ஸாயீயின் நாமத்தை வாயிலும், பிரேமையை
இதயத்திலும் தரித்து இருப்பவர் எவரோ, அவர் எப்பொழுதும் சாந்தமாகவும்
க்ஷேமமாகவும் இருப்பார். ஏனெனில், ஸாயீயே அவரை ரட்சிப்பார். செவிச்செல்வ விஷயத்திலும் இதுவே கதி. காதுகளுக்கு ஸாயீயைத் தவிர வேறு
கேள்வியே இல்லை. மூக்கும் ஸாயீயின் பரிமளத்தால் நிறையும்; நாக்கிலும் ஸாயீ
நாமத்தின் இனிமையான சுவையே ஊறும்.
ஸாயீயின் புன்னகை தவழும் முகம் எவ்வளவு அற்புதமானதுõ அப் புன்னகை அளித்த சுகம் எவ்வளவு தூய்மையானது. ஸாயீயின் திருமுகத்தை நேரில் பார்த்தவர்களும் அமிருதத்தை ஒத்த அவருடைய திருவாய்மொழியைக் கேட்டவர்களும் மஹாபாக்கியம் பெற்றவர்கள்.
மங்களங்களின் உறைவிடமும், சுகத்திற்கும் சாந்திக்கும் பிறப்பிடமும், விவேகமும் வைராக்கியமும் நிறைந்தவருமான ஸாயீ எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்தார். வயிறு நிரம்பப் பாலைக் குடித்த பிறகும் கன்று தாயிடமிருந்து பிரிவதற்கு விரும்பாது. கன்றைத் தாயிடமிருந்து பிரிக்கக் கயிறு கொண்டுதான் கட்டவேண்டும். அதுபோலவே, நம்முடைய மனத்தை உலக இன்பங்களிருந்து பிரித்து, குருபாதங்களில் கட்டிவிடவேண்டும்.
குருவின் கிருபையையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள். இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் ஸாயீபிரீதி இருக்கட்டும். ஏனெனில், அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.
கால்கள் முதலாக வெளிவந்து பிறந்தவரின் கண்களில், ஸித்திகள்பெற்ற
மந்திரவாதியின் மையைப் பூசினால், அவருக்கு மறைந்திருக்கும் புதையல்களும்
கண்ணுக்குப் புலப்படும். அதுபோலவே, குருவின் பாததூளிகள் கண்களில் பட்டவருக்கு
ஞானமும் விஞ்ஞானமும் மலரும்.
சித்தர்களுக்கு எந்தெந்த சிறப்பியல்புகள் உண்டோ, அவையே சாதகர்களின் பயிற்சிமுறையாக அமையவேண்டும். கடுமையான பயிற்சியும் நீண்டகாலப் பிரயத்தனமும் செய்பவரே வெற்றியடைகிறார். நெய் பாலுக்குள் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், பாலைக் காய்ச்சி அது ஆறியபின் புளித்த மோரை அதில் உறையாக ஊற்றாவிட்டால் மோரும் கிடைக்காது; வெண்ணெயும் கிடைக்காது. முறையாகச் செயலாற்றி மோர் கிடைத்த பின்பும், நெய் கிடைப்பதற்கு மேலும் செயல்பட வேண்டும். மோரை நன்கு கடையாமல் வெண்ணெய் கிடைக்காது. வெண்ணெயையும் அடுப்பிலேற்றிப் பதமாகக் காய்ச்சினால்தான் சுவை மிகுந்த நெய் கிடைக்கும். தேவையானவை என்னவென்றால், கடமையைச் செய்தும் தூய்மை தரும் சடங்குகளைச் செய்தும் கிடைக்கும் பலமும், பிறந்ததிருந்தே செய்யும் ஆன்மீக அப்பியாசங்களால் விளையும் விவேகபுத்தியுந்தான். பயிற்சியின்றிச் சித்தம் சுத்தமடையாது; மனம் தூய்மையடையாது; ஞானம் பிறக்காது.
நிர்மலமான சித்தத்தை விருத்தி செய்துகொள்ளாவிட்டால் ஆத்மஞானம் பிறக்காது. ஆகவே, தன்னை அறிந்த நிலையை அடையும்வரை பக்திமார்க்கத்தைக் கைவிடலாகாது. நான்கு முக்திநிலைகள் என்னும் கலசங்களுக்குமேல் துறவென்னும் கொடி உயரப் பறக்குமாறு ஆத்மஞானமாகிய கோயிலை எழுப்புவதற்கு பகவானின்மீது பக்தியென்பதே அஸ்திவாரம்.
நாய்களும் பன்றிகளும் மலத்தைத் தின்றுவிட்டு இரவுபகலாகக் குப்பைமேட்டில் புரளுகின்றன. அவையும் விஷயபோகங்களை அனுபவிக்கின்றன. மனிதப்பிறவி எடுத்த பிறகு நாமும் அவற்றைப் போலவே செயல்படுவது முறையா?
No comments:
Post a Comment