எல்லாம் போயிற்று! பூமியே வீடு, வானமே கூரை என்ற நிலைக்கும் வந்தாயிற்று! இனி என்னிடமிருந்து பறிப்பதற்கு என்ன இருக்கிறது? காப்பதும் அழிப்பதும் உன் பொறுப்பு என்ற முடிவுக்கு வந்துவிட்ட என் குழந்தாய்!
நான் உன்னை விட்டு விலகவும் இல்லை, கை விடவும் இல்லை. எப்போதும் உன்னை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
யாருக்கு நான் அனுக்கிரகம் செய்ய விரும்புகிறேனோ, அவனுடைய உடைமைகள் யாவற்றையும் நான் பறித்துக்கொள்கிறேன் என்பதை உனக்கு உணர்த்தவே இவ்வளவு விஷயங்களைச் செய்து, உன்னை கஷ்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி வந்திருக்கிறேன்.
எனக்கு விருப்பமான நீ, என்னைத் தவிர உனக்கு வேறு கதி எதுவுமில்லை, யாருமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும், என் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த சோதனைகள் உனக்கு அளிக்கப்பட்டன.
இதனை அறியாதவர்கள் உன்னை இதற்காக இகழ்ந்தார்கள், அவமதித்தார்கள், பேசினார்கள், மானம் போனதாக கண்ணீர் விட்டாய், தற்கொலை செய்து கொள்ளலாமா என முடிவும் செய்தாய்.
ஆனால், நான் உன்னை இன்று பொறு, நாளை வரட்டும் என ஒவ்வொரு தினத்தையும் தள்ளிப் போட்டுக்கொண்டே வரச் செய்தேன். ஏனென்றால், பிறர் பேசுவதையோ, நினைப்பதையோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
மனம் உடைந்து வேறுவித செயல்களில் ஈடுபடக்கூடாது. மாறாக, எல்லாம் என்னையே சார்கிறது என்பதை நீ உணர்ந்து கொள்ளத்தான்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் திடமனதோடு சகித்துக்கொள்ளப் பழகு. நீ என்னுடைய கண்காணிப்பில் இருக்கிறாய் என்பதை உணர்ந்து கொள்.
அப்படியிருந்தும் உன்னைக்கஷ்டம் தொடர்வதற்குக்காரணம், உன் மனம் சஞ்சலப் படாமல், உறுதியாக என்னைப் பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே கஷ்டமும், துன்பமும் இன்றைக்கு இருந்து நாளைக்கு மறைந்துவிடும். ஆனால் என்னிடம் நீ கற்றுக்கொண்ட நம்பிக்கையும் பொறுமையும் என்றைக்கும் உன்னிடம் உறுதியாக இருக்கும். இவை இருக்கும்போது நீ நினைத்த விஷயங்களை நினைத்தவுடன் பெறலாம்.
நான் உன்னை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!
உன்னால் கடவுளாக இன்றைக்கு வணங்கப்படுகிறேன். நான் கடவுள் என்பதும் வாஸ்தவம்தான். ஆனால், அந்த நிலையை மக்களுக்கு உணர்த்துவதற்குள் நான் எவ்வளவு பாடுபட்டேன் என்பதை நினைத்துப் பார்.
பெற்றோரை இழந்து அனாதையாகத் திரிந்தேன். குருவால் தலைகீழாகத் தொங்க விடப்பட்டேன். அவரையே தஞ்சமென நம்புவதற்கு வற்புறுத்தப்பட்டும், தள்ளப்பட்டும் வாழ்ந்தேன். என் குரு என்னை விட்டுச் சென்ற பிறகு பாழடைந்த மசூதியில் தங்க வைக்கப்பட்டேன்.
பன்றிகளுக்கும், நாய்களுக்கும் மத்தியில், நாற்றத்தோடும், சேறு சகதிகளோடும் எனக்கு குடியிருப்பு வழங்கப்பட்டது. பிள்ளைகளும், பிறரும் என்னை கல்லால் அடித்தார்கள்.
நான் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டேன்.. இருட்டிலிருந்து வெளிச்சத்தைப்பார்க்க, எண்ணெய்கூட இரவலாகக் கேட்டேன், ஆனால் மறுத்தவர்கள் தான் அதிகம்.
பசியோடும், தாகத்தோடும் எத்தனை நாட்கள் காடுகளில் திரிந்திருப்பேன், எத்தனை நாட்கள் உடையின்றி தவித்திருப்பேன்.. கொஞ்சம் யோசித்துப்பார்.. இவற்றையெல்லாம் நான் சகித்துக்கொண்டு என் குருவின் பெயரையே இறை நாமமாக நினைத்து தியானம் செய்து வந்ததால்தான் இன்று கடவுள் என போற்றப்படுகிறேன்.
ஒன்றை இழக்காமல் வேறொன்றைப் பெற முடியாது என்பார்கள். நானும் இதற்கு விதி விலக்கு அல்ல. நீ எந்த ஒன்றையும் இழக்காமல் மேலும் மேலும் கொடுப்பதற்காகவே, இன்றைக்கு உன்னிடமிருப்பதை நான் எடுத்துக்கொண்டு, ஒளித்து வைத்திருக்கிறேன். இதை நன்றாகப் புரிந்துகொள்..
நல்லவனோ, கெட்டவனோ அதை நான் பார்ப்பதில்லை, என்னை நம்பி முழுமையாக சரண் அடைந்துவிட்டவர்களை நான் புறம் தள்ளுவது இல்லை. அவர்களுடைய அனைத்து விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். அவர்களைக் காப்பதே என்னுடைய வேலை. அவர்களின் நன்மை தீமைக் கணக்கைப் பார்த்து காப்பாற்றும் தன்மையுள்ளவன் அல்ல நான். அதை வேறு ஒருவன் பார்த்துக்கொள்வான். அதற்கேற்ப பலன் தருவான்..
நான் தரும் நன்மைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனது தராசுத் தட்டுக்கள் யாருக்காவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை.
அதேபோல, என்னை நாற்பது ஆண்டுகள் வணங்கியவனாக இருந்தாலும் சரி, நான்கு நாட்கள் மட்டும் வணங்கியவனாக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமாக என்னை நோக்கிக் கூப்பிட்டால் உடனடியாக நான் பதில் கூறுகிறேன்.
யாருடைய கண்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்து உருகி ஓடுகின்றனவோ அவர்கள் ஆத்மார்த்தமாக வேண்டுகிறார்கள். மற்றவர்கள் அந்த அவசியத்தில் இல்லை என்பதால், மேம்போக்காக வேண்டுகிறார்கள்.
எந்த வெள்ளம் புரண்டுவருகிறதோ அந்த வெள்ளம் வழிகளை உண்டாக்குகிறது. எங்கே நீர் வரத்து இல்லையோ அங்கே வழிகள் உண்டாவதில்லை. இதுதான் கண்ணீருடன் வேண்டுகிற வேண்டுதலுக்கும், கடமைக்காக வேண்டுகிற வேண்டுதலுக்கும் இடையேயுள்ள வித்தியாசம்.
என்னிடமிருந்து பறித்துக்கொண்டாயே எனக்கேட்டு அழாதே.. நீ என்னைப் பற்றிக் கொண்டு என்னிடமிருக்கிறாயே! நான் என்ன பேறு பெற்றவன் என எண்ணி அழுது என்னைப் போற்று..
என்னை வணங்குவதற்காக பூஜை புனஸ்காரங்கள் செய்வதையும், பிறர் பாராட்ட நடந்து கொள்வதையும் தவிர்த்துவிடு.. நான் இதை விரும்புவதில்லை. வெளிப்படையான ஆடம்பர வழிபாட்டுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை.
காரணம், அதைச் செய்வதற்கான பலனை உடனே அடைந்துவிட முடியும். அதற்கு மேல் பலனை எதிர்பார்க்க முடியாது அல்லவா? ஆத்மார்த்தமாக - இதயத்திற்குள் என்னை குடியேற்றி, அங்கே என்னை வழிபடு. அப்போது உன் மனதும், செயலும் யாருக்கும் தெரியாது.
அனைத்தும் ரகசியமாக இருப்பதால், நானும் எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன். நான் விரதமிருக்கிறேன் என்று நாலு பேருக்கு முன்னால் சொல்லவேண்டாம். அதனால் என்ன பலன் கிடைக்கும்? உனது விரதம் உன்னோடு இருக்கட்டும்.. அப்போது அதை பாராட்டி, பெருமிதப்படுவேன்.
என்னைப் போற்றுகிற அஷ்டோத்திரம் உனக்கு அத்துப்படியாக இருக்கலாம்.. பொருள் தெரியாத மந்திரங்களால் என்னைப் போற்றும் போது, எப்படி என் உயர்வை நீ உணர்வாய்? அதனால் இதைக்கூட செய்யாமல் சும்மா இருந்தால் போதும்.. நான் பார்த்துக்கொள்கிறேன்.
சும்மா இருப்பது என்பது..எதையும் செய்யாமல் சும்மா இருப்பதைக் குறிக்காது. மனதை வெறுமையாக்கி வைத்திருப்பது என்று பொருளாகும்.
வெற்றிடமாக வைக்கப்பட்ட மனதில் நான் குடியேறி மகிழ்வேன். நான் குடியேறிய பிறகு, உனக்குத் தன்னம்பிக்கை அதிகமாகும். வாழ்ந்துவிடுவோம் என்று வாழ்வின் மீது பிடிப்பு ஏற்படும்.
நாளை நாளை என தள்ளிப் போனாலும், நிச்சயம் தீர்வு உண்டு என்ற தைரியத்தில் நீ தலை நிமிர்ந்து நடப்பாய்..
என்னால் முடியவில்லை என்று கூனிக் குறுகி நடந்தாலும் உனது பிள்ளைகளை வைத்து உன் காரியத்தை முடித்துத் தருவேன்..
இப்படித்தான் இதற்கு முன்பும் செய்தேன்.. இதோ உனக்கும் செய்கிறேன்.. இனி வரும் காலத்திலும் செய்வேன்..
மனிதர்கள் புகழுமாறு நடப்பதால், உனக்கு எந்த நன்மையும் கிடைக்காது. நான் மெச்சும் படி நடந்தால் அனைத்தும் உனக்குக் கிடைக்கும்.
இவ்வளவு நாட்களாக, உன்னைச் சிறு சிறு விஷயங்களிலும் சரிப்படுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உனக்கு ஒரு ரகசியத்தை கற்றுத்தருகிறேன். அது என்னவெனில், ஒவ்வொரு உடலிலும் மூன்று அடுக்குகள் அதாவது லேயர்கள் உள்ளன.
உடம்புக்கு வெளியே ஒரு அடுக்கு உள்ளது. அதற்கு உள்ளே இன்னொன்று, அதனுள்ளே இன்னொன்று. மேலேயுள்ள அடுக்கு என்னைச் சார்ந்தது. அது மூன்றாவது அடுக்கு தெளிவடையும்போது வெளியே தெரிய ஆரம்பிக்கும். இதைத் தெரிந்தவர்கள் ரெய்கி என்ற பெயரில் இதை முறைப்படுத்துகிறார்கள்.
இந்த உடம்பினுள் இருக்கிறதே, அந்த அடுக்கு உன் பாப உருவம். அது என்ன செய்யும் என்றால், உன்னை இந்த உலகப் பொருளுக்கு அடிமை செய்து வைத்திருக்கும். குரு சொல்வதைக்கேட்காதே, நான் சொல்வதை மட்டும் கேள்..உருப்படுவாய் என தன் போக்கில் உன்னை இழுக்கத்தொடங்கும். இதற்கு நீ மனசாட்சி என்று பெயரிட்டுக் கொண்டிருப்பாய்.
உண்மையல்லாத - நிலையில்லாத அனைத்தையும் நிலை என நம்ப வைக்கும். எல்லாப் பொருளின் மீதும் ஆசைப்பட வைத்து அலைக்கழிக்கும். இதுதான் நரகத்தைத் தீர்மானிப்பது. இதற்குள்ளே இன்னொன்று உள்ளது அல்லவா? அது உன்னை தன்னம்பிக்கையோடு இரு..தெய்வத்தை நம்பு, அவரிடம் சரணடை என்று போதிக்கும்.
நம் கர்மாவால்தான் கஷ்டம் வந்தது. நமது துன்பத்திற்கு நாமே காரணம், யாரையும் நொந்து பிரயோசனமில்லை. எது வந்தாலும் அனுபவிக்கலாம் என அது சொல்லும். ஆனால் அதை கூடுமானவரை, இரண்டாவது அடுக்கு அழுத்தி விடுவதால், அதன் பேச்சை நம்மால் கேட்க முடியாது.
இந்த மூன்றாவது அடுக்கைத்தான் ஆத்மா அல்லது ஆத்மார்த்தம் என்கிறோம். இந்த ஆத்மா இன்பத்தை பற்றியோ துன்பத்தைப் பற்றியோ கவலைப்படுவது கிடையாது. எது வந்தாலும் ஏற்று நடக்கும் தன்மை படைத்தது.
நீ இதன் பேச்சைக் கேட்டு நடந்துகொண்டால் இரண்டாவது அடுக்கு நாளடைவில் மறைந்து விடும். அதாவது இன்பம் வந்தால் மகிழமாட்டாய், துன்பம் வந்தால் துவளமாட்டாய். இந்த நிலை தொடரும் போது, மூன்றாவது அடுக்கும், உடலுக்கு வெளியேயுள்ள அடுக்கும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும். அதாவது இந்த உடலை தங்கள் வசப்படுத்தி புண்ணிய உடலாக மாற்றும்.
அப்போது, முதலில் நீ எதற்கெல்லாம் ஆசைப்பட்டாயோ, அவையெல்லாம் கேட்காமலே உன்னிடம் நிரம்பி வழியும். பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இந்த நிலை வரும் போது, அனைத்தும் ஆண்டவன் சொத்து என்ற எண்ணத்தில் இருப்பாய். அது உனக்கு ஆசீர்வாதமாக மாறி, சொர்க்கத்தில் உனக்கு நிரந்தர இடத்தை உண்டாக்கும். நான் சொன்னது உனக்குப் புரிந்ததோ இல்லையோ, புரியுமாறு சொல்கிறேன்.
உலகை ஜெயிக்க வழி காட்டுவதாக மனம் சொல்வதை அதிகமாக கேட்காதே. ஆத்மார்த்தமாக என்ன தோன்றுகிறதோ அதைக் கேள். நல்லதைச்செய்தால் நல்லது நடக்கும். துன்பத்தை சகித்தால் இன்பம் பிறக்கும், கடவுளுக்கு பயந்து நடந்தால் அவரது ஆசி எப்போதும் உனக்கு இருக்கும் என அவை கூறுவதைக் கேள். அப்போது எனது பலம் உனக்கு முற்றும் கிடைக்கும். நீ வளமாக - நலமாக வாழ்வாய்.
ஆக, இப்போதிருக்கும் நிலையைப் பற்றி எப்போதும் கவலைப்படாதே. ஏனெனில், நான் உன்னை - உனது மாற்றத்தை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். உனது தகுதிக்கும்,தேர்ச்சிக்கும் ஏற்ப பலன்களை நிச்சயம் அனுப்பிக் கொண்டே இருப்பேன்.
இன்று ஒரு நாள் பொறு, நாளை உனக்கு நல்ல நாளாக இருக்க உன்னை இன்று தகுதிப்படுத்து. விழிகளில் நீரை தேக்கி உற்சாகமாகப் பிரார்த்தனை செய். பிறகு பார், எல்லாம் தாமாக வரும்.
அன்புடன் அப்பா
சாயி பாபா.
Friday, June 6, 2014
நான் உன்னைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment