தொழிலில் வெற்றி பெற உதவுகிறேன்!தாமு அண்ணா தனது தொழிலை வளர்க்க பாபாவிடம் வேண்டுதல் வைத்த காலத்திலெல்லாம் பாபா இது வேண்டாம், இது வேண்டாம் என்று கூறி தடுத்து, நட்டங்களைத் தவிர்க்க உதவினார். அதேபோல பலருடைய தொழில் மேன்மை அடையவும் உதவி செய்திருக்கிறார்.
தொழிலை ஆரம்பித்துவிட்டு அதில் வெற்றி பெற முடியாமல் தற்போது தவித்துக் கொண்டிருக்கிற நீ வெற்றி பெற வேண்டுமா? தொழிலில் வெற்றி பெற சரியான இலக்கு, அயராத உழைப்பு, நேர்மையான சிந்தனை மற்றும் பக்குவம் ஆகியவற்றை தேர்வு செய்துகொண்டு செயலில் இறங்க வேண்டும்.
வாழ்க்கையை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்கள். போவதற்கு வெகு தூரம் உள்ளது. அதில் நல்ல வழிகள் மட்டுமே இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். கடப்பதற்குக் கடினமான பாதைகளும் வரும். மனம் விட்டு சிரிக்கிற சூழ்நிலை களை பார்த்து வாழ்க்கை முழுவதும் இப்படியே போய்க் கொண்டிருக்கும் என நினைக்காதீர்கள். மனம் கசந்து அழுகிற சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம். ஆகவே, உனது புத்தியைத் தீட்டிக் கொள்.
இன்றைக்கு நீ உனது மனைவி, சின்னஞ்சிறு குழந்தைகள் என இருக்கிறாய். நாளைக்கு அவர்கள் வளர்ந்து உன்னைப் போல ஆவார்கள். அவர்களது தேவைக்கும், நாளை நீ முதிர் வயது அடையும் போது ஏற்படுகிற செலவுகளுக்கும் உன்னை இப்போதே தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவரை உனக்குப் போதிய வருமானம் இல்லை; வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை; கிடைத்த சொற்ப வருமானமும் அன்றாடச் செலவுகளுக்கும், அத்தியாவசியச் செலவுகளுக்குமே சரியாகிவிட்டது. தொடர்ந்து சமாளிக்க படாத பாடு படுகிறாய். என்னை அதற்காகத்தானே அடிக்கடி வந்து சந்திக்கிறாய்?
எப்படியாவது கடன் தீரட்டும், வருமானம் உயரட்டும், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தை நடத்த வழிகாட்டு என வேண்டிக் கொள்கிறாய் அல்லவா? நான் உன் வேண்டுதல்களை கவனத்துடன் செவி மடுத்து இருக்கிறேன். ஆனால் நீ நினைப்பது போல உடனடியாக உயர்வினை உனக்கு என்னால் வழங்க இயலாது.
அப்படியே நான் வழங்கினாலும் அது உனக்கு நிரந்தரமாக நிலைக்காது. கல்லாப் பெட்டியில் உட்காருகிற வேலைக்காரனுக்கு எப்படி கல்லாவிலுள்ள காசு சொந்தமாகாதோ, அப்படியே உனக்கு உடனடியாக வருகிற ஆசீர்வாதமும் சொந்தமாகிவிடாது. அதனால்தான் நான் உனது வேண்டுதலை உடனடியாக நிறைவேற்ற விரும்பாமல் சற்று தாமதிக்கிறேன்.
பணம் நிறைய வரும்போது மனம் அதற்கு ஏற்றவாறு செலவு செய்யவும், தேவையற்ற ஆடம்பர வாழ்க்கை வாழவும் உன்னைத் தள்ளும். தேவையில்லாமல் ஒன்றைப் பெறுவதற்கு உன்னைத் தூண்டி, கடன்பட வைக்கும். கடனைக் கட்டும் போது ஏற்படுகிற இடையூறுகளால் மனம் தளரும்போது, எதை உனக்காக வாங்கினாயோ அதையே உதறிவிடவும் சொல்லிக்கொடுக்கும். நீ அனைத்தையும் இழந்துவிடுவாய். ஆகவே உன்னை பொறுமை காக்குமாறு கூறுகிறேன்.
நீ இப்போது ஏதோ ஒன்றைச் செய்து பொருள் ஈட்டுகிறாய், நல்லது; ஆனால் இது போதாது. மேலும் மேலும் உனது வருமானத்தை பெருக்குவதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டும், அதற்காக முயன்று கொண்டும் இருந்தால் உனக்கு வழி கிடைக்கும். வாய்ப்புகள் உருவாகும். அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் மேலே வந்துவிடலாம்.
Powered by Blogger.