பண்டரிபுரம். பாண்டுரங்கன் வாழும் திவ்ய ஷேத்திரம். மகாராஷ்டிர
மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் சந்திரபாகா நதிக்கரையில் அமைந்துள்ளது. விட்டோபா ஆலயம்
விசேஷ நாட்களில் சுமார் பத்து லட்சம் பேர் வரை தன் பக்கம் இழுத்து விடும்.
புராண காலத்திலிருந்தே பிரசித்திப் பெற்ற ஸ்தலம் இது.
13-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு
வரை தியானேஸ்வரியை (பகவத் கீதை) எழுதிய தியானேஸ்வர், நாமதேவர், ஏக்நாத், துக்காராம்,
புரந்தர தாசர், விஜயதாசர், கோபால தாசர், ஜெகன்னாத தாசர் போன்ற பக்தர்கள் பண்டரிபுர
விட்டலை வழிபட்டு மேன்மை அடைந்தவர்கள்.
இப்படிப்பட்ட புண்ணியத்தலத்தில் தாத்யா சாகேப்
நூல்கர் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். வேதங்கள்,
சாஸ்திரங்களில் நல்ல புலமை உள்ள இவர், தனக்கு குரு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர்.
அதிகம் படித்தாலே அடக்கத்திற்க்கு பதில் அகங்காரம்
வந்துவிடும். அறிவு கூட ஓரளவுக்கு மேல் வளரக்கூடாது போலிருக்கிறது. ஏனெனில் அது எப்போதும் தர்க்கம் செய்து கொண்டே இருக்கும்.
சத்சரித்திரம் எழுதிய தாபோல்கரும் சீரடியில் இருந்தபோது
இப்படித்தான் குருவின் அவசியம் என்ன என்று கேட்டு பின் பாபாவேலேயே குரு அவசியந்தான்
என உணர்த்தப்பட்டார். பாபாவையே குருவாக ஏற்றுக் கொண்டு என்றும் அழியாத சத்சரித்திரத்தை
எழுதினார்.
இந்த நூல்கர் ஒருமுறை ஜல்கான் என்ற ஊருக்குப்
பயணம் செய்தார். அங்கே அவருக்குத் தாங்கமுடியாத
கண் வலி ஏற்பட்டது.
இவருடைய சகோதரர் ஒரு டாக்டர். அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நினைத்திருந்த போதிலும்,
இன்னும் சில நாட்களில் குரு பூர்ணிமா வருவதை நினைவு கூர்ந்து, சிகிச்சை பெறாமலேயே சீரடிக்குச்
சென்றுவிட்டார்.
பாபாவை தரிசிக்கும் முன், சாதேயின் வாதாவில் சற்று
நேரம் ஓய்வு எடுத்தார். அவரது கண்வலி அதிகமாகிக்கொண்டே
வந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பாபாவைத்
தரிசிக்க துவாரகாமாயி வந்துவிட்டார்.
பாபா எப்போதும் போல் சாமாவிடம், “ஷாமா! என் கண்கள் ரொம்பவும் தொந்தரவு செய்கிறது. வலி தாங்கமுடியவில்லை” என்றார்.
இந்த வார்த்தையைச் சொன்னதுமே நூல்கரின் கண் வலி
இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. பாபா தனது
நோயினை குறிப்பிட்டே தனக்கு அனுக்கிரகம் செய்தார் என்பதைப் புரிந்துக்கொண்டார் நூல்கர்.
தனது பணிக்காலம் முடிந்த பிறகு சீரடிக்கு வந்து,
தனது இறுதிக்காலம் வரை சீரடியில் பாபாவுடனேயே தங்கிவிட்டார். அவர் காலமான அன்று அவருக்கு உதியும் தீர்த்தமும்
அனுப்பி, அவரது ஆன்மா சாந்தியடைய அனுக்கிரகம் செய்தார் பாபா.
- கு
ராமச்சந்திரன்
No comments:
Post a Comment