Friday, January 25, 2013

சாயியா? சாயிராமா?



‘சாயி என்றுதான் சொல்லவேண்டும்.  ராம் எங்கிருந்து வந்தார்? ஆகவே சாயிராம் என்று சொல்லக்கூடாது. சிலர் தங்களது பெயருக்கு முன்னாலும், பின்னாலும் பாபாவின் பெயரைச் சேர்த்துக்கொண்டு பாபாவை மறைத்து, தன்னை சாயிபாபா என்று சொல்லிக்கொள்ளும் போலிகளை நம்பக்கூடாது. இவர்கள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
இந்த உண்மையினை எடுத்துச் சொல்லவேண்டும், செய்வீர்களா?
(கே.பி.முருகன், மதுரை)


     நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்கள், மற்ற வரலாற்று சரித்திரங்கள், பாரம்பரியம் போன்ற எதையும் படிக்காதவர்களாக இருந்தாலும் சத்சரித்திரத்தை முழுமையாகப் படிக்கவேண்டும். படித்ததை சிந்திக்க வேண்டும்.

     பாபா தன்னை பிறரது குருக்களாகவும், பிறரது இஷ்ட தெய்வங்களாகவும் காட்டினார் என்கிறது சத்சரித்திரம்.  சென்னை பஜனை கோஷ்டியில் ஒரு பெண்ணுக்கு ராமராக காட்சியளித்தார் என்றும், இன்னும் சிலருக்கு அவரவர் குருவாக, ஏன் காலம் சென்ற தந்தையாகக் கூட கூறுகிறார்கள்.  இல்லாதவர்களை எப்படி இவரோடு இணைத்துக் கூறுகிறார்கள்?

     விட்டல் நழுவல் பேர்வழி என்று பாபா கூறியிருக்கிறார்.  தத்தர் கோயிலுக்குப் போகாமல் சீரடிக்கு வந்த நானாவை கண்டித்திருக்கிறார்.  தேவிக்கு செய்த நேர்த்திக்கடனை தான் ஏற்க மறுத்து, அங்கேயே சென்று நேர்த்திக்கடனை செலுத்து எனக் கூறினார்.  மாருதியை அல்லா எனக் கூறினார் என அவரது சரித்திரம் கூறுகிறது.

     ராம் என்றால் சரணடைந்தவர்களைக் காப்பவன் என்று பொருள் என்றும், இன்னும் பல பொருட்கள் உள்ளன என்றும் சொல்கிறார்கள்.

     உங்களது பெயர் முருகன்.  முருகன் என்று பெயர் வைத்துக் கொண்டதால் முருகக்கடவுளையே மறைத்து விட்டீர்களா? அல்லது மக்கள் உங்களை முருகக்கடவுள் என்கிறீர்களா? அப்படியே இருந்தாலும் எத்தனை காலத்திற்க்கு மக்கள் உங்களை மனதில் வைத்திருப்பார்கள்? அப்படியிருக்க உங்களுக்கு எதற்காக  முருகன் என்று பெயர் வைத்தார்கள்?

     எப்போதும் இறைவனின் நாமத்தை நாம் உச்சரிக்க வேண்டும் என்ற பொருளில்தான் நமக்குப் பெயர்கள் இடப்படுகின்றன. உலகிலேயே அதிகமாக வைக்கப்பட்டுள்ள பெயர் முகம்மது. இவர்கள் எல்லோரும் நபிகளாகி விடுகிறார்களா? அல்லது நபியினை மறைத்து விட்டு இவர்கள் எழுந்துவிடுகிரார்களா?

     சாயி என்ற சூரியனை யார் உள்ளங்கையால் மறைத்துவிடமுடியும். கண்ணை மூடிக்கொண்டு கடவுளை மறைத்துவிட்டேன் என்று சொல்லமுடியுமா?

     துறவிகளை மகராஜ் என்று அழைப்பார்கள். எனவே அவர்கள் மகராஜாக்கள் என்று அர்த்தமாகிவிடுமா என்ன?

     வடநாட்டில் சாதுக்கள் அனைவரையுமே பாபா என்றுதான் அழைக்கிறார்கள். மெஹர் பாபா, சோட்டே பாபா என பலரை பாபா என்றே அழைக்கிறார்கள். இவர்கள் சாயி பாபாவினை மறைத்துவிட்டார்களா என்ன?

     இதையெல்லாம் யோசிக்கவேண்டும். சடங்குகளைப் பற்றிச் சொல்லித்தருகிற வேதங்கள் கடவுள் உருவமில்லாதவர் என்பதையும், கடவுளும் நாமும் வேறு அல்ல என்றும் சொல்லித் தருகின்றன.

     எல்லாவற்றிலும் என்னைப் பார் என்றுதான் பாபா போதித்திருக்குறார். புலையனும் நானே, நாயும் நானே, நகரும், நகராப் பொருட்கள் அனைத்திலும் நான் வியாபித்துள்ளேன் என அவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் எல்லோரும் ஒன்று என உணரலாம்.

     ஒரு மரத்தை அதன் கனிகளால் அறியலாம் என்று கூறுவார்கள். உனது கனிகளால் நீ சாயியின் சாயலை நிரூபித்துக் காட்டு.  சாயி பக்தன் என்று சொல்லிக்கொள்கிற நீ சாயியைப் போல வாழ்ந்துக்காட்டு.

     சத் சரித்திரத்தைக்கூட  சரியாக படிக்காதவர்கள் தன்னை சாயி பக்தர்கள் என்பதும், சாயி பாபாவின் தொண்டர்களைல் போல நடந்து கொள்வதும் பிறரை ஏமாற்றும் வழி. தொழில் நன்றாகப் போகாவிட்டால் பாபாவிடம் வந்துவிடலாம் என்றிருப்பவர்கள்.  இவர்கள் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு அவர்கள் வழியே நீங்களும் செல்லாதீர்கள். சத்சரித்திரம், உபநிஷத்துக்களைப் படியுங்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...