Wednesday, January 16, 2013

பேய்க்கு உணவளித்த பாபா


பேய்க்கு உணவளித்த பாபா

     அது 1917ம் ஆண்டு.  வைகாசி மாதம்.  ஒரு டாக்டர் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சீரடிக்கு வந்தனர்.  அவரது மகனுக்குக் கெட்ட ஆவி பிடித்துக்கொண்டு இம்சை செய்து வந்தது.  பாபா இந்த கெட்ட ஆவியை துரத்தி விடுவார் என்ற நம்பிக்கையில் சீரடி வந்தார்கள்.  ஆனால் துவாரகமாயியில் பாபா கோதுமை அரைப்பதையும் அதை சீரடி எல்லையில் தூவுவதையும் பார்த்து, இதெல்லாம் வேண்டாத வேலை, மூட நம்பிக்கை என்று அந்த டாக்டர் எண்ணினார்.
     நினைப்பதெல்லாம் பாபாவுக்குத் தெரியாமல் போய் விடுமா? டாக்டரின் மனதை புரிந்த பாபா, அவர்களை மாலை மூன்று மணீயளவில் தன்னை வந்து பார்க்குமாறு கூறியனு ப்பினார்.  அவர்களும் சரியாக மூன்று மணிக்குத் துவாரகமாயியிக்கு வந்தனர்.
     பாபா டாக்டரையும் அவரது மகனையும் தன் கால்களைப் பிடித்துவிடச் சொன்னார்.  அந்த நேரத்தில் குரூரமான பேய் போன்ற உருவம் படைத்த ஒரு பெண், டாக்டரின் மகனை சாப்பிட எடுத்துச் செல்வதைப்போல கொத்திக் கொண்டு போக முயன்றது.  இதைக் கவனித்த பாபா, அவளை தன் சட்காவால் ஓங்கியடித்தார்.  அடி தாங்கமுடியாமல் ஓலமிட்டவாறே அவள் ஓடிவிட்டாள்.
     டாக்டரிடம் பாபா சொன்னார், ‘அந்தப் பெண் பேய் உன் மகனை சாப்பிடவே வந்தது.  அவளுக்கு கொடுக்க வேண்டிய உணவை நான் இன்று கொடுக்கவில்லை.  ஏன் தெரியுமா?
     கோதுமை மாவு அரைத்து சீரடி எல்லையில் தூவுவது எல்லாம் வேண்டாத வேலை என்று நினைத்தாய் அல்லவா?  அதனால்தான் நான் இன்று அவளுக்கு உணவளிக்கவில்லை.  உணவுக்காக இங்கு வந்த அந்த பெண் பேய், உன் பையனையே தூக்கிச் செல்ல முற்பட்டது.  அதை சட்காவால் அடித்து விரட்டிவிட்டேன்.  இனி உன் பையனுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது’  என்றார்.
     பாபாவின் எல்லாம் அறியும் ஞானத்தையும் அன்பையும் கண்ட டாக்டருக்கும் அவரது மகனுக்கும் பாபாவின் மீது பயம் கலந்த பக்தி ஏற்பட்டது.  மறுநாள் பாபாவிடம் உதி பெற்றுக்கொண்டு அவர்கள் தங்கள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
-    கு.ராமச்சந்திரன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...