Saturday, December 7, 2013

நமது சிந்தனைக்கு – சாயிசரித்திரத்திலிருந்து - 5



     தர்மம், அதர்மம், இரண்டையுமே கடந்த நிலைக்கு ஆசைகளைக் கடந்த நிலை என்று பெயர். அஞ்ஞானமும் ஆசைகளும் அழிக்கப்பட்ட நிலையில் மரணத்திற்கு எந்தவிதமான சக்தியும் இல்லாமல் போகிறது.  பூர்வஜன்ம வாசனைகளால் விளையும் ஆசைகளை அறுப்பதே பிரம்மானந்தத்தை அடையும் வழி. இந் நிலையினை எழுத்தால் விவரிக்கமுடியாதது; ஆயினும் அதை எழுதி விவரிக்க முயல்கிறோம். பேச்சால் வர்ணிக்கமுடியாதது; ஆயினும் அதை வாய்ச்சொல்லால் வர்ணிக்க முயல்கிறோம். 
        முழுமுதற்பொருளை நன்கு அறிந்துகொள்வதே வேண்டாத விஷயங்களுக்கெல்லாம் ஒரு முடிவு; மனத்தில் விளைந்த அனைத்து ஆசைகளின் நிறைவேற்றம். இதுவே சுருதி (வேதங்கள்), ஸ்மிருதி (வாழ்க்கை நெறிக் கோட்பாடுகள்), இவை இரண்டின் பிரமாணம்.
        பிரம்ம ஞானத்தை அடைந்தவனே பரவுலகத்தை அடைந்தவன். அது மட்டுமே கடைமுடிவாக பிரம்மத்துடன் ஒன்றிய ஆனந்தத்தை அடையும் மார்க்கம். இதைவிட உயர்ந்த நிலை வேறெதுவும் உண்டோ? தன்னை அறிந்தவன் சோகத்தைக் கடந்தவன் அல்லனோ? 
       அஞ்ஞான இருளை மூலமாகக் கொண்ட சம்சாரக்கடலை பிரம்ம ஞானம் என்னும் ஒரே உபாயத்தால்தான் கடக்கமுடியும். அதுவே அனைத்துப் பேறுகளையும் பெறும் சாதனை மார்க்கம். 
       பூரணமான சிரத்தையும், தைரியம் சேர்ந்த பொறுமையுமே உமையுடன் இணைந்த மகேசுவரன். அவர்களுடைய அருட்கரம் தலையில் படும்வரை உலகத்தையே ஆடையாக அணிந்தவனும் நம் ஹிருதயவாசியுமான ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படமாட்டான்.
       பொறுமையும் நிட்டையுள்ள விசுவாசமும் சிறந்த ஐசுவர்யங்களை அளிக்கும்.. மேற்கண்டது, அமோகமான வீரியம் கொண்ட வார்த்தைகளை உடையவரும் குருமார்களில் தலைசிறந்தவருமாகிய ஸாயீநாதரின் திருவாய்மொழியாகும். 
       கண்ணுக்குத் தெரியும் இப் பிரபஞ்சம் ஒரு மாயை என்பதையும், பிரத்யக்ஷமாக அனுபவிக்கப்பட்டபோதிலும் கண்விழித்தவுடன் காணாமற்போகும் கனவைப் போன்றது என்பதையும் அவசியம் ஒத்துக்கொள்ளவேண்டும்.
 
          நம்முடைய புத்திக்கு அவ்வளவு தூரந்தான் எட்டும்; அதற்குமேல் எட்டாது. நாம் ஆத்மாவை அறிந்துகொள்வதும் அவ்வளவே. உண்மை எது என்பதை புத்தியால் அறிந்துகொள்ளமுடியாது. அதை உணரும் சக்தி ஆத்மாவுக்குத்தான் உண்டு.
 
         இருக்கிறது என்னும் குணாதிசயமோ, இல்லை என்னும் குணாதிசயமோ, இரண்டுமே இல்லாததும் ­ஆண்/பெண் பேதம் இல்லாததும் எந்த குணமும் இல்லாததும் எங்கும் நிறைந்ததும் ஒளி­யாலும் ஒளி­யினுள்ளும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டதும்- குரு ரூபத்தில் இருக்கிறது. 
        ஆத்மா எந்த குணாதிசயமும் இல்லாதது; மூப்பிற்கும் ஜனனமரணத்திற்கும் அப்பாற்பட்டது; புராணமானது; சாசுவதமானது; என்றும் அழிவில்லாதது;
        நித்தியமானது; பிறக்காதது; புராதனமானது; விண்வெளியைப்போல் எங்கும் நிறைந்தது; ஆரம்பம் இல்லாதது; இடையறாதது; வளர்ச்சியோ மாறுதலோ இல்லாதது.
 
         சொல்லுக்கு அப்பாற்பட்டதும் உருவமில்லாததும் ஆரம்பமில்லாததும் முடிவில்லாததும் அளக்கமுடியாததும் அழிவில்லாததும் வாசனையோ ருசியோ இல்லாததும் கறைபடாததுமான ஒன்றின் சொரூபத்தை யாரால் வர்ணிக்கமுடியும்? 
        இவ்வகையான நிர்க்குணமான ஆத்மாவை அஞ்ஞானத்தால் அறியமுடியாதபோது அஞ்ஞானத்தை ஞானத்தால் விலக்குங்கள். ஆத்மா சூனியம் என்று மட்டும் எப்பொழுதும் சொல்­லிவிடாதீர்கள். 
       ஸ்ரீஸாயீயின் சொந்தச் செல்வமான அந்தப் பரமஹம்ஸ நிலை எப்பேற்பட்டது. காலம் அதை ஒரு கணத்தில் திருடிக்கொண்டு போனபிறகு அதை மறுபடியும் பார்க்கமுடியுமா?  மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றால் பந்தப்பட்ட சாதாரண இல்லற பக்தனை விட்டுவிடுங்கள். அனைத்தையும் துறந்த யோகிகளும் ஸாயீதரிசனத்திற்கு வந்து பாதகமலங்களில் மூழ்கினர். 
       ஆசை, வினையாற்றல் ஆகிய இவ்வுலக பந்தங்களி­ருந்து விடுபட்டவரும், தேகம் குடும்பம் போன்ற உலகியல் பாசங்களி­ருந்து முழுமையாக விடுபட்டவருமாகிய பக்தர் தன்யராவார் (சகல பேறுகளையும் பெற்றவராவார்). 
      ஸாயீயே அவருடைய பார்க்கும் விஷயமாக அமைந்துவிட்ட பிறகு அவர் வேறெதையும் நோக்குவாரா? பார்க்குமிடங்களிலெல்லாம் அவருக்கு ஸாயீயே தெரிவார். அவருக்கு இவ்வுலகில் ஸாயீ இல்லாத இடமே இல்லாமல் போய்விடும். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...