Friday, June 5, 2015

உன் முழு இதயத்தோடு சரணடை!

சத்சரித்திரம் நமக்குக் கற்றுத்தருகிற உண்மையான ஒரு பாடம்,  ஞானிகளிடம் சரணடைதல்! நமது ஆன்மீகம் குரு வழிபாட்டைஅடிப்படையாகக்கொண்டது.  குருவே பரப்பிரம்மம் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறது.
இந்த உலகில் போதிக்கப்பட்ட இறை தத்துவங்கள் குரு அருளால் அறிமுகப்படுத்தப் பட்டவை. இன்று நாம் வணங்கும் எல்லா தெய்வ வடிவங்களும் குரு உபதேசம் செய்து வாழ்ந்த மகான்களின் வடிவங்கள் என்றால் அது மிகையாகாது. இதனால்தான் நீங்கள் வாழ வேண்டுமானால் குருவின் திருவடித்தாள்களைப் பணியவேண்டும் என ஆன்மீகம் வலியுறுத்துகிறது.
இன்றைக்கு நீங்கள் மதிக்கிற சாயிவரதராஜன் என்கிற எனக்கு உங்கள் அளவுக்கு பக்தியில்லை, ஞானம் இல்லை, வழிபாடு கிடையாது. ஆனால் தெய்வ அனுக்கிரகம் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். காரணம், நான் எந்த ஞானியைப் பார்த்தாலும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, முழு மனதோடு பணிவதுதான் காரணம்.
ஒரு சில போலி ஆன்மீக அமைப்புகளும், போலி ஞானிகளும் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள், மற்றவர்கள் கால்களில் விழுவது அபச்சாரம் என போதிப்பார்கள். நான் இதை ஆதரிப்பது கிடையாது.
ஞானிகள் கடவுள் ரூபம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் யாரும் இதை ஆதரிக்கமாட்டார்கள். ஏனெனில், இந்த உடல் செய்த பாவங்கள் அனைத்தும் ஞானிகளின் திருவடிகளை நமஸ்கரிக்கும்போது அழிகின்றன. அதாவது நமது பாவங்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் நமது உடல் புனிதமடைகிறது. இறை அனுபூதி கிடைப்பதால், நமது ஆன்மாவுக்கு மோட்சம் கிடைக்கிறது. உலக வாழ்க்கையில் ஞானிகளுடைய கருணை மிக்கப் பார்வையும், ஆசீர்வாதமும், பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன.
”ஞானிகளுடைய கருணா கடாட்சமும், ஆசீர்வாதமும், பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன. வேறு எதுவும் தேவையில்லை”. என்று சத்சரித்திரம் அத்தியாயம் 13 - 153 ம் வசனம் உறுதிப்படுத்துகிறது.
ஞானி என்றால் யார்?
தன்னை அறிந்தவன் ஞானி. நிறைய பேர் தன்னை அறியாமல் இருந்தும் ஞானி என சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு சில மந்திர தந்திர விஷயங்கள் இருந்தாலோ, சாமியாடினாலோ தம்மை ஞானி என நினைத்துக் கொள்கிறவர்கள் அதிகம். இவர்கள் உண்மையில் அஞ்ஞானிகளே.
இத்தகையவர்களின் பாதங்களை நமஸ்கரிப்பதால் நமது பாவம் போய்விடுமா? என்றால், நிச்சயம் போகும் என்பதுதான் உண்மை. மெய்ப்பொருள் நாயனாரை கத்தியால் குத்திய முத்த நாதனைக் கொல்ல, நாயனாரின் மெய்க்காவலர் முயன்றபோது, தத்தா!  இவர் நம்மவர் என்று நாயனார் கூறி தடுத்து தரையில் சரிந்தார் என சாஸ்திரம் கூறுகிறது.
பொய்யடியாரையும் மெய்யடியாராக நினைத்து வணங்குவது உண்மையான பக்தரின் நிலை. அதற்கான பாவ புண்ணியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவர்களின் நிலை. மெய்யடியாரை வணங்கும்போது, அவர்களிடம் இருந்து புண்ணியமும், அருளும் நம்மிடம் வரும். நம்மிடமுள்ள பாவங்கள் அவர்களுக்குச் செல்லும். அவர்கள் இறையருளால் அந்தப் பாவங்களைப்போக்கிக் கொள்ள முடியும். ஆனால், நம்மிடமிருந்து பாவம் கடத்தப்படும் போது பொய்யடியார், மேலும் பாவம் சேர்ந்தவராகி பெருந்துன்பத்திற்கு ஆளாவார்.
அவரிடமிருந்து எந்த பாவமும் நமக்கு வராது, மாறாக, அவரிடம் மிச்சம் மீதி எஞ்சியிருக்கும் புண்ணியப் பலன்கள் நமக்கு வந்துவிடும். ஆகவேதான், பிறரது பாதங்களை நமஸ்காரம் செய்யும்போது, இறைவா இது உனது பாதம் என எண்ணிச் சரணடைகிறேன் என்று கூறுங்கள். அனைத்தும் சாதகமாகவே நடக்கும்.
சத்சரித்திரம் கூறுகிற விக்ஷயங்களை சற்று தியானித்துப் பார்க்கலாம்.
நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களானால், இவ்வுலக வாழ்வு என்னும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மை பத்திரமாக இட்டுச் செல்வார்கள்.
நாமஸ்மரணம்:
கலி காலத்தில் மனிதர்களின் பாவங்களை அழிப்பதற்காக தவம், யாகம் போன்ற கடும் முயற்சியில்லாமலேயே பகவானின் நாமத்தை ஒன்றிய மனத்தோடு சொன்னாலே பாவம் போய் விடும் என்பது பகவான்  ஸ்ரீ கிருஷ்ணர் திருவாக்கு. நமக்கு மனம் ஒன்றாது, நாம ஜெபம் செய்யவும் முடியாது. என்ன செய்யலாம்? ஞானிகளின் பாதங்களைப் பிடித்துக் கொண்டால் போதும்.
வழிபாடு்
நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற நாம் இறைவனை வழிபடுகிறேhம். நம்முடைய கோரிக்கை நிறைவேறா விட்டால், எப்படி வழிபாடு செய்வது என்று திகைக்க நேரிடும்.
சத்சரித்திரம் கூறுகிறது: இறைவனின் ரூபம் நமது மனதில் பதிக்கப்பட வேண்டும். புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப்படட்டும். வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம். உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப் பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனதை நிலை நிறுத்துங்கள்.
இப்படி செய்வதுதான் வழிபாடு. இதைத் தவிர எட்டு வித உபசாரம், பதினாறு வித உபச்சாரம் என்று இறைவனுக்கு உபச்சாரம் கூறி வழிபட வேண்டிய நிலையும் இருக்கிறது. வழிபாட்டின் போது சரியான மந்திரப் பிரயோகம் செய்யவேண்டும். அவரை பூக்களாலும், பாக்களாலும் அர்ச்சிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா என்றால், எப்போதும் சாத்தியமே கிடையாது அல்லவா?
இந்தத் தொல்லைகள் எதுவும் நமக்கு வேண்டாம் என்றால் ஞானிகளின் பாதங் களைப் பிடித்துக்கொண்டால் போதும், நமக்கு விடிவு காலம் வந்துவிடும்.
பக்தி்
எந்த இறை வடிவத்தை நோக்கி வேண்டினாலும் பக்தியில்லாமல் எந்த விக்ஷயமும் நடக்காது. பக்தி இருந்தால்தான் நாமஸ்மரணையில் மனம் ஈடுபடும்.
பக்தியிருந்து, பக்தியோடு வழிபட்டால்தான் நமக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பக்தியிலும் ஆத்மார்த்த பக்தி, வெளிவேட பக்தி போன்றவை உள்ளன.
”நான் பாபாவிடம் வேண்டிக் கொள்கிறேன்.  நிறைய பக்தி செலுத்துகிறேன், ஆனாலும் கோரிக்கை நிறைவேறவில்லை!”  என்று நம்மில் பலர் கூறுவார்கள். இதற்குக் காரணம், பக்தி என்பது ஆத்மார்த்தமாக, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் செய்யப்பட வேண்டிய ஒன்று.
சத்சரித்திரம் கூறுகிறது: சாயி பாபாவின் மீது எந்த ஒரு பக்தனுக்கு முழுமனதான, பூரணமான பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும் அபாயங்களும் துடைக்கப்பட்டு அவனது நலம் பாபாவால் கவனிக்கப்படுகிறது. (அத்: 25)
நாமோ எதிர்பார்த்து பக்தி செய்கிறோம். அதனால் வேண்டுதல்கள் பல வேளைகளில் நிறைவேறாமல் போய்விடும். அந்த நேரத்தில் இதுவரை வேண்டி பக்தி செய்துவந்ததை மாற்றிக் கொள்கிறோம். இது மேலும் துன்பத்தையே கொண்டு வரும்.
இதை சரிசெய்ய நாம் என்ன செய்யவேண்டும் என்றால், ஞானிகளின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, என்னைக் காப்பாற்றுங்கள் என சரணடைந்துவிட வேண்டும்.
நமக்காக அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். தவிர, அவர்களே மண்ணில் இறங்கி வந்த இறைவனாக இருப்பதால் உடனடியாக நமது வேண்டுதலுக்கு உருகி பதில் அளிப்பார்கள்.
அப்படிப்பட்ட ஞானியை நான் எங்கு போய் தேடுவது எனக் கேட்கவேண்டாம். இருக்கவே இருக்கிறார் பாபா. அவரது பாதங்களை முழுமையாக பிடித்துக் கொண்டு சரணடைந்துவிடுங்கள். பிறகு அனைத்தும் சாத்தியமாவதை நடைமுறையில் உணர்வீர்கள்.
ஸ்ரீ  சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...