Friday, December 6, 2013

நமது சிந்தனைக்கு – சாயிசரித்திரத்திலிருந்து - 4



 
        பக்தி என்னும் மேகலையை இடுப்பில் அணிவித்து அவரை உங்களுக்கே சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பவை அனைத்தையும் அவருக்குப் பிரீதியுடன் சமர்ப்பித்து ஆரத்தி சுற்றுங்கள்.
 
இல்லாத பொருளை அழிக்கமுடியாது; இருக்கும் பொருளைத்தான் அழிக்கமுடியும். கல்லால் அடிபட்ட பானை உடையும்போது அதனுடைய உருவந்தான் இல்லாமற்போகிறது.
  பானையின் இருக்கும் தன்மை சிறிதளவும் அழிவதில்லை. ஏனெனில், உடைந்த பாகங்களுக்கு மறுபடியும் பானையாக ஆகும் சக்தி இருக்கிறது. 
        ஆகவே ஒரு பொருளை அழிக்கமுடியுமா என்பது அதனுடைய இருக்கும் தன்மையையே சார்ந்திருக்கிறது. அதுபோலவே எந்த மரணமும் சூனியத்தில் முடிவதில்லை.  காரணம் இன்றி விளைவேதும் இல்லை. இதை எல்லா விஷயங்களிலும் அனுபவத்தால் காண்கிறோம். உருவநிலையில் இருப்பது அருவநிலைக்கு மாறினாலும், சத்தியத்தின் சம்பந்தத்தை விட்டுவிடுவதில்லை. 
         சூக்கும நிலையிலேயே பல படிகள் இருப்பது இதைத் தெளிவாக்குகிறது. பூதவுடல் அழிந்துபோன பின்பும் சூக்கும சரீரம் தொடர்ந்து வாழ்கிறது. சூக்கும சரீரமும் மறையும்போது அதைவிடச் சூக்குமமான நிலை தொடர்கிறது. அந்த நிலையில் ஞானேந்திரியங்களும் மனமும் புத்தியும் இன்பங்களைத் துய்க்கும் சக்தியை இழந்துவிடுகின்றன.
 இதன் மூலக்கருத்து என்னவென்றால், புத்தியும் ஓய்ந்துபோகும் நிலையில் உருவமுள்ளது உருவமில்லாமல் போகிறது, அப்பொழுதும் ஆத்மா அணைந்துபோவதில்லை; சுயமாகவே பிரகாசித்துக்கொண் டிருக்கிறது.  புத்திதான் ஆசைகளுக்கு இடமளிக்கிறது. ஆகவே, புத்தி அழிந்துபோகும்போது ஆத்மா எழும்புகிறது; அழியாத இடத்தை அடைந்துவிடுகிறது. 
         அஞ்ஞானம், மாயை, ஆசை, செயல் இவைதான் மரணத்தின் முக்கியமான வழிமுறைகள். இவையனைத்தும் அணைந்துபோகும்போது உலகவாழ்வின் பந்தங்களும் அறுந்துவிடுகின்றன. 
         மேகங்கள் விலகியவுடன் சுயம்பிரகாசியான சூரியன் ஒளிர்வதுபோல், பந்தங்கள் அறுந்து விழுந்தவுடன் ஆத்மா எந்த முயற்சியுமின்றித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. .
         'இந்த சரீரமே நான்; இது என்னுடைய செல்வம்’.  இதற்குத்தான் திடமான தேகாபிமானம் என்று பெயர். இதுதான் முடிச்சுகளுக்குக் காரணம். இதுதான் மாயையால் விளையும் துக்கங்களுக்கும் காரணம்.  இந்த தேகம் ஒருமுறை விழுந்தவுடன் கர்மவிதையால் இன்னொரு தேகத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்தத் தடவையும் கர்மவிதை முழுமையாக அழிக்கப்படாவிட்டால் மற்றுமொரு ஜன்மம் ஏற்படுகிறது. 
         மறுபடியும் விதை மரமாகிறது. பூர்வஜன்ம வாசனை என்னும் விதை புதுப்புது தேகங்களை ஒவ்வொரு தடவையும் அளிக்கிறது. இந்தச் சக்கரம் பூர்வஜன்ம வாசனைகள் அழியும்வரை முடிவில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது. 
         ஆசைகள் வேரோடு அழிக்கப்பட்டவுடன் இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து விடுகின்றன. அப்பொழுதுதான் மனிதன் மரணமிலாப் பெருவாழ்வை அடைகிறான். இதுவே வேதாந்த உபதேசம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...