Wednesday, June 10, 2015

ஏழு கடல் தாண்டி பாபா செய்த அற்புதம்!



நான் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவன்.  என் பெயர் கார்த்திக். எனது மூத்த சகோதரர் ஆஸ்திரேலியாவில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  கடந்த மாதம் திடீரென அவர் நாக்கில் சிறிதளவு கட்டி வந்தது. மறுநாளே நாக்கு முழுவதும் பரவி தொண்டையையும் பாதித்தது. பேச முடியாமல் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்து மருத்துவப்பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
ஆயினும் மருத்துவர்களால் அது என்ன நோய் என்றும் எதனால் எப்படி வந்தது என்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் நாக்கில் இருந்த கட்டியின் சீழை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வேளை வாய்ப்புற்று நோயாக இருக்கும் என்று கூறினார்கள். மருத்துவர்கள் அண்ணியிடம், அண்ணனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும், பரிசோதனையின் முடிவு வந்த பிறகுதான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
பன்னிரெண்டு நாட்களாக யாரிடமும் பேசமுடியாமல் உணவு உட்கொள்ளாமல் வெறும் இளநீர் தண்ணீர் அருந்திக்கொண்டு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் பரிசோதனை முடிவுகள்ஒன்றின் பின் ஒன்றாக வந்தது. எல்லாம் நார்மலாகத்தான் இருந்தது. மருத்துவர்கள் குழம்பிவிட்டார்கள். நாக்கிலிருந்து எடுக்கப்பட்ட சீழ் பரிசோதனை முடிவும் மவுத் கேன்சர் என்றில்லை என்று வந்தது.
ஆனால் இது என்ன கிருமி, எப்படி வந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று அண்ணி முடிவெடுத்து என்னிடம் தெரியப்படுத்தினார்கள்.
புதிய கிருமியாக இருக்கும் பட்சத்தில் இது பிறருக்குப் பரவுவதற்கு வாய்ப்பிருக்கும் என அரசாங்கம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவிடும். ஏனெனில் இந்தக் கிருமி பற்றிய மேல் பரிசோதனையை அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.. அதற்குள் நாம் இந்தியா அழைத்து வந்துவிடலாம் என்பது தான் அண்ணி கூறிய விக்ஷயம்.
”இன்னும் இரண்டு நாட்கள் சற்று பொறுமையாக இருங்கள் பார்ப்போம்”, என்று கூறிவிட்டு, நான் சீரடியாக நினைக்கிற பெருங்களத்தூர் வந்தேன். சாயி வரதராஜன் வடிவில் உட்கார்ந்திருந்த பாபாவிடம் இதைக் கூறினேன். அவர் சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு,  “அண்ணனுக்கு உதி கொடு!” என்றார்.
”அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்!”  என்று கூறினேன். ”நம்பிக்கை இருக்குமானால், என் அண்ணன் குணமாகவேண்டும் என பாபாவிடம் வேண்டிக்கொண்டு தினமும் சாப்பிடுங்கள். இப்படித்தான் சென்னையில் என் பையனுக்கு உடம்பு சரியில்லாதபோது, சீரடியில் இருந்த நாங்கள் சாப்பிட்டோம். பையன் குணமானான். இதை நீங்களும் செய்யுங்கள், உங்கள் அண்ணன் குணம் அடைவார்!”  என்று கூறி அருளாசி வழங்கினார்.
பாபாவிடம் (சாயி வரதராஜனிடம்) உதி பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினேன். அன்று மாலை பாபாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டு உதியை என் நாக்கில் முழுவதும் தடவிக் கொண்டு, பாபா நாமத்தை கூறி முழு நம்பிக்கையுடன் வேண்டிக் கொண்டேன். மறுநாள் காலையிலும் அதேபோல் செய்தேன்.
சுமார் மதியம் மூன்று மணியளவில் என் அண்ணன் தொலைபேசியிலிருந்து அழைப்புவந்தது. மிகவும் உற்சாகத்துடனும், சந்தோக்ஷத்துடனும் தொலைபேசியை எடுத்தேன். என்ன ஆச்சர்யம்! என் அண்ணன் பேசினார். பன்னிரண்டு நாட்களாக பேசமுடியாமல் இருந்த அவர் பேச ஆரம்பித்துவிட்டார். மேலும், நேற்று இரவிலிருந்து கட்டிகள் குறைந்து கொண்டிருந்தது எனவும், இன்று முழுமையாக மறைந்துவிட்டது என்றும் கூறினார். உணவும் சாப்பிட முடிகிறது என்று கூறினார். உடனே அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று மீண்டும் பரிசோதனைகள் செய்தார்கள். மருத்துவர்கள் வியப்படைந்தார்கள்! எந்த மருந்தும் கொடுக்கவில்லை, எப்படி குணமடைந்தது என்று வினவினார்கள்.
மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் பாசிடிவ்வாக வந்தது. இன்றுவரை மருத்துவர்கள் புரியாமல் உள்ளார்கள். மனித சக்தியால், அறிவால் பாபாவுடைய அற்புதங்களையும், செயல்களையும் அளக்க, அறிய முடியாது என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய உதாரணம் ஆகும். இப்போது என் சகோதரர் பரிபூரணமாக குணம் அடைந்து குடும்பத்துடன் சந்தோக்ஷமாக உள்ளார்.
ஒரே இரவில் ஏழு கடல் தாண்டி பாபா செய்த அற்புதம் இது. என் பாபாவுக்கு கோடானு கோடி நன்றி எனக் கூறினார் அது மிகையாகாது. எனவே அவர் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
சாயி குழந்தைகளுக்கு ஒரு வேண்டுகோள்..
நான் எப்பொழுது பெருங்களத்தூருக்கு வரும் போதும் எனக்குள் தோன்றுகிற ஒரு விக்ஷயம். இது சீரடிதான். நான் சீரடிக்குத்தான் வருகிறேன். இங்கு பாபாவுடன் (சாயி வரதராஜனுடன்) பேசுகிறேன், பிரார்த்திக்கிறேன், அருள் பெறுகிறேன் என்றுதான் நினைத்து வருவேன்.
ஆம், சாயி வரதராஜனிடம் பாபா நிறைவாக உள்ளார் என்று கூறுகிறார்கள். அது என்னைப்பொறுத்தவரை எண்பது சதவிகித நம்பிக்கையை மட்டுமே தருகின்ற ஒன்றாக இருக்கிறது. மாறாக, பாபாதான் சாயி வரதராஜன் வடிவில் இருக்கிறார் என்று நான் எப்பொழுதும் நம்பி வணங்குவேன். இது நு}று சதவிகித நம்பிக்கையை அளிக்கிறது.
இனி எல்லோரும் சீரடிக்குப் போவதாக, பாபாவுடன் பேசுவதாகத் தெளிவடைந்து பெருங்களத்தூருக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடையாது.
பிரார்த்தனையை மட்டும் கொண்டு வாருங்கள், போகும்போது நம்பிக்கையையும் உதியையும் எடுத்துச் செல்லுங்கள். பிறகு அனைத்தும் அப்பா பாபா பார்த்துக் கொள்வார். என் நம்பிக்கை இதுதான்.
ஜெய் சாய்ராம்.

 சாயி கார்த்திக், பாண்டிச்சேரி


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...