ஒருவன் படிக்காமல் முரடனாக வளர்ந்தான். இதைக் கண்டு வருந்திய தாயார், அவனிடம் சித்ர குப்தாய நம என தினமும் கூறு என அறிவுரை கூறினார். அவன் பொல்லாங்கு செய்தாலும் தினமும் சித்ர குப்தாய நம என்பதை மறக்க மாட்டான். இப்படியே 52 வயதானது.
அவனது ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. சித்ர குப்தன் அவனது ஏட்டைப் பார்த்தார். சித்ர குப்தாய நம் என்று சொன்னதைத் தவிர, வேறு எந்த நன்மையும் அவன் செய்யாததை அறிந்தார்.
தன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தவனுக்கு நன்மை செய்ய நினைத்து, அவன் கனவில் சென்று, ”மகனே, நீ என் பெயரை உச்சரித்ததைத் தவிர, வேறு நல்ல காரியத்தைச் செய்யவில்லை. அதனால் உனக்கு நரகம் கிடைப்பது உறுதி. ஒரு வாரத்தில் இறக்கப் போகிறாய். அதற்குள் உன் நிலத்தில் ஒரு குளம் வெட்டு. அதில் ஒரு மாடு நீர் அருந்தினால் மூணே முக்கால் நாழிகை உனக்கு சொர்க்க வாசம் உண்டு. பல மாடுகள் நீர் குடித்தால் உன் சொர்க்க வாசம் நீளும். மாடுகளின் உடலில் தேவர்கள் குடியிருக்கிறார்கள், அந்தப் புண்ணியத்தையும் சேர்த்துப் பெறலாம். நீ இறந்த பிறகு யமன் சொர்க்க நரகத்தில் எது முதலில் வேண்டும் எனக் கேட்டால் சொர்க்கம் எனக் கூறு” என்று அறிவுரைக் கூறி மறைந்தார்.
முரடனும், சித்ரகுப்தன் கூறியது போல கிணறு வெட்டினான். அவன் செய்த பாவத்தால் நீர் வரவில்லை. ஆறு நாட்கள் முடிந்துவிட்டன. மறுநாள் அவன் இறக்கப் போகும் நிலையில் ஒரு சிறு ஊற்று வந்தது.
சித்ரகுப்தன் மாடாக வந்து, குளக்கரையில் நின்று ”ம்மா” என்று குரல் கொடுத்தார். அதைக் கேட்டு பல மாடுகள் அங்கு வந்தன. ஒரு மாடு நீர் குடித்தது. அவ்வளவுதான் தண்ணீர். அதற்குள் நெஞ்சு வலியால் அவன் இறந்து போனான்.
யமன் அவனது பாவ புண்ணியத்தைப் பற்றி சித்ரகுப்தனிடம் கேட்டார். ”இவன் துராத்மா. ஒரே ஒரு புண்ணியம் மட்டும் செய்திருக்கிறான், சாகும் முன்பு ஒரு குளம் வெட்டியிருக்கிறான். அதில் ஒரே மாடு தண்ணீர் குடித்திருக்கிறது” என்றார்.
”இந்த ஒரு புண்ணியத்திற்கு மூன்றே முக்கால் நாழிகை சொர்க்கம் உண்டு. உனக்கு முதலில் சொர்க்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா?” என முரடனிடம் கேட்டார்.
அவன் சொர்க்கம் என்றான்.
சொர்க்க வாசம் அனுபவிக்க ஆரம்பித்த அதே நேரத்தில் அவன் வெட்டிய குளத்தில் நிறைய நீர் சுரக்க ஆரம்பித்தன. குளக்கரையிலிருந்த மாடுகள் அனைத்தும் நீர் பருக ஆரம்பித்தன. இதனால் அவனது புண்ணியக் கணக்கும் ஏறியது. சொர்க்கத்திலேயே சுகமாக இருக்கலானான்.
No comments:
Post a Comment