ஸ்ரீ சாயி பாபா! உம்முடைய பாதங்கள் புனிதமானவை. உம்முடைய நினைவு புனிதமானது. உமது
தரிசனம் புனிதமானது. இம்மூன்றும் எங்களைக் கர்மத்தின் தளைகளில்
இருந்து விடுவிக்கக்கூடிய சக்தி பெற்றவையாகும்.
தற்காலம் உருவமற்ற நிலையில் இருந்தாலும், விசுவாசத்துடனும் பக்தியுடனும் உம்முடன் ஒன்றி
விட்டால், சமாதியிலுள்ள
உமது ஜோதி கண் மலர்கிறது! பக்தர்கள் இன்றும் இதை அனுபவப் பூர்வமாக உணர்கின்றனர்.
எவ்வளவு முயற்சி செய்யினும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதவாறு
செய்துவிடுகிறீர். அவ்வளவு மெல்லியதான நூலைப் பிடித்திருக்கிறீர்.
எப்படி இருந்தால் என்ன? இந்த தேசத்தில்
இருப்பினும், அல்லது வேறு
தேசத்தில் வசிப்பினும், பக்தர்களை இந்த நூலால்
உம் திருவடிகளுக்கு இழுத்து விடுகிறீர்
அல்லீரோ?
இவ்வாறு இழுத்துவந்து அவர்களை கட்டியணைக்கிறீர், ஒரு தாய் தம் குழந்தைகளைப் போஷிப்பது போல
சிரமமின்றி அவர்களை சுலபமாகப் பராமரிக்கிறீர். நீர் எங்கிருக்கிறீர் என்று எவருக்கும் தெரியாத
வகையில் நூலை இழுக்கிறீர். ஆனால்
விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப்
பின்னால் நீர் எந்நேரமும் அரணாக நிற்கிறீர் என்பதை அவர்கள்
உணர்ந்து கொள்ளும்படி செய்கின்றன.
மெத்தப்படித்த பண்டிதர்களும் சாமர்த்தியசாலிகளும் அழகர்களும் அகந்தையால்
இவ்வுலக வாழ்வு எனும் சேற்றில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நீரோ, எளிமையும் நம்பிக்கையும் உடையவர்களுடனும்,
அப்பாவி மக்களுடனும்
உம்முடைய சக்தி கொண்டு
விளையாடுகிறீர்.
அகமுகமாக வியூகங்களை வகுத்து எல்லா விளையாட்டுகளையும் நீர் ஆடுகிறீர்; ஆனாலும், வெளிப் பார்வைக்குத் தனிமை விரும்பி போலவும்,
சம்பந்தம் இல்லாதவர்
போலவும் பாசாங்கு செய்கிறீர். எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு, நான் செயலற்றவன் என்று சொல்லிக் கொள்கிறீர்.
உம்முடைய செயல் முறையை அறிந்தவர் எவரும் உளரோ!
ஆகவே, நாங்கள் எங்களுடைய
எண்ணம், சொல், செயல் இவற்றை தங்கள் பாதகமலங்களில் செலுத்தி விட்டு இடைவிடாமல் உம்முடைய திவ்விய நாமத்தை ஜபிப்போமாக! அவ்வழியேதான் எங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டு விலகும்.
வேண்டியவர்களுக்கு வேண்டியதை அளிக்கிறீர். வேண்டுதல் எதுவும் இல்லாதவர்களுக்கு
பரம பதத்தை அளிக்கிறீர். பக்தர்களுக்கு இனிமையானதும் மகிழ்ச்சிகரமானதும் மிக்க
சுலபமானதுமான வழியன்றோ உமது நாமம்!
உமது நாம ஜபத்தினால் பாவம் அழிகிறது,
ராஜச குணமும், தாமச குணமும் மறைந்து சத்துவ குணம் மேலோங்குகிறது.
இதில் சந்தேகம் ஏதும் இல்லை. படிப்படியாக வாழ்வில் தரும நெறி வளர்கிறது.
கடவுள் பக்தியும் அறநெறி வாழ்வும் இவ்வாறு
விழித்துக் கொண்ட நிலையில் பற்றற்ற மனப்பான்மை வேகமாகத் தொடர்கிறது. புலன்
அவாக்கள் அறவே அழிக்கப்படுகின்றன. ஆத்ம ஞானம் அக்கணமே பளிச் சென்று தோன்றுகிறது.
விவேகத்துடனும் அறிவுக் கூர்மையுடனும் தேடப்படும் ஞானம் என்பது தனக்குள்ளேயே
லயித்துக்கிடக்கும் மன ஒருமையே. இது குருவின் பாத கமலங்களில் பணிவுடன் விழுந்து
கிடப்பதுதான். இதுவே குருவிடம் முழுமையான சரணாகதியாகும்.
சாயியின் பாத கமலங்களில் மனம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டதற்குச் சின்னம்
ஒன்றே ஒன்று தான். பக்தன் பரம சாந்த நிலையை எய்துகிறான். நிஜமான பக்தி பொங்கி வழிகிறது. குருவிடம் செலுத்தப்படும் அன்பு கலந்த பக்தியே
அறநெறியாகும்.
(சத்சரித்திரம் 46: 1-14)
No comments:
Post a Comment