நேற்றைய
தொடர்ச்சி....
மற்றவர்கள் எப்பொழுதும்போல் ஸமர்த்த ஸாயீயையே
பார்த்தனர். முலே சாஸ்திரியின் கண்களுக்கோ, எப்பொழுதோ ஸமாதியடைந்துவிட்ட குரு
கோலப்நாதரே தெரிந்தார். முலே சாஸ்திரி மிக
ஆச்சரியமடைந்தார்.
அவருக்கு குரு வாஸ்தவத்தில்
எப்பொழுதோ ஸமாதியாகிவிட்டிருந்தாலும், தம்
எதிரில் அவரை பூதவுடலுடன்
பார்த்த முலே, மிக
வியப்படைந்தார். புதிய சந்தேகங்கள்
பல மனத்தில்
முளைத்தன. இதெல்லாம் கனவு
என்று நினைக்க, அவர் நிச்சயமாகத் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக்கொண்டுதான்
இருக்கிறார் என்றால், குரு
எப்படி இங்கு
உடலுடன் உட்கார்ந்துகொண்
டிருக்கமுடியும்? அவருடைய
மனம் எப்படி இவ்வளவு குழம்பியது; பிரமையடைந்தது? சிறிது நேரம் அவர் பேச்சற்று நின்றார்.
இதெல்லாம் ஒரு பிரமை இல்லை என்று உறுதி
செய்துகொள்வதற்காகத் தம்மையே
கிள்ளிப் பார்த்துக்கொண்டார். எதற்காக எனக்கு சந்தேகங்களும் குழப்பமும் வர வேண்டும்? நான் இங்கிருக்கின்றேன்; தனியாக இல்லை; பல மனிதர்களின் நடுவில்தான் இருக்கிறேன் (என்று
நினைத்தார்).
முலே சாஸ்திரி
பிரதமமாக குரு
கோலப்பின் பக்தர். அவருக்கு முதலில் பாபாவைப் பற்றி சந்தேகங்கள் இருந்தாலும், பிறகு அவர் நிர்மலமான மனத்துடன் பாபாவின்
பக்தராகிவிட்டார்.
உயர்குல பிராமணரான
அவர், வேதங்களிலும் வேதாங்கங்களிலும்2 சிறந்த பயிற்சி பெற்றிருந்தார். ஆயினும், மசூதியில் குரு கோலப் தரிசனம் கண்டது அவரை வியப்படையும்படி செய்தது. பிறகு, அவர் மசூதியின் படிகளில் ஏறித் தம் குருவின் (கோலப்நாத்) பாதங்களிலேயே
வணங்கிவிட்டு, இரு கைகளையும்
கூப்பிக்கொண்டு பேச்சற்று மௌனமாக நின்றார்.
குரு கோலப் ஸ்வாமியை ஸந்நியாஸிகளின் காவி
உடையில் பார்த்தவுடனே, முலே
சாஸ்திரி ஓடிச்சென்று அவருடைய
பாதங்களைக் கட்டிக்கொண்டார். ஒரே கணத்தில்
அவருடைய ஜாதி அபிமானம்
ஒடிந்து வீழ்ந்தது. குருவை நேரில்
கண்டதால் ஞானமெனும் மையைப் பூசிக்கொண்டு
அவருடைய கண்கள் பரிசுத்தமாயின.
நிரஞ்ஜனரான (மாசில்லாத) குருவைக்
கண்டவுடன் அவருடைய ஆத்மா ஞானத்தால்
நிரம்பிவழிந்தது. கோணல்
சிந்தனைகளும் சந்தேகங்களும்
ஒழிந்தன; பாபாவின்மேல்
அன்பு பீறிட்டது; பாதி மூடிய கண்களால் பாபாவினுடைய திருவடிகளையே
உற்றுப் பார்த்துக்கொண்டு
நின்றார்.
பல ஜன்மங்களில் செய்த ஸுகிருதங்கள்
(நற்செய்கைகள்) பழுத்து, அவருக்கு
ஸாயீ தரிசனம் கிடைத்தது. ஸாயீபாதம்
என்னும் புண்ணிய தீர்த்தத்தில் அவர் ஸ்நானம் செய்தபோது, தெய்வ அநுக்கிரஹம்
தமக்குக் கிடைத்ததை உணர்ந்தார்.
'சிறிது
தூரத்திருந்தே பாபாவின்மீது
பூச்சொறிந்தவர், திடீரென்று எப்படி பாபாவின்
திருவடிகளில் தலைசாய்த்து
வணங்கினார்?’ கூடியிருந்தவர்கள் அனைவரும்
ஆச்சரியத்தில் மூழ்கினர்.
மற்றவர் எல்லாரும் பாபாவின் ஹாரதிப்
பாட்டைப் பாடிக்கொண் டிருந்தபோது, முலே சாஸ்திரி மட்டும் குரு
கோலப்பின் நாமாவை கர்ஜித்துவிட்டு, குரு கோலப்பின் ஹாரதிப் பாட்டை
உச்சஸ்வரத்தில் பாடினார். பாடப்பாட
மேலும் மேலும் அவருக்கு குருவின்மேல்
பிரேமை பொங்கியது.
சிறப்பான மடி ஆசார நியதிகள்பற்றிய
கர்வம் பிசுபிசுத்துப்போயிற்று; மேல்ஜாதிக்காரனைத் தொடலாம், கீழ்ஜாதிக்காரனைத் தொடக்கூடாது என்னும் பிடிவாதம் உருகிப்போய்விட்டது.
மாறாக, ஆனந்தத்தில்
கண்களை மூடிக்கொண்டு ஸாஷ்டாங்கமாக
பாபாவுக்கு தண்டனிட்டார்.
கண்களைத்
திறந்து பார்த்தபோது, கோலப் ஸ்வாமி மறைந்துவிட்டிருந்தார்; அவருடைய இடத்தில் பாபா உட்கார்ந்துகொண்டு
தக்ஷிணை கேட்டதைப்
பார்த்தார்.
பாபாவினுடைய ஆனந்தமான உருவத்தையும்
அற்புதமான சக்தியையும் கண்டார். அவருடைய மனம் ஸ்தம்பித்து நின்றது. பாபாவைத் தாம் முதல் அணுகிய
முறையைக் கைவிட்டுவிட்டார்.
பாபாவினுடைய அற்புதமான லீலையைப்
பார்த்தவுடன், பசி, தாஹம் அனைத்தும் மறந்துபோயினõ தம் குருவின் தரிசனம் கிடைத்த
பரவசத்தில் மூழ்கியிருந்தார்.
அவருடைய மனம் ஸமாதானமடைந்தது.
கண்களில் ஆனந்தபாஷ்பம் பொங்க பாபாவினுடைய திருவடிகளில் நெற்றியை வைத்து
வணங்கினார்.
அவர் கொண்டுவந்திருந்த தக்ஷிணையை பாபாவுக்கு
ஸமர்ப்பணம் செய்தார். கண்களில்
நீர் பொங்க, சந்தோஷத்தில்
மயிர்க்கூச்செறிய மறுபடியும் பாபாவின் பாதங்களை வணங்கினார்.
தொண்டை அடைத்தது. ''என்னுடைய சந்தேகங்களெல்லாம்
நிவிர்த்தியானது மட்டுமல்லாமல், என்னுடைய குருவையும் சந்தித்துவிட்டேன்” என்று அவர் கூறியபோது அஷ்டபாவம் இதயத்தை அடைத்தது. முலே சாஸ்திரி
உட்பட அங்கிருந்தவர்களனைவரும்
உலகில் பார்த்தறியாத இந்த
பாபாவின் லீலையைக் கண்டு
பயம் கலந்த அன்புடன் உணர்ச்சிவசப்பட்டனர். இந்த அனுபவத்தை அடைந்த பிறகுதான்
அவர்களுக்குக் காவிச்சாயத்தின் மர்மம் விளங்கியது.
ஸாயீ மஹராஜ் பழையவர்தான்; முலே சாஸ்திரியும் அதே நபர்தான். இவ்வாறிருக்க, குறிப்பிட்ட நேரத்தில் முலே சாஸ்திரியிடம்
எதிர்பாராத மாற்றம்
எப்படி ஏற்பட்டது என்றே அனைவரும் வியந்தனர். ஆனால், யாரால் மஹராஜின் சூக்குமமான
வழிமுறைகளைப் புரிந்துகொள்ள
முடியும்? அவருடைய
லீலைகள் ஆராய்ச்சிக்கு
அப்பாற்பட்டவை அல்லவோ.
ஸ்ரீ
சாயி சத்சரித்திரத்திலிருந்து
No comments:
Post a Comment