Friday, January 18, 2013

சஞ்சலப்படாதே! என் மீது பாரத்தை வைத்துவிடு!




        பாபா சொன்ன ஒரு கதையைக் கேளுங்கள். ‘ சஞ்சல புத்தியுடைய ஒருவன் இருந்தான்.  அவனது வீட்டில் தனம், தான்யங்கள் மற்றும் பிற பொருட்கள் ஏராளமாக நிரம்பிக்கிடந்தன.   ஆயினும் அவன் உபாதிகளைத் தேடினான்.
      அவசியமில்லாமல் தலை மேல் பாரத்தை ஏற்றிக் கொண்டு இங்கும் அங்கும் அலைந்தான்.  அவன் மனத்தில் அமைதியில்லை.  ஒரு நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான்.  உடனே அதைத் தூக்கிக் கொள்வான்.  அவனால் மனத்தை சலனமில்லாமல் செய்யமுடியவில்லை. 
      அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது.  நான் அவனிடம் சொன்னேன்.  ‘உன் மனத்தை நிலை பெறச்செய்து ஏதாவது ஒன்றில் நிறுத்து! அது எதுவாக  இருக்கட்டும். நீ அனாவசியமாக அலைகிறாய்.  உன்னுடைய மனத்தை ஏதாவது ஒன்றில் நிலை பெறச் செய்’
                                              (அத்தியாயம் 35:115-120)

சாயி பக்தர் காகா மகாஜனியின் முதலாளியான தரம்ஸீ சேட் பற்றி பாபா சொன்ன கதை.  தரம்ஸீ சேட்டுக்கு எல்லாவிதச் செல்வமும் கவுரவமும் புகழும் இருந்தும் மனத்தில் அமைதி இல்லை.  துக்கங்களையும், இன்னல்களையும் கற்பனை செய்து கொண்டு சதா கவலையில் மூழ்கி விடுவார் என்று சத்சரித்திரம் கூறுகிறது.
தரம்ஸீசேட்டுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் இப்படித்தான் எந்தப் பிரச்சனையும், நோயும், துன்பமும் இல்லாதபோதும், ஏதோ இனம் புரியாத பிரச்சனை இருப்பதைப் போன்று நினைத்துக்கொண்டு சதா துன்பத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.  இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?
நமக்கு இருக்கிற சஞ்சல புத்தி!
       சஞ்சல புத்தி என்பது அவநம்பிக்கையின் தோழன்!  குறிக்கோள் இல்லாத வழிகாட்டி!  நிலையற்ற மனத்தின் அடையாளம். இந்த புத்தியிருக்கிற வரை நாம் எதையும் நோக்கி பயணிக்க முடியாது, சாதிக்கவும் முடியாது!
       சஞ்சல புத்தியுள்ளவன் இரண்டு குதிரைகளில் இரண்டு கால்களை வைத்து பயணம் செய்பவனுக்கு ஒப்பானவன்.  இவனால் எந்தக் காலத்திலும் நிம்மதியாக வாழ முடியாது.
சஞ்சல புத்தி எப்போது ஏற்படுகிறது?

      எல்லாம் இருக்கும் போதும் ஏற்படும், எதுவும் இல்லாத போதும் ஏற்படும்.  பொறுப்பில்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்து நடத்தும் போதும், பொறுப்புடன் நடந்தும் தோல்வியின் பாதையில் போகும்போதும் ஏற்படும்.  மனசாட்சியுடன் நடந்து கொள்ளும்போதும் ஏற்படும்.  ஏதோ ஓர் எதிர்பார்ப்பு மனதில் இருக்கும்போதும் ஏற்படும்.
       அப்படியானால் எல்லா நிலைகளிலுமே சஞ்சல புத்தி ஏற்படுமா? என்றால் நிச்சயமாக ஏற்படும்.
       வாழ்க்கையில் நிறைய சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும் தன்னிறைவோடு வாழவேண்டும் என்ற எண்ணத்திலாவது ஒருவர் வாழவேண்டும்.  இதற்காகத் தொழில் செய்கிறோம். வேலைக்கு செல்கிறோம். நமக்கென கடமைகள் இருக்கின்றன.  அது தனது திருமணமாக இருக்கலாம், வீடு கட்டுவதாக இருக்கலாம், பிள்ளையின் படிப்பாக இருக்கலாம், தொழிலை பெருக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம் அல்லது வாழ்வில் முன்னேற ஏதோ ஒரு வழியாகவும் இருக்கலாம்.
       அவற்றை சரியாகச் செய்ய வேண்டும் என்று முனையும் போது பிரச்சனையை சந்திக்கிறோம்.
       எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது கொதிக்கிற எண்ணைய் போன்றது. இளச்சூடாக இருக்கும் வரை இதமாக இருக்கும்.  கொதிக்க கொதிக்கத்தான் உடல் வெந்து போகும்.
ஆமை இருக்கிறதே, அதைக் கொல்வதற்காக ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைப்பார்கள். நீர் இளஞ்சூடாக இருக்கும் வரை, இதமாக இந்தத் தண்ணீர் போல எங்கும் தண்ணீர் இருக்காது என நினைத்து ஆமை கால்களை அகல விரித்து நீந்தத் தொடங்கும்.  சில நிமிடங்களில் நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதிலேயே இறந்து போகும்.
இப்படித்தான் பிரச்சனைகளும்.
துவக்கத்தில் பிரச்சனை தெரியாமலேயே காலை விடுவோம்.  பிறகு சமாளித்துவிடலாம் என அடி எடுத்து வைப்போம்.  இறுதியில் அதிலேயே மாட்டிக் கொள்வோம். அதுவரை நிம்மதியாக போகும் நமது நிலைமை மோசமாகி, உதவிக்கு வேண்டியவர்களை கூப்பிடுவோம். ஒரு கட்டத்தில் அவர்களும் ஒளிந்துக்கொள்ளுவார்கள்.  பிறகு கடவுளைக் கூப்பிடுவோம்.  நமது கர்மா தீரும் வரை அவரிடம் உதவி பெறமுடியாது.  ஏனெனில் கடவுள் தருவதை கர்மா தடுத்துவிடும்.  அதன்பிறகு தற்கொலையா? ஊரை விட்டு ஓடுவதா? என சிந்திக்க வைக்கும்.  இதுதான் பிரச்சனையின் இயல்பு.
எப்படியும் திருப்பித் தந்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அனைவருமே கடன் படுகிறோம்.  நேரம் சரியில்லாத  காலத்தில்தான் கடன் தொல்லை என்ற ஒன்று நமக்குள் ஊடுருவி விடுகிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்,  இதனால் மேற்கொண்டு புதிய முயற்சி எதிலும் ஈடுபடாமலும், மேலும் கடன் பெற முயற்சிக்காமல், இருப்பதை வைத்து காலத்தை ஓட்டும் முயற்சியிலும் இருந்தால்  நாம் நிச்சயம் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் அது நம்மால் முடியாத ஒன்றாகி நமது நேரம் நம்மை வேறு திசையில் தள்ளிவிடும்.  அதனால் வட்டிக்கு மேல் வட்டிக்கு வாங்கி, வட்டியைக்கட்ட தனிக்கடன் வாங்குகிற கதையாக மாறும்போது மனம் சஞ்சலப்பட ஆரம்பிக்கும்.
கடன் மட்டுமல்ல, நமது குழந்தைகள் நலமாக இருப்பார்களோ மாட்டார்களோ என நினைக்கும்போதே மனம் சஞ்சலப்படுகிறது. அவர்கள் நம்மை மதிக்காத போதும் கூட மனம் சஞ்சலப்படுகிறது.
நமது செயல்கள் நமக்கு எதிராக திரும்பிவிடும் போதும், நல்லதைச் செய்து தீமையாக முடியும் போதும், நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த பிறகும் மனம் சஞ்சலப்படுகிறது.  இப்படி நம்மை மீறிய செயல்கள் நம் வாழ்வில் குறுக்கிடும்போதும் மனம் இயல்பாகச் சஞ்சலப்படுகிறது.
இந்நிலையில் இருப்புக்கொள்ளாமல் தவித்து புலம்புகிறோம்.  இத்தகைய நிலையை மனதிற்க்குள் வைத்துக்கொண்டு அலைபவனைத்தான் சஞ்சல புத்தியுள்ளவன் என்கிறோம்.

சஞ்சல புத்தியுள்ளவனின் நிலை

       சஞ்சல புத்தியுள்ளவன் எதையும் எளிதில் நம்ப மாட்டான்.  கடவுளைக்கூட நம்ப மாட்டான்.  கடவுளை நம்பினாலும் கை மேல் பலன் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பான்.  அது கிடைக்காத போது உடனடியாக வேறு கடவுளைத் தேடி ஓடுவான் அல்லது வேறு மதத்திற்குத் தாவுவான்.
எங்கும் அதே நிலை என்பதை அறிந்த பிறகு அனைத்தையும் விட்டு விட்டு வெறுத்துத் திரிவான். அல்லது தற்கொலை போன்ற முயற்சிகளில் ஈடுபடுவான்.
எல்லாமே இருக்கிறது.  தேவைகளுக்கு அவசியமே கிடையாது என்று இருந்தாலும் கூட மனதில் அமைதியிருக்காது.  எதையோ பறி கொடுத்ததைப் போன்றஉணர்வு இருக்கும்.  தினமும் இதே எண்ணத்தில் தூக்கத்தைத் தொலைத்துவிடுவான்,  என்னவோ நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு கூறுகிறது என அடிக்கடி கூறுவான்.
இப்படிப்பட்ட நிலையில் இருந்தால் இன்று முதல் கண்டிப்பாக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். 

என்ன செய்யவேண்டும்?

      மன சஞ்சலம் அடிக்கடித் தோன்றினால் மனத் தெளிவு இருக்காது.  எடுக்கிற முடிவுகள், போகிற பாதை என எதுவும் சரியாக இருக்காது.  ஆகவே எப்போதும் குழப்பத்தில் இருக்கவேண்டியிருக்கும். இதை முதலில் நாம் மாற்ற வேண்டும். 
       இதற்க்கு அற்புதமான ஒரு உபாயத்தை பாபா கூறுகிறார்.  முதலில் உன் மனதை ஏதாவது ஒன்றின் மீது செலுத்து.  உனக்கு எதன் மீது அதிகப் பிரியம் உண்டோ அதன் மீது மனதைச் செலுத்து. அப்போது மனம் குவிய ஆரம்பிக்கும். உன் பிரச்சனைகள் தீரும் என்கிறார்.
       நீங்கள் பாபாவின் மீது உங்கள் மனதைச் செலுத்தினால் போதுமானது.  அவர் இரக்கப்பட்டு உங்கள் மனதை அமைதி நிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். அப்போது மனம் அமைதியடையும்.
       நமது பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி அவர்கள் குழந்தைகளை இழந்த தவிப்பில் மன சஞ்சலத்தோடு வீட்டை விட்டுக் கிளம்பி பல இடங்களில் அலைந்து, எங்கும் அவர் எதிர்பார்ப்பு பூர்த்தியாக நிலையில் நேரடியாக சமாதி மந்திரில் குடியிருந்த பாபாவிடம் போனார். அந்த இடத்தில் கால் வைத்ததுமே அவரது மனதில் அமைதி குடி கொண்டு மனம் அடங்கிப் போனது. இனம் புரியாத சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தார்.  அதன்பிறகுதான் சாயி பாபாவிற்க்கு இத்தகைய சக்திகள் இருக்கின்றன என உணர்ந்து இந்தியா முழுதும் பிரச்சாரம் செய்து சாயி பக்தியினை வளர்த்தார்.
       இங்கு இன்னொரு உண்மையினை தெரிந்துக் கொள்ள வேண்டும்.  எத்தகைய பிரச்சன்னையாக இருந்தாலும் அது பாபாவின் அனுமதியோடு தான் வாழ்க்கையில் நுழைகிறது.  என்ன நடந்தாலும் சரி, பாரம் சுமர்ப்பவர் அவர் என்பதை நாம் பிரிந்துக்கொள்ளவேண்டும்.
       பாரம் சுபர்ப்பவர் அவர! அவருக்குத்தான் மூச்சிறைப்பு ஏற்படவேண்டும்.  நாம் அவரோடு சும்மாதான் நடக்கிறோம்.  கோமாளி மாதிரி….அய்யோ!  அம்மா!  முடியவில்லையே என புலம்புவது வேடிக்கையாக இல்லையா?
       எனவே கவலைப்படுவதை விட்டுவிடுங்கள். என்ன நடந்தாலும் என்னையும், என் பாரத்தையும் சுமர்ப்பவர் அவர் என நினைத்து, பாபாவின் மீது சுமையினை ஏற்றி வைத்துவிட்டு பிரச்சனையை உடனடியாக மறந்துவிடுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் பாபாவின் செயல்கள் வெளிச்சத்திற்க்கு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தால் பிரச்சனை தீரும்.
       ஜெய் சாயிராம்.

-சாயி வரதராஜன்.




No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...