நிமோண் என்னும் கிராமத்தின் நிலச்சுவான்தாரான நிமோண்கருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவ மாஜிஸ்ட்ரேட் பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தது. ஆகவே, அவர் மிகச் செல்வாக்குள்ளவராக
இருந்தார்.
மாதவராவ் தேச்பாண்டேவின் ஒன்றுவிட்ட அண்ணன்களிலேயே மூத்தவரான அவர், மிக வயோதிகர்; எல்லாராலும் சிரேஷ்டமாக
மதிக்கப்பட்டார். நிமோண்கரின் மனைவியும் ஒரு பக்தை; ஸாயீயே அவர்களுக்கு இஷ்டதெய்வம்.
தங்களுடைய ஜமீன் கிராமத்தை விட்டுவிட்டு
சிர்டீயில் வாழ வந்துவிட்டனர். ஸாயீயின் பாதங்களில் சரணடைந்து, சுகமாகத் தங்களுடைய வாழ்நாளைக் கழித்துக்கொண் டிருந்தனர்.
விடியற்காலையிலேயே எழுந்து, ஸ்நானம், பூஜை இவற்றைச் செய்து முடித்துவிட்டுப் பொழுது விடியும் நேரத்தில் ஹாரதி
எடுப்பதற்குச் சாவடிக்கு நாள் தவறாது வந்தனர்.
அதன் பிறகு, ஸூரிய அஸ்தமனகாலம்வரை பாபாவுடனேயே
இருந்துகொண்டு மனத்துக்குள்ளேயே தம்முடைய தோத்திரங்களை ஜபித்துக்கொண்டே நிமோண்கர் பாபாவுக்கு ஸேவை செய்வார்.
தினமும் பாபா லெண்டிக்குப் (கிராம எல்லையிருந்த ஓடை) போகும் சுற்றில் தாமும்
கூடச்சென்று பாபாவை மசூதிக்குத் திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பார். அவரால்
செய்யமுடிந்த ஸேவைகள் அனைத்தையும் பிரேமை ததும்பிய மனத்துடன் செய்தார்.
நிமோண்கரின் மனைவியும் மிகுந்த பிரேமையுடன்
பகல்நேரத்தில் அவரால் செய்யமுடிந்த உபகாரங்களை உபயோகமான முறையில் செய்து பாபாவுக்கு ஸேவை செய்தார்.
ஸ்நானம்
செய்வதற்கும் சமையல் செய்துகொள்வதற்கும் இரவில் தூங்குவதற்குமே அவர் தம்முடைய இருப்பிடத்திற்குச்
சென்றார். மீதி
நேரத்தையெல்லாம் காலையிலும் மதியத்திலும் மாலையிலும் இந்த தம்பதி பாபாவின்
அண்மையிலேயே பிரேமையுடன் கழித்தனர்.
தம் மகன் சிறிது உடல்நலமற்று இருந்ததால், நிமோண்கரின் மனைவி பேலாபூருக்குச் செல்ல விரும்பினார். கணவரோடு ஆலோசனை செய்த பிறகு, அங்கே போவதற்குத் தயார் செய்து கொண்டார். பிறகு, எப்பொழுதும் செய்வதுபோல் பாபாவிடமும் அனுமதி கேட்டார். பாபா சம்மதம் அளித்ததைத்
தம் கணவருக்கும்
தெரிவித்தார். இவ்வாறாக அம்மையார் பேலாபூருக்குச்
செல்வதென்பது நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், நிமோண்கர் அவரை மறுநாளே திரும்பி வந்துவிடவேண்டும் என்று சொன்னார்.
நானா அவ்வாறு சொன்னதற்கு நல்ல காரணங்கள் இருக்கவே செய்தன. ஆகவே, அவர் சொன்னார், ''போ, ஆனால் உடனே திரும்பிவிடு”. இதைக் கேட்ட அம்மையார் குடும்ப விசாரத்தால் சோகமடைந்தார்.
அடுத்த
நாள் அமாவாசை; அம்மையார் அந்த நாளில் பேலாபூரில் இருக்கவேண்டுமென்று
விரும்பினார்; இல்லை, மிகத் தீவிரமாக ஆவலுற்றார். ஆனால், நானா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
மேலும், அமாவாசையன்று பயணம் மேற்கொள்வது அவ்வளவு சிறந்த செயல் அன்று. இந்தப்
பிரச்சினையை சமாளிப்பது எப்படி என்பதுபற்றி அம்மையார் மிகக் கவலையுற்றார்.
பேலாபூருக்குச் செல்லவில்லையென்றால் மனம்
சமாதானம் அடையாது; ஆயினும், கணவருடைய மனத்தைப் புண்படுத்தவும் விரும்பவில்லை. எப்படி அவருடைய ஆணையை மீற முடியும்? எப்படியோ, பேலாபூருக்குச் செல்வதற்குத் தம்மைத் தயார்
செய்துகொண்டு, புறப்படுவதற்குமுன் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டுப் போவதற்காக வந்தார். பாபா அப்பொழுது லெண்டிக்குக்
கிளம்பிக்கொண்டிருந்தார்.
ஜனங்கள் எப்பொழுது பிரயாணமாகக் கிளம்பினாலும் நிர்விக்கினமாகப் போய்வர வேண்டுமென்று கடவுளை வணங்கிவிட்டுச் செல்வர்.
இப்பழக்கம் சிர்டீயிலும் அனுசரிக்கப்பட்டது.ஸாயீ சிர்டீமக்களுக்குக் கடவுளாதலால், எவ்வளவு அவசரமாகப் பயணப்பட்டாலும், கிளம்புவதற்கு முன்பு பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டே சென்றனர். இக் கிரமத்தின்படி, அம்மையார், பாபா ஸாடேவாடாவிற்கு
எதிரில் ஒருகணம் நின்றபோது பாபாவினுடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார்.
சிறியவர்களும் பெரியவர்களுமாக நானாஸாஹேப் நிமோண்கர் உட்பட, தரிசனத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பாபாவுக்கு
நமஸ்காரம் செய்தனர். அங்கிருந்த மக்களின் முன்னிலையில், குறிப்பாக நானாவின் முன்பாக, பாபா அவ்வம்மையாரிடம் சமயோசிதமான வார்த்தைகளைக் கூறினார்.
பாபாவினுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திப் பிரயாணத்திற்கு அனுமதி கேட்ட உடனே, ''போம், சீக்கிரமாகப் போம்; அமைதியான மனத்துடன் இரும். அவ்வளவு தூரம் போவதால், மூன்று நான்கு நாள்கள் சந்தோஷமாக பேலாபூரில் தங்கி எல்லாரையும் சந்தித்துவிட்டு சிர்டீக்குத் திரும்பி வாரும்.”
பாபாவினுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திப் பிரயாணத்திற்கு அனுமதி கேட்ட உடனே, ''போம், சீக்கிரமாகப் போம்; அமைதியான மனத்துடன் இரும். அவ்வளவு தூரம் போவதால், மூன்று நான்கு நாள்கள் சந்தோஷமாக பேலாபூரில் தங்கி எல்லாரையும் சந்தித்துவிட்டு சிர்டீக்குத் திரும்பி வாரும்.”
எதிர்பாராதவிதமாக வந்த பாபாவின் திருவாய்மொழியைக் கேட்டுத் திருமதி நிமோண்கர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
நிமோண்கரும் பாபாவின் சூசகத்தைப் புரிந்துகொண்டார். இவ்விதமாக, இருவருமே சமாதானமடைந்தனர்.
சுருங்கச் சொன்னால், நாமெல்லாருமே திட்டங்கள் தீட்டுகிறோம்; ஆனால், நமக்கு ஆதியும் தெரிவதில்லை; அந்தமும் தெரிவதில்லை.
நமக்கு எது நன்மை, எது தீமை என்பது ஞானிகளுக்கே தெரியும்; அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும்
அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரியும். அவர்களுடைய ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டால், பக்தர்கள் சுகத்தையும் சாந்தியையும்
பெறுவர்.
ஸ்ரீ சாயி
சத்சரித்திரத்திலிருந்து
No comments:
Post a Comment