Monday, December 9, 2013

நமது சிந்தனைக்கு – சாயிசரித்திரத்திலிருந்து - 7






மனித தேகத்தில் வாழும்போது, கடமைகளைச் செவ்வனே செய்தும் சுயதர்ம அனுஷ்டானங்களைச் செய்தும் தவம் செய்தும் மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். தூய்மையான மனம் அகண்டமான பிரம்ம ஸித்தியை அளிக்கும். 

      'சாதுக்களுக்கு சேவை செய்வது முக்தி மார்க்கத்தின் வீடு; சிற்றின்பம் நரகத்தின் நுழைவாயில்.’ பூஜைக்குரிய ஆன்றோர்களின் இந்த வாக்கு எப்பொழுதும் சிந்தனையில் வைக்கத்தக்கது.
 

    எப்பொழுதும் நன்னெறியில் நடந்து உயிரைக் காப்பதற்கு மட்டும் உணவுண்டு வீடும் குடும்பமும் வேண்டாவென்று ஒதுக்கி வாழும் சாது தன்னியராவார்.
 

     எவர்களெல்லாம் கண்களையும் சிமிட்டாமல் ஸாயீயைப்பற்றிச் சிந்தனை செய்கிறார்களோ, அவர்களெல்லாம் அற்புதமான அனுபவத்தைப் பெறுகிறார்கள். அவர்களிடம் விசுவாசம் ஏற்பட்டு ஸாயீ அவர்களின்மேல் தியானம் செய்கிறார்.

      குரு நாமஸ்மரணம் மஹத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், குருவும் பக்தஸ்மரணம் செய்கிறார். தியானம் செய்பவர், தியானம் செய்யப்படுபவருடன் ஒன்றிவிடுகிறார். இருவரும் பூரணமாகத் தம்மை மறந்துவிடுகின்றனர்.
 

      ''நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நானோ இரவுபகலாக உங்களையே நினைத்துக்கொண் டிருக்கிறேன்.” இது பாபாவின் பிரேமை பொதிந்த திருவாய்மொழி; பலருக்கு ஞாபகமிருக்கும்.
 

      நமக்கு ஞானக்கதைகள் ஏதும் வேண்டா. இந்த ஸாயீயின் போதியே (தினமும் பாராயணம் செய்யும் நூலே) நமக்குப் போதுமானது. எத்தனையோ பாவங்கள் நம் தலையில் இருந்தாலும் சங்கடங்களி­ருந்து விடுவிப்பவர் அவரே.
 

      தினமும் முழுமையாகப் பாராயணம் செய்யமுடியாவிட்டாலும், குருபக்தி சம்பந்தப்பட்ட அத்தியாயங்களையாவது தினமும் காதால் கேட்டு இதயத்தின் ஆபரணமாக அணிந்துகொள்ள வேண்டும்.
 

ஒரு நாளின் எப்பகுதியிலாவது தினமும் இந்தச் சரித்திரத்தைப் படிப்பவருக்கு ஸ்ரீஹரி குருராஜருடன் சேர்ந்து காட்சி அளிப்பார். 

      அகண்டமாக இச் சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்தியவாசம் செய்வாள். ஸப்தாஹமாகப் (ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவர்களின் தரித்திரம் பறந்தோடும்.
  இவ்வாறு நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டா. ஏனெனில், என் சொல் உங்களுக்கு ஐயங்களை விளைவிக்கலாம். என்னுடைய வாய்மூலமாக ஸாயீயே இதைச் சொல்கிறார். ஆகவே, இது விஷயத்தில் அனாவசியமான கற்பனைகளையும் சந்தேகங்களையும் தூக்கியெறியுங்கள். 

        சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்கு முக்தியை அளிப்பவருமான ஸாயீயின் கதையை பக்தர்கள் இப்பொழுது கேட்கவேண்டும். அவருடைய கதைகள் க­லியுகத்தின் பாவங்களை அழிக்கும்.
 

       ஓ, ஞானிகளின் சரித்திரங்களுக்குமுன், சொர்க்கத்தின் சுகங்கள் எம்மாத்திரம்? உடனுக்குடன் பலனளிக்கும் சுவாரசியமான இக் கதைகளைக் கேட்பதை விடுத்து, யார் அந்த சுகங்களைச் சீந்துவார்?
 

     இன்பமும் துன்பமும் மனத்தின் விகாரங்கள். சத்சங்கம் நம்மை இந் நிலைக்குமேல் இட்டுச்செல்கிறது. நம்முடைய மனத்தை சுகமோ துக்கமோ இல்லாத பிரபஞ்ச உணர்வுடன் சத்சங்கம் ஒன்றுசேர்க்கும்.
 

     துறவி தனிமையில் காணும் சுகத்தையும் பக்தன் பக்தியில் காணும் சுகத்தையும் தேவலோகத்து இந்திரனோ பூலோகத்துச் சக்கரவர்த்தியோ யுகமுடிவுவரை முயன்றாலும் அடையமுடியாது.
 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...