக்கு உங்கள் மூலம் பிறருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது நேர்ந்துள்ளது என்பதை உணர்ந்து, எது நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை எதிர்த்துப் போராடக்கூடாது, மாற்ற முயற்சிக்க வேண்டும்.
உங்கள் குறையை, அல்லது உங்கள் மீது குறையை பிறர் சொன்னால் கோபிக்காமல், இதை வெளிப்படுத்தியமைக்காக அவருக்கு நன்றிகூறி அவரை ஆசீர்வதிக்க வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் அவரையல்ல, உங்களை ஆசீர்வதிக்கிறீர்கள்.
தீங்கு செய்தவர் மீது கோபம் கொள்ளாமல், அவரை ஆசீர்வதிக்க வேண்டும். அவரை அடுத்த முறை பார்க்கும்போது குற்ற உணர்ச்சியின்றி அவர் பேசவும், நீங்கள் நடக்கவும் வேண்டும். இப்படியிருந்தால் உங்களில் சாயி நாமம் நன்றாக வேலை செய்கிறது என்று பொருள். இழந்தவற்றுக்காக அழாமல் அடுத்து கிடைக்கப் போகும் ஒன்றுக்காக செயல்படத் தொடங்க வேண்டும். இப்படி செய்தால் உங்களில் அவர் செயல்படுவதாகப் பொருள்.
இப்படியே ஒவ்வொரு செயலையும் மாற்றிக் கொண்டே வந்து, புதிய வாழ்க்கையை உண்டாக்கிக் கொள்ளவே, நாமத்தை ஜெபிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதே தீட்சையாகும்.
காயப்படுவது கர்ம நிகழ்வு. காயத்தை ஆற்றுவது கடவுள் தரும் வரம் அல்லது வாழ்க்கை. வாழ்வே கடவுள் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிட்டால், எந்த நிலையிலும் நல்ல மாதிரியாக வாழ்வதைப் பற்றியே சிந்திப்பீர்கள். இந்த சிந்தனையே உங்களை வெற்றியாளராக மாற்றி, நல்ல எதிர்காலத்தை தந்துவிடும்.
சாயி பாபா செய்த பல அற்புதங்கள், அவருடைய வாழ்க்கை இவற்றை ஆராய்ந்து பார்த்தால் இதுபோன்ற பல விக்ஷயங்கள் அவற்றுள் புதைந்து இருப்பதைப் பார்க்கலாம்.
இந்த விக்ஷயங்கள் அனைத்தும் உங்களுக்குப் பலன் தரவும், சாயி நாமம் உங்களுக்கு மந்திரமாக அமைந்து உங்கள் வாழ்க்கையை மாற்றவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...