Monday, January 28, 2013

பாபாவிற்க்கு ரதம் கொடுத்த பக்தர்



தர்ம தேவனான பாபாவின் உபதேசங்கள் சகலருக்கும் பொருந்தும்,  ஆகையால் அவரை தரிசிக்க உலகின் பல பாகங்களில் இருந்தும் ஜாதி மத பேதமில்லாமல் வந்து செல்கிறார்கள்.  பாபா யாரை எப்போது தன் பக்கம் இழுக்கிறார் என்பது யாருடைய புத்திக்கும் எட்டாதது.

     கர்னாடக மாநிலம் பெல்லாரியில் வசிக்கும் முகம்மது ரபீக் என்ற பக்தரை சாயி எப்படி தன் பக்கம் இழுத்தார் என்பதைப் பார்ப்போம்.

     பாபா மீதுள்ள பக்தியின் காரணமாக இருபது ஆண்டுகளாக சீரடிக்குப் பலமுறை வந்திருப்பவர் முகம்மது ரபீக். கடந்த வருடம் சீரடியில் லெண்டி பாக் அருகேயுள்ள நந்தா தீப் அருகே பெங்களூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரைச் சந்தித்தார்.  இருவரும் ஆரத்தி நேரத்தில் பாபாவை தரிசிக்கச் சென்றனர்.  பாபாவைத் தரிசித்துப் பக்திப் பரவசத்தில் மூழ்கிய ரபீக், பாபாவிற்க்கு எதையேனும் செய்ய வேண்டும் என விருப்பம் கொண்டுவிட்டார்.

     என்ன செய்யலாம் என யோசித்து பாபாவுக்கு பூக்கூடை ஒன்றை வாங்கித் தர முடிவு செய்து 28 கிலோ எடையுள்ள பூக்கூடையை வெள்ளியில் தயார் செய்து கொடுத்தார்.  அவர் வீடு திரும்பியதும் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.   மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.  இது பாபாவின் மகிமை என உணர்ந்து மேலும் பாபா மீது பக்தியுள்ளவரானார்.

     தலைவராகப் பொறுப்பேற்றதும் சன்ஸ்தானுக்கு மீண்டும் ஏதாவது காணிக்கை தரவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.  அதை சீரடி சன்ஸ்தான் உறுப்பினரான ஏக்நாத் கோந்த்கர் என்பவரிடம் தெரிவித்தார்.  அவர், வெள்ளியிலான ரதம் ஒன்றினை காணிக்கையாகத் தரலாம் என்றார். ஏக்நாத் மற்றும் சீரடி விஸ்வஸ்த மண்டலியின் அறிவுரைப்படி ரபீக் வெள்ளியிலான ரதம் ஒன்றை தயார் செய்தார்.

     அந்த ரதமானது புகழ் பெற்ற ப்ரவீண் மற்றும் இருபது பேர் கொண்ட குழுவினரால் செய்யப்பட்டது.  திருப்பதி, காளஹஸ்தி மற்றும் பெல்லாரி துர்கை அம்மன் கோயில்களுக்கு ரதம் செய்து தந்து சிறப்புப் பெற்றவர் ப்ரவீண்.  இவரது உருவாக்கத்தில் 230 கிலோ வெள்ளியில் 40 லட்ச ரூபாய் செலவில் இந்த ரதம் உருவானது.  இதைப் பார்த்த ரபீக்கின் நண்பர் விஜயகுமார் அவர்கள் மனதில் இதற்க்கு தங்க முலாம் பூசலாமே என்று சிந்தித்தார்.  தனது நண்பர் அஜய் குப்தாவுடன் சேர்ந்து எட்டு லட்ச ரூபாய் செலவில் தங்க முலாம் பூசச் செய்தார்.

     இப்படி வெள்ளியிலான ரதம் தங்கப் பூச்சுடன் சீரடியில் ராமநவமி, கோகுலாஷ்டமி, குரு பூர்ணிமா, ரங்க பஞ்சமி, வருடப் பிறப்பு, தத்த ஜயந்தி, விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் வலம் வருகிறது.

     இந்த ரதத்தில் பாபாவின் பாதுகைகள், சட்கா, பாபாவின் மூல உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டு பெல்லாரியிலிருந்து ஊர்வலமாக 2010 ம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தில் சீரடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

     முஸ்லிம் இனத்தவரால் கொடுக்கப்பட்ட இந்த காணிக்கையானது சீரடி சன்ஸ்தானின் வரலாற்றில் இதுவே பெரியதாகும். இந்த முஸ்லிம் பக்தன் செய்த சேவையை மகாராஷ்டிர மாநிலத்தின் மந்திரி ராதா கிருஷ்ண வி கே பாடீல், தலைவர் ஜயந்த சாசணெ, உப தலைவர் கிசோர் மோரே, உதவி எக்ஸிகியீட்டிவ் அலுவலர் யஷ்வந்த்ராவ் மானே ஆகியோர் பாராட்டி நன்றி கூறினார்கள்.

நன்றி:  சாயிலீலா
தமிழில்:  வெங்கட்ராயன், ஊத்துக்கோட்டை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...