Thursday, August 4, 2016

சாயி தரிசனமே எனக்கு போதி மரம்….


புத்தர் மகானுக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது என்பார்கள். அந்த ஞானம் என்ன?  பேராசையே மனித குலத்தின் துயரத்திற்குக் காரணம் என்று கண்டறிந்ததுதான் அந்த ஞானம்.  சாயி தரிசனம் எனக்கு என்ன போதித்தது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.
வாழ்க்கையில் இன்பம் துன்பம், ஏற்றம் தாழ்வு, பிறப்பு இறப்பு, வறுமை செல்வம் என எது வந்தாலும், எந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும் எதுவும் எனக்குப் பெருந்துன்பத்தைத் தராது. வருவது வந்துதான் தீரும் என்றால், எதைக் கொண்டு இதை மாற்ற முடியும்! நடப்பது நடந்துதான் தீரும். எல்லா காரியங்களுமே நமக்கு முன்னால் விதிக்கப்பட்டவையே என்று அமைதி காத்து பொறுமையோடு இருந்தால் பெரும் மனக்கஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
யாருமே பிறக்கும்போதே எல்லாம் தெரிந்து கொண்டு ஆன்றோராய், சான்றோராய் வாழ்வை வெற்றி கொள்ளும் தீரர்களாகப் பிறப்பதில்லை. நமது வாழ்க்கையில் கற்ற அனுபவங்கள், நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் சொல்லிய அறிவுரைகள், சம காலத் தில் நமக்கு உதாரண புருக்ஷர்களாய் இருப்பவர்கள், நல்ல புத்தகங்கள், பெற்றோரின் வளர்ப்பு முறை, நல்லாசிரியர்களின் வழிகாட்டுதல் இவைதான் ஒரு மனிதனை நல்ல மனிதனாக உருவாக்குகிறது.
ஆகவே, நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் பயன்படுத்தினால் நமக்குப் பெரும்பாலும் நன்மைகளே நடக்கும். இதைத்தான் சாயி வரதராஜனின் எழுத்துக்களிலும் பார்த்தேன். அவருக்குள்ள தெளிவான சிந்தனை, சாயி பக்தர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக எழுதும் எழுத்தாற்றல், தன் அனுபவங்களை எப்படி சாயிபக்திக்கு கொண்டு வந்தது என்ற விவரங்களைப் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது.
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு தோற்ற காலத்தில் சாயியின்பக்தி அவரை எப்படி உயர்த்தியது. சோதனை காலங்களில் எப்படி சாய் நாதர் அவருக்கு அரணாக இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது.
அவர் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தகுதி உடையவராக்கியது அவரது அனுபவப்பாடங்களும், சாயி நாதரின் அருளாசியுமே.
போராட்டமான வாழ்க்கையில் சிறிதளவாவது அமைதி கிடைக்க வேண்டுமானால் கடைப்பிடிக்க வேண்டியவைகளை சாயி தரிசனத்திலிருந்து நான் புரிந்து கொண்டவை என்ன என்பதைப் பற்றி பகிர்ந்;து கொள்கிறேன். கடைப்பிடிக்க நான் முயற்சி செய்கி றேன். நீங்களும் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் சமாதானம் கிடைக்கட்டும்.
அன்பு செலுத்து்
எல்லோரிடமும் அன்பு செலுத்து. அன்பு, பாசம், காதல், பக்தி, நேசம் எல்லாமே அன்பின் வடிவங்களே. அன்பு இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவு போர் என்று எதுவும் வராது. முதலில் குடும்பத்தில் எல்லோ ரிடமும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவோம். பிறகு வெளியே வருவோம்.
பிறரிடம் குற்றம் காண்பதை தவிர்:
பிறரிடம் குற்றம் காண்பதைத் தவிர்த்து அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமே பார்த் தால் கோபம் வராது. யார் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரை அவருடைய நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ள முயற்சிப்போம். காரணம், யாருமே முற்றும் நல்லவர்களும் அல்லர், கெட்டவர்களும் அல்லர்.
கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் வேண்டும்:
யாரும் யாருக்காகவும் மாறத் தேவையில்லை. ஒரு வரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டுப் பேசி னாலே பிரச்சினையில்லா வாழ்க்கையை வாழலாம். வாழ்க்கை மிகவும் அழகானது. நீயா நானா என்று மோதல் இல்லாமல் ஈகோ இல்லமல் வாழ்ந்தால் பேரின்பமே! குழந்தைகள் வளர்ப்பிலும் தாய் தந்தை, குடும்பமே முதலிடம். நாம் எப்படி நடந்து கொள்கி றோமோ அப்படித்தான் குழந்தை வளரும். அன்பு கலந்த கண்டிப்பால் குழந்தையை வழிப் படுத்தலாம்.
தொழிலில் நேர்மை தேவை்
செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் நமக்கு கை கொடுக்கும். நல்லவனாக வாழவேண்டுமா? வல்லவனாக வாழவேண்டுமா என்றால் வல்லமை பொருந்திய நல்லவனாக இருப்பதே வெற்றிக்கு வழி காட்டும்.
கடவுளை நம்பவேண்டும்:
ஆத்மார்த்த நம்பிக்கையோடு கலந்த வேண்டுதல் செவிசாய்க்கப்படும். இதைத்தான் தன் அனுபவங்களாக, அற்புதங்களாக சாய் பக்தர்கள் உணர்ந்து இருக்கிறோம். சாயி யாரையும் கைவிடுவது இல்லை. ஆனால் நமது நம்பிக்கையின் எல்லைவரை கொண்டு சென்று ஜெயிக்க வைப்பார்.
சேலத்தில் வாழ்கிற நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் நிறைய அற்புதங்களை கண்டுள்ளோம். தோல்விகளும் நட்டங்களும் வரும் போது கட்டாயம் துவண்டுதானே போவோம். ஆனால் எங்களுக்கு பாபா புகட்டிய பாடம் என்ன தெரியுமா?
தோல்விகளும் நஷ்டங்களும் அப்போதைக்கு மன வருத்தம் வேதனைகளை தரும். ஆனால் அந்தச் சமயத்தில் இதுவும் கடந்து போகும் என்று சமாதானமடைந்தால் ஒரு சிறு கால இடைவெளியிலே அந்த நஷ்டம் பிற்காலத்தில் வரவிருந்த பெரிய நஷ்டத்தை தவிர்த்திருக்கிறது என்பது புரியும்.
எனது கணவர் பி.டபள்யூ.டி காண்டிராக்டர். ஒரு பி.டபள்யூ.டி. வேலையை எடுக்க முதலில் டெண்டர் போடுவோம். யாருடைய டென்டர் தொகை குறை வாக உள்ளதோ அவர்களுக்கே அந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். மிகக் குறைவான தொகை வித்தியாசத்தில் அந்த வேலை வேறு ஒருவருக்குப் போய் விடும். அப்போது வீடே சோகமாகிவிடும். ஆனால் ஆறு மாத காலத்திற்குப் பிறகு பார்த்தால் அந்த வேலையை எடுத்திருந்தால் பெரும் சிக்கலில் சிக்கி பெரு நட்டத்திற்கு ஆளாகியிருப்போம் என்பதை அந்த வேலையை எடுத்து சிக்கியவரைப் பார்த்து தெரிந்துகொள்வோம்..
இது மாதிரி நிறைய அனுபவங்களைப் பார்த்த பிறகு தான் கடவுளின் திருவிளையாடல் புரிந்தது. இப்படி நிறைய காரியங்கள் எல்லா காலத்திலும் நாங்கள் சாயியின் உத்தரவு கேட்ட பின்னரே தொழில் செய்ய முனைவோம். ஆகவே, இன்பம் துன்பம் எது வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற பக்குவத்தோடு இருந்தால் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறலாம்.
எப்போதும் பாசிடிவ்வாகவே எண்ண வேண்டும். அந்த நல்ல எண்ண அலைகள்தான் நம்மை வழிப் படுத்தும். இதையெல்லாம் சாயி தரிசனம் மூலமாக அனுபவமாகப் பெற்று பின்பற்றுபவை.
சாயி தரிசனம் புத்தகம் வந்தால் முதலில் நான் படிப்பது சாய் அப்பா எழுதும் கடிதங்களைத்தான். குழம்பிய மனதில் எழும் வினாக்களுக்கு விடை இருக்கும். நான் படித்தால் என் மனநிலைக்கு ஏற்ற பதிலாய் இருக்கும். நீங்கள் படித்தால் உங்கள் மன நிலைக்கு ஏற்ற பதிலாகவும் இருக்கும்.
எங்கள் வீட்டிற்கு யாராவது வந்துகொண்டே இருப்பார்கள். மனம் வருந்தி பேசும்போது சாயி தரிசனம் புத்தகத்தை அவர்கள் கையில் கொடுத்து உங்கள் கேள்விகளுக்கு இப்போது நீங்கள் இருக்கும் மன நிலைக்கு இந்தப் புத்தகத்தில் பதில் இருக்கும் படியுங்கள் என வாழ்த்தி அனுப்புவேன்.
அவர்கள் வீட்டிற்குச் சென்றதும் படித்துவிட்டு, அம்மா, சாய் அப்பாவைப் படித்ததும் குழம்பியிருந்த எனது மனது தெளிந்த நீரோடை போலாகிவிட்டது. வீணாகக் குழம்பித் தவித்துப் போனேன் என்பர்.
நிறைய சமயங்களில், சாயி வரதராஜனால் எப்படி இது போல எல்லோருடைய மனங்களையும் படம் பிடித்து பதில் சொல்லி ஆற்றுப் படுத்தும் விதமாக எழுத முடிகிறது. இந்த வல்லமைமைய அளித்த பாபாவுக்கே நன்றி சொல்லவேண்டும்.
சாயி தரிசனத்தை படிப்பதோடு நிறுத்திவிடாதீர். எழுதியவற்றை உள்வாங்கி வாழ்க்கையிலும் கடைப் பிடித்து அமைதி பெறுங்கள். ஆனந்தமான வாழ்வை பாபா உங்களுக்கு அருள்வார்.  வாழ்க்கை அழகானது. வாழ்க்கை வாழ்வதற்கே. வாழும்போது சோதனைகள் வரத்தான் செய்யும்.
விதியை வென்றவர் யார்?
சோதனைகளையெல்லாம் சாதனைகளாய் மாற்றி, வெற்றிப்படிகளில் நடந்து, பிறர் பாராட்டும்படி வாழ உங்கள் அனைவருக்கும் சாயி நாதரின் அருளை வேண்டுகிறோம்.
வாழ்க வளமுடன்!
ஜெய் சாய் ராம்.


வசந்தா சண்முகம், சேலம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...