Sunday, January 27, 2013

வள்ளலார் நிகழ்த்திய அருள் அற்புதம்




மழையில் தழைப்பது பயிர்கள் – இறைவன் அருளில் தழைக்குது உயிர்கள்

     ஆம். இறைவனுடைய அருளின்றி ஓர் அணுவும் அசையாது.  இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களிடத்தே அன்பு எனும் நீர் பாய்ச்சி கருணை எனும் உரமிட்டு அருள் எனும் ஞானப்பயிரை வளர்த்தவர் வள்ளற்பெருமான் ஆவார்.  உயிர் இரக்கமே, என் உயிர் என்றும் மண்ணுயிர் எல்லாம் கடவுள் வடிவம் என்றும் அவர் நினைத்து வாழ்ந்த காரணத்தினாலேயே சுத்த தேகம், ஞான தேகம், பிராண தேகம் என்னும் முத்தேக சித்தி பெற்றார்.  இறையருளால் தம் உடலை பொன்னுடலாகவும், ஒளியுடலாகவும் பெற்றுக்கொண்டார். அதோடு அட்ட சித்திகளையும் கைவரப் பெற்றார்.  இறந்தாரை  எழுப்புவித்தல் என்னும் சித்தாடலைத் தவிர ஏனைய சித்தாடல்கள் வள்ளற்பெருமான் அவர்களால் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.

     கூடலூரில் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார்.  செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்னும் முதுமொழிக்கு இணங்க ஈந்து இசைப்பட வாழாது கருமி என்ற பட்டத்தோடு அவர் வாழ்ந்து வந்தார்.

     அவர் வள்ளற்பெருமானைக் காண அவ்வப்போது வடலூர் வந்து செல்வதுண்டு.  ஒரு நாள் வள்ளற்பெருமானைக் காண வந்த போது, கூட்டத்தின் இடையே எழுந்து தன்னை பிறர் மதிக்கவேண்டும் என்று நினைத்து ஐயா அவர்களைப் பார்த்து ’சுவாமி, தாங்கள் ஒரு முறை எனது இல்லத்திற்க்கு எழுந்தருள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதைப் போன்று அவர் பலமுறை கேட்டதுண்டு. அன்றைய தினம் வள்ளற்பெருமான் அவரை உற்றுப் பார்த்துவிட்டு “பல நாட்களாக நீங்களும் அழைக்கிறீர்கள், சரி, நாளை வருகிறேன்” என்றார்.  செல்வந்தருக்கோ உதறல் ஏற்பட்டது.  ஐயா இப்படிச் சொல்வார் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  ஐயா அவர்கள் வந்தால் வீண்செலவு ஆகுமே என்ற அச்சம் வேறு ஏற்பட்டது.

     அடுத்த நாள், வள்ளற்பெருமான் செல்வந்தருடைய வீட்டிற்க்கு சென்றார். அவர் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்த அவர், அவரது மனைவியிடம், ’வடலூர் சாமி வருகிறார், அவர் வந்தால் என் கணவர் வீட்டில் இல்லை வெளியூர் சென்றுவிட்டார் என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று மறைந்துகொண்டார். வள்ளற்பெருமான் வீட்டில் அடியெடுத்து வைத்ததும் அவரது மனைவி பெருமானிடம் தனது கணவர் சொன்னபடியே நடந்து கொண்டார். முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா! நம் பெருமான், இதை அறியாதவரா, என்ன?, நல்லது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

     வள்ளற்பெருமான் சென்றபின் கணவனும் மனைவியும் நிம்மதிப் பெருமூச்சுடன் கூடத்திற்க்கு வந்தனர். அப்போது ஓர் அதிசயக் காட்சியினை கண்டனர்.  ஐயா அவர்கள் நடந்து வந்த பாதையில் அவர் காலடி பதித்த தடங்களில் எல்லாம் பொன் துகள்கள் பரவிக்கிடந்தன.

தூக்கம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் எந்தனக்கே
ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் ஏக்கமெலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம்
தாங்கினேன் சத்தியமாகத்தான்.

     வள்ளற்பெருமான் பொன் வடிவம் தாங்கிய செய்தியினை இப்பாடலே மெய்பிக்கும்.  பொன் வடிவம் பெற்ற ஐயா அவர்களின் பொன்னடிகளில் பொன் துகள்கள் தானே பரவிக்கிடக்கும்!

     பொன் துகள்களை கண்ட செல்வந்தரின் மனைவி வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து ஒரு பெரிய தாம்பாளத்தினை எடுத்து வந்து அந்த பொன் துகள்களை திரட்ட முற்பட்டார். என்ன ஆச்சரியம்! அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டன.  கணவனும் மனைவியும் மெய்விதிர்க்க தங்களது தவறான செயலை நினைத்து வருந்தினர்.  ஒரு மகானிடம் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டோ, அறிவிழந்துவிட்டோமே, அளவற்ற செல்வம் இருந்தும் என்ன பயன்? எஞ்ஞான்றும் அழியாத பொன்வடிவம் பெற்ற பேரருளாளர் என்பதை உணராமல் எப்படிப்பட்ட பாவச்செயலினை செய்துவிட்டோம் என்று நினைத்து வருந்தினர்.

     இதைப் போன்று வள்ளற்பெருமானின் திருவருளால் திருந்தி நல்வழிச் சென்றோர் பலருண்டு.  வள்ளற்பெருமானைப் பார்த்தாலும், அவரை நினைத்தாலும் அவர் அருளிய திருவருட்பாவினைப் படித்தாலும், பிறர் படிக்க பக்கம் நின்று கேட்டாலும், மனத்துள் உணர்ந்தாலும் நம்மிடம் உள்ள தீவினைகள் துள்ளி ஓடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வாழ்க வையகம்!                                வளர்க சன்மார்க்க நெறி!

கட்டுரை ஆசிரியர் திருக்குறள் சுப.வீரபத்திரன், எம்.ஏ., பி.எட்.,
திருவண்ணாமலை
நன்றி: கருணீகமித்திரன் மாத இதழ், டிசம்பர் 2012

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...