Tuesday, December 10, 2013

நமது சிந்தனைக்கு – சாயிசரித்திரத்திலிருந்து - 8




முன்ஜன்ம வினைகளால் விளையும் சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்தே தீரவேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும். ஆயினும், விதியால் நிர்ணயிக்கப்பட்டதையும் பக்தன் சுலபமாகத் தவிர்த்துவிடலாம். 

       முன்ஜன்ம கர்மத்தின் விளைவுகளி­ருந்து பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் விடுபடமுடியாது. அவசியம் நடந்தே தீரவேண்டிய நிகழ்ச்சிகளிலி­ருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லை.
 

துக்கங்கள் எவ்வாறு வேண்டப்படாதவையோ, அவ்வாறே சுகங்களும் எதிர்பார்க்கப்படாதவை. முன்ஜன்ம வினைகளால் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்கப்போகின்றன என்பது ஞானிகளுக்கு முன்கூட்டியே தெரியும்.

      அகண்டமாக அவருடைய நாமத்தை ஜபம் செய்வதே நமது விரதமும் தவமும் தானமும். அவ்வப்பொழுது சிர்டீக்குப் பிரயாணம் செய்வதே நமது தீர்த்த யாத்திரை.
 

      ஸாயீ, ஸாயீ என்று நாமஸ்மரணம் செய்வதே நமது மந்திரமும் அனுஷ்டானமும் தியானமும் புரஸ்சரணமும். ஆகவே அவரிடம் அனன்னியமாக சரணடையுங்கள்.
 

      கள்ளங்கபடமற்ற பிரேமையுடனும் ஒருமித்த மனத்துடனும் அவரைப் பூஜைசெய்து பாருங்கள். அவர் செய்யும் விவரிக்கமுடியாத அற்புதங்களை மனத்துள்ளே அனுபவியுங்கள்.
 

      கரும்பைச் சக்கையாய்ப் பிழிவது போன்ற ஆயாஸம் தரும் விவரங்கள் தற்பொழுது போதும். நமக்கு உடனே வெல்லம் வேண்டும். முன்னரே குறிப்பறிவிக்கப்பட்ட ரசமான கதையைக் கேட்க எல்லாரும் ஆவலாக இருக்கிறீர்கள்.
  கேட்பவர்களின் இந்த உணர்வை நன்கு அறிந்த நான், நான் சொல்லப்போகும் அற்புதமான கதையை அவர்கள் கவனத்துடன் கேட்கும் வகையிலும் அவர்களுடைய ஆர்வம் மழுங்காத வகையிலும் கதாம்சம் இல்லாத பொதுவான தத்துவ விவரணத்தை இப்பொழுது நிறுத்திக்கொள்கிறேன். 

        பாமரனும் மந்தமதி படைத்தவனுமாகிய நான் சொற்களைக் கோர்த்துச் செய்யுள் படைக்கும் திறமை பெற்றவனில்லை. நான் எழுதுவது, என்னுடைய பேனாவை அவருடைய கையால் பிடித்துக்கொண்டு ஸாயீ என்னை எழுதவைப்பதுவே.
 

        ஸாயீ எனக்கு புத்தியைக் கொடுத்திராவிட்டால், அவருடைய சரித்திரத்தை எழுத நான் யார்? அவரே அவருடைய கதையைச் சொல்­ என்னிடமிருந்து எழுதி வாங்கிக்கொள்கிறார்.
 

      ஸாயீயின் அற்புதமான கதைகள் பாக்கியமளிப்பவை. கேட்பதால் ஏற்படும் விளைவுகளும் பாக்கியமளிப்பவை. மனத்தில் சிந்திக்கச் சிந்திக்க நம்முடன் பிறந்த நற்குணங்கள் மேலோங்கும். ஸாயீபாதங்களில் ஸத்பாவம் வளரும்.
 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...