அலோபதி மருத்துவரான, டாக்டர் பிள்ளையை பாபா சகோதரனே என்று பாசத்தோடு அழைப்பார். இவரிடம் அடிக்கடி பேசுவது, விஷயங்களைக் கலந்து ஆலோசிப்பது, தம் அருகிலே இருக்க விரும்புவது இவை பாபாவுக்குப் பிடிக்கும்.
இரு முறை இவர் காலில் சிலந்திக் கட்டி வந்து அவதிப்பட்டார். நண்பர் தீட்சித்திடம், ’வலி உயிரை எடுக்கிறது. செத்துவிடலாம் போலிருக்கிறது, பாபாவிடம் சொல்லி, இந்த வலியை பத்து ஜன்மத்துக்கு அனுபவிப்பதாகச் சொல்” என்று நொந்துக்கொண்டார் பிள்ளை.
தீட்சித் பாபாவிடம் வந்து பிள்ளை படும் துன்பத்தைச் சொன்னார். இதைக் கேட்ட பாபா உருகிவிட்டார். “பயப்பட வேண்டாம் என்று சொல், அவர் ஏன் பத்து ஜன்மங்கள் கஷ்டப் பட வேண்டும்? பத்தே நாட்கள் உழைத்து அவரது கஷ்டத்தையும் கர்ம வினைகளையும் நீக்கிவிடலாம். அவருக்கு நன்மை செய்வதற்கென்றே நானிருக்கிறேன்? பிறகு எப்படி அவர் சாக முடியும்? உடனே சென்று அவரை தூக்கி வாருங்கள் என்றார் பாபா. பிள்ளையை பாபாவிடம் அழைத்து வந்தார்கள்.
அவருக்கு பாபா தனது திண்டைக் கொடுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார். பிறகு, ”பிள்ளை, முன் வினைகளின் பயனை அனுபவிப்பதுதான் இதற்கு சரியான சிகிச்சை. கஷ்டத்தை, வலியை பொறுத்துக் கொள். கடவுள்தான் நமது காப்பாளர் எல்லாவற்றையும் தீர்ப்பவர். அவரை எப்போதும் நினை.. அவர் உன்னை பாதுகாப்பார். உனது எண்ணமே, செயல், செல்வம் எல்லாவற்றாலும் அவரை முழுமையாக சரணடைந்து விடு. அவர் உன்னை நிச்சயம் காப்பார்!” என்றார் பாபா.
”நானா சாகேப் பேண்டேஜ் போட்டார். அதனால் எந்த வித பிரயோசனமும் இல்லையே” என்றார் டாக்டர் பிள்ளை.
”நானா மடையன். பேண்டேஜை உடனே கழற்றிவிடும். இல்லாவிட்டால் நீ செத்து விடுவாய். இப்போது ஒரு காக்கை வந்து உன்னைக் கொத்தும் ! நீ குணமடைவாய்!” என்றார் பாபா.
அப்போது மசூதியை சுத்தம் செய்து கொண்டிருந்த அப்துல்பாபா, தவறுதலாக டாக்டர் பிள்ளையின் கால்களை மிதித்து விட்டார்.
உடனடியாக சிலந்திக்கட்டி உடைந்து அதிலிருந்து ஏழு சிலந்திப்புழுக்கள் வெளி வந்தன. டாக்டர் பிள்ளை வலி தாங்காமல் அழுது அரற்றினார்.
இதைப் பார்த்து, ”பாருங்கள், நமது சகோதரன் நன்றாகப் பாடுகிறார்”என்றார் பாபா.
”காக்கை எப்போது வரும்?” எனக் கேட்டார் டாக்டர் பிள்ளை.
’ஏற்கனவே வந்து கொத்தி விட்டுச் சென்றுவிட்டது. நீ வாதாவில் போய் ஓய்வெடு!’ எனஅனுப்பிவைத்தார்.
புண்ணில் உதியைத் தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தார் பிள்ளை. பத்தே நாட்களில் நோயிலிருந்து முற்றிலுமாக குணமானார்.
உடலாலும் மனதாலும் தாங்கமுடியாத வேதனையால் வலியால் அவதிப்படுவது முன் வினைப் பயனாகும். கர்மத்தின் பலனை அனுபவித்தாக வேண்டும். வேதனையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பாபா.
சில நேரங்களில் இந்த வேதனை முந்தைய பிறவியின் பலன் என்பர். முந்தைய பிறவியும் இனி வரும் பிறவியும் நமக்குத் தெரியாது. எனவே நல்லதை எண்ணி, நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும்.
இதற்காகவே பாபா எண்ணம், சொல், செயலால் இறைவனை சரணடை என்கிறார். இதைச் செயல்படுத்துவது கடினம். இதைச் செயல்படுத்த பயிற்சி முக்கியம். நாம ஜெபம், தான தர்மம், ஞானிகளின் தரிசனம்ஆகியவை கர்ம வினையின் தீவிரத்தைக் குறைக்கும்.
வெயிலை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.ஆனால் ஒரு குடை அவற்றின் தீவிரம் நம்மை தாக்காமல் காக்குமல்லவா? இப்படித்தான் ஞானியரிடம் சரணடைவதும் நம்மைக் காக்கும். நல்லதை செய்வதும், கெடுதல் செய்யாமல் இருப்பதும் நம்மை கர்ம வினையிலிருந்து காக்கும் உபாயங்கள் ஆகும்.
பாபாவின் திருவடிகளை நினைத்து இன்றே நாம ஜெபம், தான தர்மம், ஞானியரை சரணடைதல் ஆகியவற்றைச் செய்ய ஆரம்பிக்கலாம்.
கு. இராமச்சந்திரன்
No comments:
Post a Comment