Sunday, June 14, 2015

பாபா எப்போதும் உன்னுடன் தான் இருக்கிறார்!





ஓர் இரவு குடும்பத்தார் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது, என் தம்பி திடீரென்று என்னை எழுப்பினான்.  “ அக்கா,  இங்கே பாருங்க, என் வலது கை திடீரென வீங்கி இருக்கிறது”  எனக் கூறினான்.
ஏதேனும் பூச்சி கடித்திருந்தால்கூட அடையாளம் தெரியும். அப்படி எந்த அடையாளமும் இல்லை. உடனடியாக பாபாவிடம் பிரார்த்தனை செய்தோம்.
என் அம்மா எழுந்து  “பாபாவின் உதியைத் தடவினால் எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறினார்.
”அதெல்லாம் தேவையில்லை, களிம்பு ஏதேனும் இருந்தால் தடவுங்கள்”, என்றான் என் தம்பி.
நான் உதியைத் தடவி பிரார்த்தித்தேன். மறுநாள் காலையிலேயே வீக்கம் காணாமல் போயிருந்தது. இதை ஆச்சரியத்தோடு கூறிய என் தம்பி, அன்று முதல் உதியின் மகிமையைப் பற்றி கூற ஆரம்பித்ததோடு, பாபாவின் பக்தனாகிவிட்டான்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து திரும்பிக்கொண்ருந்தபோது, என் பள்ளித் தோழி என்னை சந்தித்து நலம் விசாரித்தாள். தாய் வீட்டிற்கு பிரசவம் பார்க்க வந்திருப்பதாகவும், இன்னும் நான்கு நாட்களில் குழந்தைப்பேறு நடக்கலாம் என்றும், தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க இருப்பதாகவும், இதனால் ஏற்படும் பிரசவம் பற்றிய பயத்தையும் கூறினாள்.
”எதற்கும் பயப்படாதே!  பாபா இருக்கிறார். மருத்துவமனை செல்லும் முன்பு பாபாவை வேண்டிக்கொண்டு செல். நாளை உதி தருகிறேன். அதை வயிற்றின் மீது தடவிக் கொள். ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக பிறப்பார்கள். பிரசவம் ஆகும்வரை உதியைப் பூசிக்கொண்டிரு!”  என்று கூறினேன்.
ஏழு நாட்கள் கழித்து போன் செய்தாள். நான் சொன்னதைப் போல தினமும் செய்துவந்ததாகவும், சுகப்பிரசவம் ஆனதாகவும், ஆண் ஒன்றும் பெண் ஒன்றும்பிறந்ததாகவும் கூறினாள். விரைவில் குழந்தைகளை உள்ளூரில் உள்ள பாபா ஆலயத்திற்கு அழைத்துச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தாள். நான் பாபாவுக்கு நன்றி கூறினேன்.

ஒருநாள் சமைத்துக் கொண்டிருந்தபோது, பாபா என்னுடன் நீங்கள் இருப்பது உண்மையானால், இன்று இரவுக்குள் என் வீட்டிற்கு நீங்கள் சாப்பிட வரவேண்டும். வருபவர் உறவினராகவோ, அக்கம் பக்கத்தினராகவோ இருக்கக்கூடாது என மனதில் வேண்டியபடி சமைத்தேன்.
எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு மற்ற வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். மாலை ஆறுமணியளவில் எங்கள் கதவைத்தட்டும் சத்தம் கேட்டு, திறந்தேன். பத்து வயதுள்ள சிறுவன் நின்றிருந்தான். தொலைவில் இருந்து வருவதாகவும், மிகவும் பசிப்பதாகவும் சாப்பாடு இருந்தால் தருமாறும் கேட்டான்.
காலையில் பாபாவிடம் வேண்டியதை மறந்து போயிருந்தேன். இதனால் அம்மாவிடம் பையன் வந்த தகவலைக் கூறியபோது, அம்மா அவனை அழைத்து உணவு பரிமாறி அனுப்பி வைத்தார்.
இரவு படுக்கும் முன்பு பிரார்த்தனை செய்தேன். அப்போதுதான் காலையில் வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது. உடனடியாக பரவசத்துடன் அம்மாவிடம் நடந்ததைக் கூறினேன்.
”பாபா எப்போதும் உன்னுடன்தான் இருக்கிறார் என்பதை இப்போது உணர்கிறாயா? என்று அம்மா கேட்டார்.
பாபா உங்களை சோதிக்க நினைத்த என்னை மன்னித்துவிடுங்கள் என மன்னிப்புக் கேட்டு பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன்.
அனிதா, வேலூர்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...