Wednesday, June 17, 2015

பாபாவின் 24 மணி நேர தினசரி வாழ்க்கை!



பாபாவின் பழக்க வழக்கங்கள், அவர் பற்றிய சிறுசிறு விக்ஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பாபா தினமும் அதி காலையில் எழுந்திருப்பார். ஒருநாள் சாவடியிலும், மறுநாள் துவாரகாமாயியிலும் தங்குவார். பாபா துவாரகாமாயிக்கு வரும் நாளில், மாதவ் பால்சே என்ற சாயி பக்தர் துவாரகாமாயியை சுத்தம் செய்வார்.
துவாரகாமாயியில் பாபா முகம் கழுவுவதற்காக நீர் நிரப்பிய பெரிய பாத்திரம் வைக்கப் பட்டிருக்கும். முகத்தைக் கழுவிக் கொண்டு துனியையே முறைத்துப் பார்த்தபடி இருப்பார். அப்போது அவர் முகம் கோபத்தால் சிவந்தது போலிருக்கும். இந்த நேரத்தில் அவரை அணுகுவதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது.
சற்று நேரத்திற்கு பாகோஜீ  ஷிண்டே என்ற தொழுநோயாளி வந்து, பாபாவின் கைகளுக்குக்கட்டுப் போடுவார். இதற்காக பாபா அவருக்கு அளித்த தொகை ஒரு ரூபாய்.
காலை ஏழு முதல் ஏழரை மணிக்குள் பிட்சை எடுக்கச் செல்வார். எடுத்து வந்த உணவில் சிறு பகுதியை துனிக்குள் போடுவார். சிறிதளவு தான் உண்டுவிட்டு பிறருக்குத் தந்து விடுவார்.
காலை ஒன்பது மணிக்கு லெண்டித் தோட்டம் செல்வார். முக்கிய பக்தர்கள் மற்றும் சில கிராமத்தார் மட்டுமே பாபாவுடன் செல்ல முடியும். அங்கு சுமார் ஒண்ணரை மணி நேரம் வரை இருப்பார்.
பாபா போகும் வழியில் பக்தர்கள் மல்லிகைச்செடியை நட்டு வைத்திருப்பார்கள். கூடவே, அவர் மீது வெயில்படக்கூடாதுஎன்பதற்காக குடை பிடித்தபடி மக்கள் செல்வர்கள்.
10 முதல் 11 மணி வரை துவாரகாமாயியில் பஜனை நடைபெறும். 12 மணிக்கு ஆரத்தி நடைபெறும். அதன் பிறகு உணவருந்த அமர்வார். அவருடன் தாத்யா பாடீல், ராமசந்திர பாடீல், பாயாஜீ பாடீல் கோத்தே, பேட் பாபா மற்றும் சில பக்தர்கள் இருப்பார்கள். அனைவரும் தனித்தனி தட்டு களில் சாப்பிட, பேட் பாபாவும் சாயி பாபாவும் ஒரே தட்டில்தான் சாப்பிடுவார்கள். பேட்பாபா இல்லாமல் பாபா ஒரு நாளும் சாப்பிட்டது இல்லை.
சாயி பாபாவுக்கு மாம்பழம் பிடிக்கும். ஆனால் ஒரு சிறிய துண்டுப் பழத்தை எடுத்துக் கொண்டு மற்றதை பிறருக்குத் தந்துவிடுவார்.
ஒரு சேர் பால், ஒரு சேர் சர்க்கரை, ஒரு சேர் (930 கிராம்) கோதுமை ரொட்டித் துண்டு ஆகிய வற்றை ஒன்றாகக் கலந்து பிசைந்து அதைப்பிரசாதமாகத் தருவார்.
பாபாவுடன் உணவு உண்ண பல பக்தர்கள் காத்திருப்பார்கள். சாமா பாபாவின் அனுமதி பெற்று பக்தர்களுடன் பாபாவை சாப்பிட வைப்பார். உணவு முற்றிலும் பரிமாறும் வரை சகுண்மேரு நாயக், சாப்பிடாமல் பரிமாறி காத்திருப்பார். அனைவரும்
சாப்பிட்ட பாத்திரங்களை சகுண் மேரு நாயக் கழுவி சுத்தம் செய்வார். சாப்பிட்டு தனது ஆசனத்தில் பாபா அமர்ந்த பிறகு, அவருக்கு வெற்றிலை மடித்துக்கொடுப்பார்.
மதியம் இரண்டு மணிக்கு துவாரகாமாயியில் நடனம், விளையாட்டு போன்றவை நடைபெறும். நாடகங்களும் நடைபெறும். இதற்காகப் பல குழுக்கள் அங்கு இருந்தனர். பல குரல் பேசுவதும் நடக்கும். அவர்கள் அனைவரும் பர்பி சாப்பிட பாபா தினமும் இரண்டு ரூபாய் தருவார்.
இவர்களுடைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டு களித்த பிறகு, பாபா சபா மண்டபத்தில் உலவுவார். சில நேரம் அவர் சுவரில் கையை ஊன்றி சாய்;ந்து கொண்டிருப்பார். ஓய்வெடுப்பதும், பக்தர்களுடன் பேசுவதும் நடக்கும். அப்பா கோதேவை அழைத்து இன்றைக்கு பத்து குதிரை வண்டிகள் வந்துள்ளன. எதிர் காலத்தில் எவ்வளவு வண்டிகள் வரும்? மக்கள் எறும்புகளைப்போல சாரை சாரையாக வரும் போது கங்காவே வற்றிவிடுமல்லவா? எனக் கேட்பார்.                      ( இப்போது சீரடியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது).
இந்த எண்ணெய் வியாபாரிகள் நேர்மையில்லாதவர்கள், நான் இவர்களை வெறுக்கிறேன். இங்கு அதிக நாட்கள் இருக்கமாட்டேன் என கோபத்தோடு கத்துவார். தாத்யா ஓடிவந்து பாபாவின் பாதங்களை பிடித்துக்கொண்டு, ”இறைவா, அமைதியாக இருங்கள். நாங்கள் இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்கிறோம். நீங்கள் ஓய்வெடுங்கள்  என சமாதானப்படுத்தியதும், பாபா அமைதியாவார்.
பாபாவை சமாதானப்படுத்த வேறு யாருக்கும் தைரியம் வராது. பாபா சமாதானம் அடைந்த பிறகே, தாத்யா தனது வீட்டுக்குச் செல்வார். பாபாவுக்கு தினமும் தாடியை டிரிம் செய்ய பாலா நையா என்ற பார்பர் வருவார். அவருக்கு தினமும் பாபா ஒரு ரூபாய் தருவார்.
பாபாவின் குளியல் முறை பற்றி உறுதியாகச் சொல்லமுடியாது. சில நாட்கள் இரண்டு மூன்று வேளைகூட குளிப்பார். சில நாட்களில் வாரக்கணக்கில் குளிக்காமல் இருப்பார். ஈர கப்னி உடையை துனியின் அனலில் காயவைப்பார். அதுவரை இடுப்பில் பீதாம்பரம் போல லுங்கி அணிந்திருப்பார்.
பாபாவின் கப்னி கிழியும் வரை அதை அணிந்து கொண்டிருப்பார். குளிக்கும்போது அதை கழற்றி வைத்ததைப் பார்த்து தாத்யா, மேலும் அந்த கப்னியைக் கிழித்துவிடுவார். வேறு வழியின்றி பாபா புது கப்னியை அணிய வேண்டியது வரும். பழையதைக் கிழிக்காதே. அதுதான் சவுகரியமாக இருக்கிறது, புதியதை அணிய எனக்கு சிரமம் ஏற்படுகிறது என்பார் பாபா.
மாலையில் பிலாஜீ குராவ் என்ற பக்தருடன் விளையாடுவார். குராவின் வீடு துவாரகமாயிக்கு நேர் எதிரில் இருந்தது.
இரவு எட்டு மணிக்கு பாபா அனைவருக்கும் பணப்பட்டுவாடா செய்வார். அவரது நீண்ட பாக்கெட் நிறைய காசுகள் இருக்கும். யாருக்கு எவ்வளவு வழக்கமாகத் தருவாரோ அதே தொகைதான் அவர் கைவிட்டு எடுக்கும்போதும் இருக்கும். பணம் கொடுத்தபோது, எந்த பக்தரிடமிருந்தும் வேலை வாங்கமாட்டார். பிறகு எதற்காக அவர் அவர்களுக்குப் பணம் கொடுத்தார் என்பது புதிராகஇருக்கும். சில வேளைகளில் பல பக்தர்கள் பணம் கேட்டு பாபாவை நச்சரிப்பார்கள்.
ஒருமுறை ஒருவன் பாபாவிடம் அதிகாரமாக பணம் கேட்டான். ”பணம் இல்லை, தீர்ந்துவிட்டது. நாளைக்குத் தருகிறேன் என்றார் பாபா. அவன் விடுவதாக இல்லை. ”நாளை என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்றே தந்தாக வேண்டும்என்று சண்டைக்குத் தயாராக இருப்பவன் போலப்பேசினான். தன்னிடமிருந்து கை நிறைய காசுகள் எடுத்து மண்டபத்தில் வீசி எறிந்தார். அவன் அதை பொறுக்கிக் கொண்டான்.
பாபாவுக்கு எப்படி பணம் வருகிறது என்பது பற்றி அரசாங்கம் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டது. ஆனாலும் கண்டறிய முடியவில்லை. புதிதாக மணமாகி ஆசி பெற வந்தால் அவர்களுக்கு தலா ஒரு ரூபாய் கொடுத்து ஆசிர்வதிப்பார்.
இரவு ஒன்பது மணிக்கு தாத்யா பாடீல் பாபாவுக்கு உணவு கொண்டுவருவார். சிறு அளவு கோதுமை ரொட்டியை பாபா எடுத்துக் கொண்டு மீதியை தாத்யாவிடம் தருவார். ரொட்டியில் சிறிது எடுத்து பாபா தாத்யாவின் வாயில் ஊட்டுவார். தாத்யாவும் பாபாவுக்கு ஊட்டுவார்.
இரவில் தடித்த கோணி ஆசனத்தில் பாபா உறங்குவார். தலைக்கு அடியில் ஒருசெங்கல்லை வைத்துக்கொண்டு படுப்பார். இரவு முழுக்க மகல்சாபதி உறங்காமல் பாபாவின் திருவடிகளை அமுக்கிவிடுவார். அவர் அவ்வாறு அமுக்காதபோது, ஏன் அமுக்கவில்லை என பாபா கேட்பார். (பாபாவும் உறங்குவதில்லை போலும்).
மன்னித்து விடுங்கள் பகவான் எனக் கூறியபடி தனது சேவையை மகல்சாபதி தொடர்வார். இரவில் ஒரு நாள் கூட மகல்சாபதியை பிரிந்திருக்க பாபா விரும்பியதே கிடையாது. இயற்கை உபாதியைக் கழிக்க மகல்சாபதி சென்றால்கூட, என்னைவிட்டு கீழே போய்விடாதே, விழுந்து இறந்துவிடுவாய் என்பார் பாபா

இதுதான் பாபாவின் 24 மணி நேர வாழ்க்கை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...