Sunday, December 1, 2013

சாயி சரித்திரத்தில் சொல்லப்படும் கதைகள்





இவை வெறும் கதைகளன்று; ஆத்மானந்த தீர்த்தம். குடித்தால், மேலும் குடிக்க வேண்டுமென்கிற ஆவல் பெருகும். அதைத் தணிக்க இன்னும் ஒரு கதை சொல்லப்படும். ரஸமான இக் கதையைக் கேட்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சம்சாரக் கட­ன் சிரமங்கள் நிவாரணமடையும். சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.  தன்னுடைய நல்வாழ்வை விரும்பும் பாக்கியசா­யான மனிதன், ஸாயீயின் கதைகள் சொல்லப்படும்போது பயபக்தியுடன் கேட்கவேண்டும். 
 ஞானிகளின் மஹிமை அளவிடற்கரியது; எவராலும் முழுமையாக விவரிக்க முடியாதது. நிலைமை இவ்வாறிருக்க, என்னுடைய புலமை எந்த மூலைக்குப் போதுமானது? இதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். 
 கதை சொல்பவரின் இந்தச் சிறிய 'நான்’ எனும் எண்ணமே ஸாயீக்குப் போதுமானது. கதை சொல்பவரின் கையை லாவகமாகப் பிடித்துக்கொண்டு பக்தர்களின் நன்மை கருதித் தம்முடைய உன்னதமான குணங்களை எழுதவைத்துவிடுகிறார். 
  அவர் முழுமுதற்பொருளாகிய நீர்நிலையில் பிரம்ம ரூப முத்துகளை உண்ண விரும்பும் அன்னப்பறவை. 'நானே அவன்; அவனே நான்’ என்ற நிலையில் மூழ்கியிருப்பது மட்டுமல்லாமல் ஒப்பற்ற சாகசங்களும் புரிபவர். 
   ஊரும் பெயரும் இல்லாத ஸாயீ அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண்பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்.
     தத்துவஞானத்தின் அவதாரமான ஸாயீ தாம் பெற்ற இறையனுபவத்தை மக்களுக்குக் காட்சிகள் அளிப்பதன் மூலமும் நிகழ்ச்சிகளை உண்டுபண்ணுவதன் மூலமும் அளிக்கிறார். அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தப்படாதவர்போல் தோன்றுகிறார்.
 
அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். கணக்கற்ற அற்புதங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறார். 
அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.
 
       அவருடைய கதைகளில் அவருக்கு விருப்பம் அதிகம். அனவரதமும் (எப்பொழுதும்) என்னைத் தூண்டிவிட்டு, என்னையும் கதைகேட்பவர்களையும் நிமித்த காரணமாக (கருவியாக) வைத்துத் தம் பக்தர்களின் மனோரதங்களைப் பூர்த்திசெய்கிறார்.
 
பரமார்த்த வாழ்வில் பூரணமான அபிமானம் கொண்டு இவ்வுலக வாழ்வி­ருந்து முழுமையாகத் துறவேற்று, சக்ரதாரியாகிய மஹாவிஷ்ணுவின் பிரியத்தை வென்ற ஸாயீ, எண்ணற்ற பிராணிகளை உத்தாரணம் செய்திருக்கிறார். 
       எவர் இந் நாட்டிலும் (மஹாராஷ்டிரம்) வெளிநாடுகளிலும் தொழப்படுகிறாரோ, எவருடைய பக்திக்கொடி வானளாவிப் பறக்கிறதோ, அவர் தீனர்களையும் பலஹீனர்களையும் தம்மிடம் அழைத்து அவர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார்.
 
  பரம பவித்திரமான  ஸாயீ சரித்திரக் கதைகளைக் கேளுங்கள். கேட்பவர்களுடைய செவிகளும் சொல்பவருடைய வாயும் பரிசுத்தமடையட்டும். எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும். ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்’ என்னும் காவியத்தில், சொல்லப்படும் சாயிசரித்திர கதைகள் ஒவ்வொன்றும் உணர்த்தும் உட்கருத்துக்களைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். சுபம் உண்டாகட்டும்.

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...