Monday, August 1, 2016

தாத்யா சாகிப் நூல்கர்

பாபாமீது அன்பு செலுத்தி அவருக்காக வாழ்வைத் தியாகம் செய்த பக்தர்கள் யாவரும் மெத்தப் படித்தவர்கள், உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள், மேன்மக்கள்.
பாபா, எப்படி இத்தனை பேரை தன்னிடம் ஈர்த்துக் கொண்டார் என்று பார்த்தால் அவரிடம் சுயநலம் இல்லை. உடம்பு பெற்ற பிள்ளைகள் இல்லை. ஆகவே, அனைவரையும் ஒன்று போலப் பார்த்தார். கிடைத்ததை சமமாகப் பங்கிட்டார். தன்னை வெறுப்பவரையும் நேசித்தார். ஆகவே, அவரை விட்டுப் பிரிய முடியாமல் அவர்கள் தங்கள் இறுதி நாட்களை அவருடன் கழித்தார்கள்.
அவர்களுள் ஒருவர் தாத்யா சாகிப் நூல்கர். நூல்கர் ஜல்கான் என்ற இடத்தைச் சேர்ந்தவர்.  பூனாவில் படித்தவர். பண்டரிபுரத்தில் பணி செய்து ஓய்வு பெற்று கடைசி காலத்தை கழிப்பதற்காக சீரடிக்கு வந்துவிட்டார். ஓய்வு பெற்றபோது வயது சுமார் 46 இருக்கலாம். ஏனெனில் 48 வயதில் இவர் மரணமடைந்தார். இவர் மரணம் அடைந்த போது மசூதியின் பின்னே ஒரு நட்சத்திரம் விழுந்து விட்டது என துக்கித்தார் பாபா. இவரது ஆன்ம அனுபவம், அறிவு முதிர்ச்சி ஆகியவற்றை எடைபோட்டு இவரை கிழவன் என்றே பாபா அழைப்பார்.
சீரடி அனுபவங்களை நானாவுக்குக் கடிதங்களாக எழுதும் பழக்கத்தை வைத்திருந்தார் நூல்கர். அந்தக்கடிதங்களில் ஒன்றிலிருந்து சில பகுதி பாபாஸ் ரிணானு பந்த் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் நூல்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
வெள்ளிக்கிழமை துவாரகாமாயி சென்றேன்.  அங்கு அமிர்த் பாயியுடன் உட்கார்ந்துகொண்டிருந்த பாபா சில்லிமில் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.  இந்த புகையிலை மிகவும் கசக்கிறது என்றார். இதைக்கேட்டதும் சமீபத்தில் எனக்கு வந்த தரமான எகிப்திய புகையிலையை பாபாவுக்குத் தர நினைத்தேன்.
பாபா நல்ல புகையிலை சிலவற்றை தரட்டுமா?என் கேட்டேன். பாபா சரி என்றதும், எடுத்து வந்து கொடுத்தேன். அதைப் பிரித்துப் பார்த்து புகழ்ந்தார்.
அமிர்த் பாய் உடனடியாக சில்லிமை நிரப்பினார். இது கிழவனுக்குத்தான் உபயோகமாக இருக்கும். நமக்கு இந்த காரப் புகையிலையே போதுமானது என்றார்.
அன்றைய தினம் மும்பையிலிருந்து தரமான மாம்பழங்கள் வந்திருந்தன. பாபாவுக்கு மாம்பழச்சாறை நைவேத்தியமாக சமர்ப்பிக்க தாத்யா பாடீல் விரும்பினார். ஆனால் ஒரு சில மட்டுமே மீதமாயிருந்தது.
பாபாவிடம் மானசீகமாக, மாம்பழம் வேண்டும் என்று வேண்டினேன். சற்று நேரத்தில் சாமா வந்தார்.
அவரிடம்,  சாமா, இன்று நிறைய மாம்பழங்களை வாங்கி நிறைய சாறு பிழிந்து தரவேண்டும். வயிறு முட்டக் குடிக்கப் போகிறேன் என்று பாபா கூறினார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு மாம்பழ வியாபாரி வந்தான்.  அவனிடம் கூடை நிறைய நல்ல பழங்களை வாங்கி நிறைய சாறு எடுத்து பாபாவுக்கு சமர்ப்பித்தோம்.
அந்த வாரம் ஞாயிறு அன்று கூடையில் ஏதேனும் பழம் இருக்குமா எனத் தேடினேன். ஒரு பழம் இருந்தது. இதை சாறு பிழிந்து கொண்டு வா என மனைவிடம் கொடுத்தேன்.
கூடையில் நான்கு மட்டும் நன்றாக இருக்கிறது என்றாள்.
தரமானதை நைவேத்தியம் செய்ய சுத்தம் செய்யுமாறுச்சொன்னேன். சற்று நேரத்தில் பாபா என்னிடம் அப்பா கோதே பாடீலை அனுப்பி, தனக்கு இரண்டு மாம்பழங்கள் வேண்டும் எனக் கேட்டிருந்தார். என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
தாத்யா சாகிப் நூல்கர் மாம்பழத்தைக் கொடுத்துவிட்டு, அப்பா கோதே விடம், பாபா சாப்பிட்டு மிஞ்சியிருக்கும் ஒரு துண்டை எனக்குப் பிரசாதமாக எடுத்து வரக் கூறினேன்.
பாபா ஒரு பழத்தை வெட்டி சாப்பிட்டார். இன்னொன்றை துண்டுகளாக்கி சாமா உட்பட பலருக்குக் கொடுத்தார். கடைசித் துண்டை கையில் எடுத்து, நாமே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டோம். அந்த கிழவனுக்கு ஒரு துண்டாவது தர வேண்டாமா? எனக் கேட்டார். அப்போதுதான் அப்பா கோதேவுக்கு நான் சொன்னது நினைவுக்கு வந்திருக்கிறது. அவர் பாபாவிடம் இதைப் பற்றிக் கூறி எனக்காக அதைப் பெற்றுவந்து தந்தார்.
இதேபோல் தாத்யா சாகிப் சீரா செய்து பாபாவுக்கு சமர்ப்பித்தார். அப்போது பாபாவின் முன்னால் மாம்பழக் கூடை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதை தாத்யாவிடம் கொடுத்து, இதை கிழவனிடம் கொண்டு போய் கொடு. நாளைக்கும் நாளை மறுநாளைக்கும் அவர் இதை சாப்பிடட்டும் எனக் கூறி எடுத்து வைத்திருந்தார்.
புதிதாக கட்டப்பட்ட சாவடியில் தங்குவதற்காக சென்ற போது, அங்கு வந்த பாபா எங்களிடம், போய் தீட்சித் வாடாவில் தங்குமாறு கூறினார். அங்கே குதிரைகள் கட்டப்பட்டிருந்தன.
குதிரைகளின் சிறுநீரால் அவ்விடமே சேறும் சகதியுமாக இருந்தது. குப்பைக் கூளங்களுக்கும் பஞ்சம் இல்லை. இந்த இடத்திலா படுத்துக் கொள்ளப் போகிறீர்கள், வேண்டாம், சாவடியில் படுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி விட்டு மசூதிக்குச் சென்றார்.
அவர் தாத்யா காதுகளில் கூறியது எனக்கும் கேட்டது. இந்த இடம் ஈரமும் ஓதமுமாக உள்ளது. வாடாவில் தங்க வேண்டாம். சாவடியில் தங்கிக் கொள்ளுங்கள். நாளைக்கு வேண்டுமானால் வாடாவுக்குப் போகலாம் என்றார். என் மீது பாபாவுக்குத் தான் எத்தனை அன்பு! என எழுதியிருக்கிறார்.
தாத்யா நூல்கரும் டாக்டர் பண்டிட்டும் உறவினர்கள். இவர்கள் இருவரும் போட்டி போட்டு பக்தி செலுத்தினார்கள். பண்டிட்தான் பாபாவின் நெற்றி யில் சந்தனத்தைப் பூசியவர்.
அவருடைய தூய்மையான பிராமண குருவை கந்தல் உடையும் அழுக்குக் கோலமுமாக இருந்த சாயியிடம் கண்டபோது இதைச் செய்தார். மகான் களிடையே வேறுபாடு இல்லை என்பதை பாபா போதிக்க இந்த லீலையைச் செய்தார்.
இவர் சாயியின் நெற்றியில் திரிபுண்டரம் வரைந்துவிட்டார். மூன்று கோடுகள் எதற்காக இடப் படுகின்றன என்றால், நம்மிடம் உள்ள தாமசம், ராஜசம், சத்வம் என்ற முக்குணங்களும் ஒன்றும் இல்லாமல் போக இறைவன் அருளவேண்டும் என வேண்டவே நெற்றியில் இடப்படுகிறது. சத்குரு நெற்றியில் விபூதிக் கோடுகள் இடும்போது, அவர் அதை ஏற்று முக் குண தோங்களை அழித்துவிடுகிறார்.
ஒருமுறை பண்டரிபுரத்தில் நூல்கரின் உறவினர் குழந்தை கடுமையாக நோய் வாய்ப்பட்டது. அவர்களது குருவான காகா புரானிக் என்பவர் உதியைக் கொடுத்தனுப்பினார். நம்பிக்கையில்லாமலே அந்த உதி தரப்பட்டது. ஆனால் குழந்தை பிழைத்துக் கொண்டது. அப்போது காகா புரானிக் நூல்கரை அழைத்து நான்கு ரூபாயைக் கையில் கொடுத்து உனது நான்கு சகோதரர்களைக் கொன்றுவிட்டேன் என்று கூறினார்.
இதுபற்றியும் நானாவுக்கு நூல்கர் 1909-ல் ஒரு கடிதம் எழுதி யிருந்தார். காகாபுரானிக் குறிப்பிட்ட நான்கு சகோதரர் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவை. இவை ஒரு பக்தனின் பக்தியை சிதைத்து விடும். ஆகவே இவற்றை அழிக்க ஒரு குருவை சரணடைய வேண்டிய அவசியத்தையும்  குறிப்பிட்டார் எனக் கூறியிருக்கிறார்.
பக்தர் பாபாவை அணுகுவது அவரிடமிருந்து பொன்னையும் பொருளையும் மற்ற உலக வியங்களையும் கேட்டுப் பெறுவதற்காக மட்டுமல்ல, மேலான ஆன்மீக ஞானத்தைப் பெறவும் செல்லவேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...